Wednesday, June 24, 2015

அஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்த் மீனாட்சி (மியூச்சுவல் ஃபண்ட்)

எளிமைதான் எத்தனை வசீகரமானது. முதலீட்டுத் திட்டங்கள் என்று வரும் போது வங்கிகளில் சென்று வாங்கும் வைப்பு நிதிகளைப் போல ஒரு எளிமையான சாதனம் எதுவும் இல்லை. இந்த எளிமையின் ஆதாரம் என்ன? ஒரு முதலீட்டாளர் எந்த ஒரு சிக்கலான தேர்வும் செய்யத் தேவையில்லை. கத்திரிக்காய் கிலோ என்ன விலை என்பது போல, இத்தனை மாதங்களுக்கு எத்தனை வட்டி என்று விசாரித்து விட்டு, பணத்தைக் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாய் வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
திட்டங்கள் ஏராளம்
ரிஸ்க் சார்ந்த முதலீட்டுச் சாதனங் களில் அந்த எளிமை இல்லைதான். ஆனால், அதற்கு ஈடாக லாப சாத்தியம் அதிகம், குறிப்பாக நீண்ட கால திட்டங்களில். இதனால்தான் அவற்றை ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சரி என்று முன் வருபவர்களுக்கும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற தேர்வு சற்று மலைக்கத்தான் வைக்கிறது. சந்தையில் இருக்கும் சுமார் ஆயிரம் திட்டங்களில் நல்லவை எவை?
சென்ற வாரத்தில் ஆரம்ப கால நிர்ணயத்தோடு கூடிய நிதித்திட்டத்தை உருவாக்கி அதில் எவ்வளவு முதலீடு செய்வது (மாதாந் திர அளவில்) என்பதை பார்த்தோம். இன்று அந்த மாதாந்திர முதலீட்டினை எந்த திட்டங் களில் முதலீடு செய்வது என்பதைக் காண்போம்.
ஐந்து திட்டங்கள்
நான் இன்று பரிந்துரைக்கப் போகும் ஐந்து திட்டங்கள் நல்ல, சிறப்பான திட்டங்கள். இவற்றை நிறைய கணித ஆய்வுகளுக்குப் பின்னரும், இவற்றின் பல வருடத்திய செயல்பாடுகளை கூர்ந்து நோக்கிய பின்னும் தேர்வு செய்திருக்கிறோம். இருப்பினும் இவற்றையே பரஸ்பர நிதிச் சந்தையின் ஆகச் சிறந்த திட்டங்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட திட்டங்கள்தாம் நமக்குத் தேவை என்ற அவசியமும் இல்லை. நான் இந்தக் கட்டுரையில் விளக்கும் விதத்தில் இத்திட்டங்களில் உங்கள் முதலீடுகளைத் துவங்கி விட்டு, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்து வந்தால் போதுமானது.
டாடா பேலன்ஸ்டு திட்டம்
முதல் திட்டம் டாடா பரஸ்பர நிதி நிறுவனத்திடம் அளிக்கும் டாடா பேலன்ஸ்டு திட்டம். இதை ஒரு பல்கலைத் திட்டம் என்று சொல்லலாம். இத்திட்டம் பங்குச் சந்தையில் முக்கால் பங்கும், கடன் சந்தையில் கால் பங்கும் முதலீடு செய்யும் திட்டம்.
நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தை முதலீடுகளே அதிக லாபம் தரும் என்றாலும் கூட, அதில் முக்கால் பங்கே முதலீடு செய்யும் இந்தத் திட்டம், முழு பங்குச் சந்தைத் திட்டங்களுக்கு நிகராக லாபம் கொடுத்திருக்கிறது. அதாவது, குறைவான ரிஸ்க் எடுத்தும் கூட, நிறைவான லாபம் கொடுத்திருக்கும் திட்டம்.
சுமார் பத்தொன்பது ஆண்டு களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இத்திட்டம் இத்தகைய கலப்புத் திட்டங்களிடையே முதன்மையானது என்று சொல்லலாம். அது போல மற்றும் ரகுபதி ஆச்சார்யா ஆகியோர் இத்திட்டத்தின் நிர்வாகிகள்.
யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ்
2-வது திட்டம் யூடிஐ நிறுவனத்திட மிருந்து வரும் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்ற திட்டம். இது ஒரு முழுமையான பங்குச் சந்தைத் திட்டம். அனூப் பாஸ்கர் என்ற தேர்ந்த நிபுணரால் பராமரிக்கப்படும் இந்த பத்து வருடப் பாரம்பரியத் திட்டத்தில், பெரும் நிறுவனங்களில் அதிகம் முதலீடுகள் செய்யப்படுகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தை மேலிருந்து நோக்கி எத்தகைய துறைகள் மேல் நோக்கி இருக்கின்றன என்று கண்டறிந்து அத்துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதே இந்தத் திட்டத்தின் சிறப்பு. பெரிய நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்வதால், திட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் சற்று குறைவாக இருக்கும்.
ப்ரைமா ப்ளஸ் திட்டம்
3-வது திட்டம் ஃப்ராங்க்ளின் இந்தியா நிறுவனத்தின் ப்ரைமா ப்ளஸ் திட்டம். ஃப்பராங்க்ளின் பரஸ்பர நிதித் திட்டங்கள் இந்திய தனியார் திட்டங்களில் மிகவும் பழமையானவை. நீண்டு நிலைத்து முதலீட்டாளர்களிடம் நற்பெயர் பெற்றவை.
இந்த ப்ரைமா ப்ளஸ் திட்டம் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜானகிராமன் ஆகியோரால் சென்னையில் நிர்வகிக்கப்படும் திட்டம். இந்திய நிதித் திட்டங்களில் மிகச் சில திட்டங்களே இருபது வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ளவை. அவற்றில் இந்தத் திட்டமும் ஒன்று. சந்தை மேலே செல்லும் போது நல்ல லாபமும், கீழிறக்கத்தில் குறைவான நஷ்டமும் தந்து வந்திருக்கிறது.
ஐசிஐசிஐ வால்யூ டிஸ்கவரி
4-வது திட்டம், ஒரு சிறு நிறுவனங் களில் முதலீடு செய்யும் திட்டம். ஐசிஐசிஐ நிதி நிறுவனம் வழங்கும் ஐசிஐசிஐ வால்யூ டிஸ்கவரி என்ற இந்தத் திட்டம், நல்ல சிறிய நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற திட்டம். சங்கர் நாராயணன் என்பவர் நிர்வகிக்கும் இந்தத் திட்டத்தில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதற்கேற்ற லாபத்தையும் தந்திருக்கிறது.
டைனமிக் பாண்ட்
5-வது திட்டம், பிர்லா சன்லைஃப் நிறுவனம் வழங்குவது. டைனமிக் பாண்ட் என்ற இந்தத் திட்டம் முழுக்க முழுக்க கடன் சந்தை சார்ந்த திட்டம். காலத்திற்கேற்ப எந்த மாதிரியான கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்லது என்று பார்த்து முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தினை மனீஷ் டாங்கி என்பவர் நிர்வகிக்கிறார்.
இந்தத் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, லாப சாத்தியமும் குறைவு. ஆனால், மற்ற திட்டங்களுக்கு ஒரு தேர்ந்த துணைத்திட்டமாக இது அமையும். ஆக, இவை நீங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த ஐந்து திட்டங்கள். இவை ஐந்திலும் முதலீடு செய்ய வேண்டுமா என்றால், இல்லை. உங்கள் மாதாந்திர சேமிப்புத் தொகையைப் பொறுத்து இவற்றுள் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.
அதற்காகத்தான் இவற்றை ஒரு வரிசையில் பட்டியலிட்டிருக்கிறேன். உங்களால் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றால், நீங்கள் முதல் திட்டமான டாடா பேலன்ஸ்டு ஃபண்டில் மட்டும் செய்யுங்கள்.
அதிகப்படியான ஒவ்வொரு ஆயிரத்திற்கும் இதே வரிசையில் ஒவ்வொரு திட்டத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஐயாயிரத்துக்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் தொகையை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள்.
அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, அல்லவா? இதுவும் சற்றேனும் எளிமையாகத் தானே இருக்கிறது?
a

thanx -the hindu

0 comments: