சென்னை,ஜூன் 04 (டி.என்.எஸ்) ஒரு பக்கம் லஞ்சம் ஊழல், மறுபக்கம் அத்தியாவாசிய வசதிகள் இன்றி கஷ்ட்டப்படும் மக்கள், என்று இருக்கும் இந்தியா, ஏன் இந்த நிலைக்கு இருக்கிறது, என்பதை அலசும், சமூக அக்கறைப் படமாக உருவாகியிருக்கும் படம் 'புத்தனின் சிரிப்பு'.
ரூ.2 ஆயிரம் கோடி வரி செலுத்தாத நிறுவனம் ஒன்று, அதை மறைக்க, அரசியல்வாதி ஒருவருக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க, இது குறித்து விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ அதிகாரி சமுத்திரக்கனிக்கு வழங்கப்படுகிறது. நேர்மையான அதிகாரியான சமுத்திரக்கனி, தனது விசாரணையை தொடங்குகிறார்.
விவசாயம் குறித்து படித்துவிட்டு, விவசாயத்தில் பெரிய சாதனைப் படிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு, அதற்கான திட்டத்தை வகுத்து, முதலீடுக்காக வங்கியில் லோன் பெற காத்துக்கொண்டிருக்கிறார் நாயகன் மகேஷ்.
மறுபுறம், பொறியியல் படித்துவிட்டு, சென்னையில் உள்ள குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்றை வகுத்து, அதை சென்னை மாநகராட்சியிடம் கொடுத்து அங்கீகாரம் பெற, மகேஷின் நண்பர் சுரேஷ் காத்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி மூவரும் வெவ்வெறு பாதையில் பயணித்தாலும், நாட்டின் மீதும், மக்கள் மீதும் மிகுந்த அக்கறைக் கொண்டவர்களாக இருக்க, இவர்களுடைய எண்ணங்களும், இலட்சியங்களும், ஊழல் மிகுந்த அரசால் எப்படி நசுக்கப்படுகிறது என்பதை இயக்குனர் அட்வைஸ் போல சொல்லியிருக்கிறார்.
இவர்களுடன், விவேக்கும் தனது காமெடி மூலம் சிந்திக்க கூடிய விஷயங்களை வாரி வழங்குகிறார்.
வெளிநாட்டினர் இந்தியாவை, வெறும் வியாபார சந்தையாக மட்டுமே பார்ப்பது, இந்திய பொருளாதாரம், இந்திய அரசியல் அமைப்பு, என்று அத்தனை விஷயங்களையும் இயக்குனர் விக்டர் டேவிட்சன் ஆராய்ந்திருக்கிறார்.
சமூக சீர்த்திருத்த சிந்தனையுடன், இயக்குனர் விக்டர் டேவிட்சன் இப்படத்தை இயக்கியிருப்பது, படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. காதல் காட்சிகளில் கூட, நாயகன் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசுகிறார்.
இப்படி படம் முழுவதும், மக்கள் சிந்திக்க கூடிய கருத்துக்களை சொல்லியிருக்கும் இயக்குனர் விக்டர், அதை ஒரு கோர்வையாக சொல்லாமல், துணுக்கு செய்திகள் போல கொடுத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
காட்சிக்கு காட்சி, நாட்டில் நடக்கும் சில முறைகேடுகளை இயக்குனர் ரொம்ப தைரியமாக பேசியிருக்கிறார். அதிலும், காவல் துறையைப் பார்த்து, சமுத்திரக்கனி பேசும் "உங்களுக்கு பொது மக்கள் என்ன ஏ.டி.எம் எந்திரமா, நினைக்கும் போதெல்லாம், ரோட்டில் நின்று பணம் பறிக்கும் நீங்கள் என்ன வழி பறி கொள்ளையர்களா" என்ற வசனம் கைதட்டல் பெருகிறது.
சமூக சிந்தனையுடன், புரட்சிகரமான விஷயங்களை சொல்லியிருக்கும் இப்படத்தை ஒரு முறையாவது கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.
நன்றி
ஜெ.சுகுமார்
http://tamil.chennaionline.com/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=f7a3e33f-b455-4fd8-8d1a-3e70b9337784&CATEGORYNAME=Rview
0 comments:
Post a Comment