கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காக்கா முட்டை’ தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ‘இவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக்கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டுத் தயாரிப்பில் விரைவில் தமிழகத்திலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து...
திரைப்பட விழாக்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கினீர்களா?
பொழுதுபோக்குக்காக மட்டும் பாடல்கள் வச்சுட்டு டான்ஸ் பண்ற படங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது. தமிழ் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கினேன்.
பாடல்கள், நடனம் பிடிக்காது என்று சொல்ல என்ன காரணம்?
பாடல் இருந்தால்தான் படம் பார்ப்போம் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறது இல்ல. அவங்களுக்கு பாட்டுல கதைய நகத்திட்டுப்போனா ரொம்பப் பிடிக்கும்.
சில கதைகளுக்குப் பாடல்களே மைனஸாக இருக்கும். கதையோட ஓட்டத்தைத் தடுக்கும். பாடல்களே தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ‘காக்கா முட்டை’யில்கூட 4 பாடல்கள் இருக்கிறது. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். நல்ல ஒரு கதையில், பாடல்கள் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த மாதிரிப் படங்களில் ரொம்ப அப்பட்டமாவே தப்பா தெரியும்.
வெற்றி மாறன், தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது எப்படி?
என்னுடைய ‘விண்ட் (WIND), என்ற குறும்படத்தை ஒரு படவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டார். நான் எழுதி வைச்சுருந்த ‘காக்கா முட்டை’ கதையைச் சொன்னேன். வெற்றி மாறன் கதையைக் கேட்ட உடனே, ஓ.கே. பண்ணிட்டார். தனுஷும் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு உடனே ஓ.கே. சொல்ல உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்துல சிம்பு நடிச்சிருக்காராமே?
ஆமா! அவர் நடிகர் சிம்புவாகவே இரண்டு காட்சிகளில் வருவார். நான் முதலில் கதையை எழுதும்போதே, இந்த கேரக்டர் சிம்புதான் என்று எழுதிவைத்தேன். வெற்றி மாறன் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்றவுடன், வெற்றி சாரிடம் கேட்டேன். ‘சிம்புனு எழுதி வைத்திருக்கேனே சார்’னு சொன்னேன்.
தனுஷ் படிச்சுப் பார்த்துட்டு, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்ல. நானே சிம்புகிட்ட பேசுறேன்னு அவரே போன் பண்ணிப் பேசினார். தனுஷ் பேசிய அடுத்த நிமிடமே, ‘நான் பண்றேன்’னு சிம்புவும் சொல்லிட்டார். அரை நாளில் சிம்புவை வைத்துப் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.
கமர்ஷியல், காமெடி, யதார்த்தம் - இதில் உங்க ஏரியா எது?
எதற்குள்ளும் நான் என்னை பிக்ஸ் பண்ணிக்க விரும்பல. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்.
தரமான படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட விழாக்கள் மூலம் வருவாய் உண்டா?
இங்கு இருக்கிற மார்க்கெட்டைவிட, திரைப்பட விழா மார்க்கெட் என்பது பெரிது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று யோசிப்பார்கள். அதை நாம் திரும்ப எடுத்துக் கொடுக்கணும். தயாரிப்பாளருக்குத் திரைப்பட விழாக்கள் மூலமாகவே போட்ட பணம் வருகிறது என்றால் அவங்க நம்மகிட்ட எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் பண்ற ரெண்டு படங்களிலுமே மினிமம் கியாரண்டி இருக்கிறது. திரைப்பட விழாக்களில் இருக்கும் மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு படம் எடுத்தால், இன்னும் நிறைய உலக சினிமாக்களைத் தமிழில் உருவாக்கலாம்.
உங்களது அடுத்த படம்?
படத்துக்கு ‘குற்றமும் தண்டனையும்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறேன். இதே தலைப்பில் ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது. அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விதார்த் நாயகன், நாடக நடிகை பூஜா நாயகி. முக்கியமான பாத்திரங்களில் நாசர், குரு சோமசுந்தரம் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை. பின்னணி இசை மட்டும்தான். பாடல்கள் கிடையாது.
நன்றி -த இந்து
0 comments:
Post a Comment