கடந்த சில ஆண்டுகளாக சினிமா ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த சிம்பு, தற்போது மீண்டும் சிலிர்த்தெழுந்துள்ளார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, அமீரின் இயக்கத்தில் ஒரு படம் என்று திரையரங்கில் சரவெடி வெடிக்க தயாராக இருக்கிறார். தொடர் படப்பிடிப்புகளுக்கு நடுவில் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் சிம்புவை சந்தித்தோம்.
இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா?
ஒரு கஷ்டமும் இல்லை. இதற்கு முன்பும் நான் இப்படி தொடர்ச்சியாக நடித்தவன்தானே? இந்த ஓய்வும் நானாக தேடிக்கொண்டதல்ல. அதுவாகவே அமைந்தது. இப்போது மீண்டும் பரபரப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. எப்போதுமே வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுவதுதான் என் வழக்கம். கடந்த 2 வருடங்களில் எதுவுமே இல்லாத வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். இப்போது காலையில் கெளதம் மேனனின் படம், இரவு செல்வராகவனின் படம் என்று பரபரப்பாக வாழ்க்கை நகர்கிறது. இதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
‘படையப்பா’ படத்தின் பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ஒரு வரி வரும். அதேபோல இப்போது நான் வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு படத்தின் பலனும் விரைவில் திரையில் தெரியும்.
‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் பட்ட பல கஷ்டங்களைச் சொல்லி வருத்தப்பட்டீர்கள். அதைக் கேட்டு வீட்டில் என்ன கூறினார்கள்?
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சந்தானத்துக்காக கலந்துகொண்டேன். எந்தவொரு நிகழ்ச்சியிலும் என்ன பேச வேண்டும் என்று தயார் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. என் மனதில் பட்டதை பேசுவேன். அந்த நிகழ்ச்சியிலும் என் மனதுக்குப் பட்டதைப் பேசினேன். கடந்த இரண்டரை வருடங்களில் நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினேன்.
சாதாரண மக்களைப் போல் என்னால் கடற்கரை, ஸ்பென்சர், சத்யம் சினிமாஸ் என்று சுற்ற முடியுமா? 700 நாட்கள் சும்மாவே 4 சுவர்களுக்குள் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களை எப்படி கடந்து வந்தேன் என்பதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் பேசினேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு வருத்தப்பட்டார்கள். “ஏன் இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறாய்? உனக்கு என்ன இல்லை” என்று கேட்டார்கள். அவ்வளவுதான்.
இந்த இருண்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது என் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல “ப்ரோ.. இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காதீங்க. சனிக்கிழமையாவது வெளியே வாங்க” என்று திட்டி வெளியே கூட்டிக்கொண்டு போனது அனிருத்தான்.
நீங்கள் எப்போதுமே படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாக சொல்கிறார்களே?
நான் லேட்டாக போகிறேன் என்றால் நான் நடித்து இத்தனை படங்கள் எப்படி வெளியானது. அப்படிச் சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். சிம்பு தாமதமாக வருவார் என்று சொல்லும் இயக்குநர்களிடம், சிம்பு எத்தனை மணிக்கு கிளம்புவார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். சில நாட்கள் நான் தாமதமாக சென்றாலும், முழுக் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திரும்பியிருக்கிறேன். லேட்டாக வந்துவிட்டு 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று நான் சொன்னதில்லை.
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘கான்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன். நீங்கள் இதுவரை பார்த்த செல்வராகவன் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லவா.. இதுவரை நீங்கள் ஹீரோக்களை உருவாக்கிய செல்வராகவன் படங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது முதல் முறையாக செல்வராகவன் ஒரு ஹீரோவுக்காக படம் பண்ணுகிறார். இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் என்ன பிரச்சினை. ஏன் இந்த தாமதம்?
‘வாலு’ படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் பிரச்சினையில் இருக்கும் போது, அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது முறையல்ல. நிறைய படங்கள் அதேபோல நிற்கிறது. ‘வாலு’ படத்தை நானே வாங்கி பிரச்சினைகளை முடித்துள்ளேன். இப்படம் வெளியானவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதுதான் உண்மை. படத்தின் 2 பாடல் காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி படம் தயார். ‘வாலு’வைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ வெளியாகும். இரண்டுமே எனக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவுள்ள ‘வாலு’ படம் எப்படி இருக்கும்?
நிறைய கமர்ஷியல் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ, வில்லனை ஏன் அடிக்கிறான் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த பலம் ‘வாலு’வில் மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் நாயகனாக நடித்த படம் 3 வருடங்கள் கழித்து வெளியாகிறது. என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ‘வாலு’ படத்தில் இருக்கும். இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் போலவே இருக்காது. இப்படம் வெளியானதும் அதன் இயக்குநர் விஜய் சந்தர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக உருவெடுப்பார்.
மீண்டும் காதலில் விழும் திட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் காதலிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கானவளை நான் பார்க்கும்போது மீண்டும் காதலில் விழலாம்.
எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?
முதலில் காதலைப் பற்றிக் கேட்டீர்கள். இப்போது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கும் தெரியாது என்பதுதான் என் பதில். இப்போது இருக்கும் சமூக சூழ்நிலைகளைப் பார்க்கும்போது கல்யாணம் அவ்வளவு எளிது அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது கஷ்டம். எனக்காக ஒரு பெண் வந்து, இருவரும் முழுமையாக புரிந்துகொள்ளும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் என் கல்யாணம் நடக்கும்.
இவ்வளவு வெளிப்படையாக பேசும் நீங்கள் உங்களைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுப்பதில்லை?
உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். பொய்க்கு விளக்கம் கொடுத்தால், அந்தப் பொய் உண்மையாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், பிறகு நான் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டிவரும். மேலும் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் சிம்பு கெட்டவனாகி விடுவான்.
என்னை பொறுத்தவரை எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் செய்தாலே போதும். என்னை நம்பி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தாலே போதும்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment