சென்னை,ஜூன் 04 (டி.என்.எஸ்) ஈரானிய திரைப்படங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் திரைப்படங்களைப் பற்றி வியந்து பேசி வந்த, தமிழ் திரையுலகினரும், ரசிகர்களுடம் இனி தமிழ் படங்களையும் வியப்பாக பேசும் விதத்தில் உள்ளது 'காக்கா முட்டை'.
சென்னை குடிசைப் பகுதியில் வாழும் சகோதர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ். இவர்களுடைய அப்பா சிறையில் இருக்க, அம்மா மற்றும் பாட்டியுடன் வாழும், இவர்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக இவர்களுடைய முயற்சியும், இறுதியில் இவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
கதை, இரண்டு வரியாக இருந்தாலும், அதை இயக்குனர் மணிகண்டன் படமாக்கியிருக்கும் விதம், திருக்குறளைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இப்படி பட்ட இடங்களில் எப்படி படப்பிடிப்பை நடத்தினார்கள்! என்று வியக்கும் அளவுக்கு, ஒவ்வொரு காட்சிகளும், அதன் பின்புலமும் இயல்பை மீறாமல் உள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரது இயல்பான நடிப்பும், எக்ஷ்பிரெஷனும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
தெரு நாயை ரூ.25 ஆயிரத்திற்கு விற்பது, புது துணி வாங்குவதற்காக கடைக்கு செல்வது, அந்த கடையைப் பார்த்ததும், தங்களது நிலையை உணர்வது, என்று அத்தனை காட்சிகளிலும் இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை விட, வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இளம் நாயகியான ஐஸ்வர்யா, இந்த படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக, மேக்-அப் மூலம், தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா, தனது சினிமா வாழ்க்கையில், இந்த படத்தை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ரமேஷ் மற்றும் யோகி பாபுவின், காமெடிக் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், சிறுவர்கள் அடி வாங்கிய, வீடியோவை வைத்து பணம் வாங்கும் போது, அதே வீடியோ தொலைகாட்சி செய்தியில் ஒளிபரப்பாகும் காட்சியில், மொத்த திரையரங்கமே அதிர்கிறது.
இசை இருக்கிறது, என்பதே தெரியாத அளவுக்கு, காட்சிகளின் தன்மையை புரிந்து பின்னணி இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு சபாஷ்.
இயக்குனர் மணிகண்டன், தான் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். நாம், படம் பார்க்கிறோம், என்ற உணர்வே ஏற்படாத வகையில், அத்தனை காட்சிகளும் நம்மை இயல்பாக கடந்து செல்கிறது.
சிறிய வீடு, அதிலேயே சமையல் அறை, அதன் அருகில் பாத்ரூம் என்று, அந்த வீட்டியின் இயல்பு நிலையை அப்படியே படமாக்கியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடியும், வரை ''நான் சின்ன காக்கா முட்டை, அவன் பெரிய காக்கா முட்டை'' என்று சொல்லும் சிறுவர்கள், இறுதி வரை தங்களது நிஜ பெயரை சொல்லாமலே இருப்பது ரசிக்க வைக்கிறது.
தேசிய விருது வாங்கிய படம் என்றாலே, நமது ரசிகர்கள் தலை சொரிவார்கள். ஆனால், இந்த காக்கா முட்டை, அப்படி இல்லாமல், அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய அளவுக்கு இயல்பு நிலையை மீறாமல், அதே சமயம் ரசிக்க கூடிய அளவுக்கு நகைச்சுவையாகவும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
பீட்சா வாங்குவதற்காக சிறுவர்கள் பணம் சேர்ப்பது, பணம் சேர்த்தும் அவர்களால் பீட்சா வாங்க முடியாமல் போவது, மீண்டும் அதற்காக பயணிப்பது என்று சுவாரஸ்யமாக நகரும் படம், இரண்டாம் பாதியில், காவல் துறை அதிகாரி, எம்.எல்.ஏ, பீட்சா கடை முதலாளி உள்ளிட்டோர், சிறுவர்களை தேடும் போது, என்ன நடக்கும்! என்ற பரபரப்பு தொற்றிக்கொள்ள, இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத படி படத்தை முடித்துள்ள இயக்குனர் மணிகண்டனுக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.
ஜெ.சுகுமார்
நன்றி
http://tamil.chennaionline.com/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=f7a3e33f-b455-4fd8-8d1a-3e70b9337784&CATEGORYNAME=Rview
0 comments:
Post a Comment