Thursday, June 25, 2015

எம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி

எம்.ஜி.ஆரின் கண்ணீர்!விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்வாசகர் கேள்விகள்
கணேசன், மதுரை.
''முதுகுளத்தூர் கலவரம் நடந்தபோது பெரியாரின் நிலைப்பாடு என்ன?''  
'' 'தாழ்த்தப்பட்ட சமுதா­­யத்தவரின் கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் காமராஜர் தயங்கக் கூடாது; அப்படி நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு முழு ஆதரவை அளிப்போம்!’ என்று வெளிப்படையாகப் பேசி, அறிக்கை விட்டவர் தந்தை பெரியார். அதன் பின்னரே முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்!''
உதய்மூர்த்தி, திருப்பூர்.

''எம்.ஜி.ஆருக்கும் பெரியாருக்கும் இடையிலான நெருக்கம், பிரியம் பற்றி சொல்லுங்கள்?''
''தி.மு.க-வைவிட்டுப் பிரிந்துசெல்லும் நிலையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது, அந்தப் பிளவைத் தடுக்க தந்தை பெரியார் முயற்சி செய்ய வேண்டும் என்று (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற பலர் கேட்டுக்கொண்டார்கள். தந்தை பெரியாரும் அதற்கு இசைந்தார். 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் இரவு 11 மணி அளவில், தந்தை பெரியார், எம்.ஜி.ஆரிடம் தொடர்புகொண்டு (பக்கத்தில் தொலைபேசி இருக்கும்) என்னைப் பேசச் சொன்னார்... 'அய்யாவே வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னேன்.
அதற்கு எம்.ஜி.ஆர் பதறிப்போய், 'அய்யா என்னை வந்து சந்திப்பதா? கூடாது. நாளை காலை அய்யா இருக்கும் பெரியார் திடலுக்கே வந்து நேரில் சந்திக்கிறேன். அய்யாவிடம் கூறிவிடுங்கள்’ என்றார்.
அதேபோல அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு, திரையிட்ட ஒரு வேனில் பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியாரைச் சந்தித்துப் பேசினார் எம்.ஜி.ஆர்.
'ஒரு தந்தை நிலையில் இருந்து சொல்கிறேன். நீங்கள் பிரிந்து போகக் கூடாது; அப்படி என்னதான் உங்களுக்குக் குறை?’ என்று கேட்டார்கள். விவரமாகச் சில செய்திகளைச் சொல்லி அவருடைய மன வருத்தங்களைக் கூறினார். (அவர்கள் இருவரும் சந்தித்தபோது நான் வெளியேறிட முயன்றேன்; தந்தை பெரியார், 'இல்லை நீங்களும் இருக்கலாம்’ என்று சொன்னதால், நான் உடன் இருந்தேன்.) 'கட்சியின் பொருளாளரான நீங்கள், கட்சியின் வரவுசெலவு குறித்து பொதுக்கூட்டத்தில் பேசியது முறை அல்லவே’ என்று கேட்டார்.
எம்.ஜி.ஆர் அதற்கு ஏதேதோ சமாதானங்கள் சொன்னார். இறுதியில் கண்ணீர்விட்டார். 'உங்களுக்குத் தெரியாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’ என்று கூறி எம்.ஜி.ஆர் விடைபெற்றார்.
அவர் சென்ற பிறகு, தந்தை பெரியார் அருகில் இருந்த எங்களிடம், 'அவர் வேறு எங்கேயோ கால் வைத்துவிட்டார். அநேகமாக அவர் முடிவில் மாற்றம் இருக்காது’ என்று கூறினார். அதேபோல் மறுநாளே தனிக் கட்சி பற்றி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.!
அதற்குச் சில மாதங்கள் கழித்து, தமிழகச் சட்டமன்றச் செயலாளரும் மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான (காலஞ்சென்ற) சி.டி.நடராசன் அவர்களின் மகன் திருமணத்துக்கும், அன்று மாலை இசையரசு எம்.எம்.தண்டபானி தேசிகர் இசைக் கச்சேரி நடந்ததற்கும் தந்தை பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு வந்து மணமக்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர், தந்தை பெரியார் அருகில் வந்து வணக்கம் செலுத்திவிட்டு, இரண்டு நாற்காலி தள்ளி அமர்ந்தார்.
