Wednesday, June 10, 2015

Pulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( சிறந்த திரைக்கதை ஆஸ்கார் விருது)

நான்கு கதைகள். முதலாளி பணித்ததால் ஒரு பெட்டியைத் தேடும் இரு கொலைகாரக் கூலிகள். விடுதியைக் கொள்ளையிட வரும் இரு காதலர்கள். குத்துச் சண்டையில் தோற்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு எதிரியை ஜெயித்து (கொன்று) பணத்துடன் உயிருக்கு பயந்து காதலியுடன் ஓடும் ஒருவன். இப்படி நான்கு கதைகள்.
உலக சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ படத்தின் சாகஸத் திரைக்கதையை எழுதி, இயக்கியவர் க்வென்டின் டாரன்டினோ. கறுப்பு நகைச்சுவை, நியோ நாய்ர் வகை என்றெல்லாம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்று, விருதுகள், வசூல் என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்த கில்லி இது.

தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகிர்தண்டா’ படங்கள் டாரன்டினோ தாக்கத்தினால் ரசிகர்களுக்கு கிடைத்த பரிசுகள். 1994-ல் வெளிவந்த இப்படம் இன்றும் பார்ப்பதற்குப் புதிதாக இருக்கிறது. பார்வையாளனை வசீகரம் செய்ய எந்தத் தகிடுதத்தமும் செய்ய வேண்டாம். நன்றாகக் கதை சொன்னால் போதும் என்கிற எண்ணம்தான் மேலிடுகிறது.
கதைக்களன் புதிதல்ல. குற்றம் புரியும் மனிதர்கள். விளிம்பு வாழ்க்கை. இருட்டு உலகம். அதன் மாயக் கவர்ச்சி. அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அவர்களின் வாழ்க்கையும் அதன் கதைப் புனைவுகளும் பார்வையாளனுக்கு ஒரு கிளர்ச்சி நிலையை ஏற்படுத்தி அதைப் படம் முழுதும் தக்கவைக்கிறது.
நடப்பவை அனைத்தும் அதீதங்கள். ஆனால் அனைத்தும் இயல்பாக நடக்கின்றன. அதன் இயல்பும் சாதாரணத் தன்மையும் நம்மைப் புரட்டிப் போடுகின்றன. ஒரு இசைக் கலைஞன் வாசிப்பது போல, ஒரு விற்பனைக்காரன் பண்டம் விற்பதுபோல அனைவரும் தேர்ச்சியாகக் குற்றம் புரிகிறார்கள்.
நமக்கோ இந்தத் திரைப்படம் ஒரு அனுபவமாக மாறுகிறது. இந்த அனுபவத்திற்கு வலு சேர்ப்பவை அற்புதமான திரைக்கதை, படத்தொகுப்பு, இசை, ஒளி அமைப்பு, அளவான நடிப்பு.
படத்தின் முக்கியப் பெண் பாத்திரம் உமா துர்மன். படத்திற்கு கதாநாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. உமா துர்மன் பாத்திரம் தாதாவின் இளம் மனைவி பாத்திரம். கணவனின் கையாளுடன் பார்ட்டிக்குப் போய் ஆடி வந்து, அவன் வைத்திருந்த ஹெராயின் பொட்டலத்தை உறிஞ்சி நுரை தள்ளி சாவைக் கிட்டத்தட்ட தொடும் கட்டம் அற்புதமான படமாக்கம்.
தன்னைத் தாக்க வரும் தாதா ஒரு ஓரின வன்புணர்வில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்கையில் அவர்கள் உறவுகள் மாறிப்போகின்றன. தத்துவ விசாரமும் கடவுள் தேடலும் கொண்ட அடியாள் பைபிள் வாசகம் சொல்லிக் கொல்வதும், கடைசியில் அதே வாசகத்தின் பொருளை உணர்ந்து பணம் பறிக்க வரும் காதலர்களை மன்னித்து அனுப்புதலும் கவித்துவம். தன் கடைசிக் கடமையையும் செவ்வனே செய்து முடித்த பின் குற்ற வாழ்க்கையிலிருந்து மீள்தல் அவனை ஒரு கர்ம யோகியாக காட்டுகிறது. அவரவர் தேர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப அவரவர் கதைகள் முடிகின்றன.
படத்தில் அனைவரும் பச்சை பச்சையாகக் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியல் சூழலுக்குப் பொருந்தி வருவதால் அது உறுத்தவில்லை. அதே போல குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை, வன்புணர்ச்சி காட்சிகள் உள்ளன. குற்ற வாழ்க்கையை இயல்பாகச் சித்தரிக்கும் கதைப் போக்கு நிச்சயம் இளம் மனங்களில் வாழ்க்கை மீறல்களை சகஜப்படுத்தும். அதனால் நிச்சயம் இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம். இது ஒரு சிறு சாராரின் உப கலாசாரம். அது அழகாகவும் மிக நியாயமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. அதன் அடையாளம்தான் இந்தப் படத்தின் வெற்றி.
தொடர்புக்கு:[email protected]

நன்றி - த இந்து

0 comments: