போஸ் யாகின் இயக்கிய சாகசப் படம் மேக்ஸ். சிறந்த திரைக்கதையாசிரியரான இவர் படத்தின் திரைக்கதையிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.
படத்தின் முக்கியக் கதாபாத்திரம் நாயகனின் நண்பனாக வரும் ‘மேக்ஸ்’ என்னும் நாய்தான். பயிற்சி பெற்ற ராணுவ நாயின் துடுக்கான, புத்திசாலித்தனமான செயல்கள் படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளன. பாசம், சோகம் போன்ற குடும்பம் சார்ந்த சம்பவங்களைக் கொண்ட படம் என்றாலும் சாகசங்களுக்கும் குறைவில்லை. வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ், எம்.ஜி.எம்., சன்ஸ்வெப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த படம் இது.
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க ராணுவ வீரரான மரைன் கைல் வின்காட்டுக்கு மேக்ஸ் உதவியாக உள்ளது. ஆனால், ஒரு நாள் நிகழ்ந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தால் வின்காட் உயிரிழக்கிறான். எஜமானின் பிரிவால் சோர்ந்துபோன மேக்ஸ் ராணுவ சேவையாற்ற முடியாமல் தவிக்கிறது. கைல் குடும்பத்தினரிடம் வந்துசேர்கிறது மேக்ஸ். அதைப் பராமரிக்கும் பொறுப்பு வின்காட்டின் சகோதரனான ஜஸ்டினிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அவனுக்கு நாயைப் பராமரிக்க ஆர்வமில்லை என்றபோதும் தன் சகோதரனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்தது மேக்ஸ் மட்டும்தான் என்பதால் அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். நாட்கள் செல்லச் செல்ல மேக்ஸுக்கும் ஜஸ்டினுக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது.
இதன் மூலம் வின்காட் உயிரிழந்ததன் பின்னணியில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கிறார்கள் இருவரும். இந்தப் பயணம் சாகசங்களையும் எதிர்பாராத சம்பவங்களையும் உள்ளடக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஜோஸ் விக்கின்ஸ், தேஜான் லாக்வேக், தாமஸ் ஹேடன் சர்ச், ராபி அமெல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அமெரிக்காவில் கடந்த ஜனவரியிலேயே வெளியாகவிருந்தது. பின்னர் தேதி தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 26-ல் வெளியாகிறது. மேக்ஸின் அட்டகாசமான நடிப்பைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பு பொய்க்காது என்பது டிரெயிலரைப் பார்த்தால் தோன்றுகிறது.
thanx - the hindu
0 comments:
Post a Comment