சிறிது நேரம் அமர்ந்து கச்சேரி கேட்டுவிட்டு, பிறகு என் அருகில் வந்து காதோடு காது வைத்து சிறிது நேரம் பேசினார். இதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்; தந்தை பெரியாரும் பார்த்தார். பிறகு நாங்கள் வேனில் திரும்பும்போது... தந்தை பெரியார், 'ஏம்பா எம்.ஜி.ஆர் உங்களிடம் ஏதோ பெரிய ரகசியம் சொன்னாரே...’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
'ஆமாம் அய்யா, அதை நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே  கேட்டுவிட்டீர்கள். எம்.ஜி.ஆர் என்னிடம்... 'அய்யாவிடம் சொல்லுங்கள். நான் வேறு கட்சி ஆரம்பித்தாலும்கூட, என்றும் அய்யாவின் ஆள்தான்; அய்யாவின் கொள்கைக்கு விரோதமாக ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன்!’ என்று சொன்னார்’ எனக் கூறினேன்.
தந்தை பெரியார் எந்தப் பதிலும் கூறாமல் வாய்விட்டுச் சிரித்தார்கள்!
தந்தை பெரியாரின் 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது (செப்டம்பர் 17, 1973), அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர், தன் கட்சியின் முக்கியமான தோழர்களுடன்  பெரியார் திடலுக்கு வந்து, பெரியாருக்கு மாலை அணிவித்து வாழ்த்துக் கூறி, ஒரு கவரில் 5,000 ரூபாய் வைத்துக் கொடுத்தார்கள். சிறிதுநேரம் நலம் விசாரித்ததோடு, அடுத்த பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெரியாரும் சிரித்துக்கொண்டே அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, 'உங்கள் அன்பு அபரிமிதமானது’ என்று கூறினார். பின்னர்  எம்.ஜி.ஆர் விடைபெற்றுச் சென்றார்!''
கே.பாலமுருகன், அனுப்பனாடி.
 '' 'பெரியார் ஒரு கன்னடர். திராவிடர் இயக்கம் தமிழர்களை அழுத்தி, தமிழர் அல்லாதோரின் ஆதிக்கத்துக்காக உருவானது’ என்று சில தமிழ்த் தேசியவாதிகள் விமர்சனங்களை முன்வைக்கிறார்களே..?''
''இவை சிலரின் அர்த்தமற்ற வாதங்கள். திராவிடர் இயக்கம் இல்லாவிட்டால், தமிழ் மொழி உணர்வு, தமிழன் என்கிற இன உணர்வு, தமிழரின் மறுமலர்ச்சி, வந்திருக்காதே!
தந்தை பெரியார், பிறப்பால் கன்னடர்தான்; ஆனால், அவர் யாருக்காக இறுதிமூச்சு வரை பாடுபட்டார் என்பதுதானே முக்கியம். பெரியார் கூறும் தேசியம் தமிழர்களுக்கானது. தமிழ்த் தேசியவாதிகளின் தேசியம்... பார்ப்பனர்களைப் பாதுகாப்பது; சாதி உணர்வைக் காப்பாற்றுவது என்பன புரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள்!''
ஆர்.பாரதி கிருஷ்ணன், விருதுநகர்.
''எழுத்தாளர் ஜெயகாந்தனும் நீங்களும் பால்ய வயதுத் தோழர்கள். உங்கள் நட்பின் பிரியமான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''கொள்கைகளில் மாறுபடும் நாங்கள், நட்பால் என்றும் பிணைக்கப்பட்டவர்கள். சிறுவயது முதலே ஒரே ஊர், ஒரே தெருவில் வாழ்ந்த 'அகநகும் நட்புள்ள’ நண்பர்கள் நாங்கள். அப்போது அவர் முருகேசன்; நான் சாரங்கபாணி. அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருக்கம் பாராட்டியவை. அவரது அத்தை, என் திண்ணைப் பள்ளி ஆசிரியர். சில நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்தோம்; தொடர்வோம்!''
கே.ராஜீவ்காந்தி, கோவை.
''கருணாநிதியை நீங்கள் ஆதரிப்பது உங்கள் உரிமை. அதற்காக அவரை முழுக்க முழுக்க ஆதரித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?''
''எனது உரிமை என்று ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு, இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்புவது நியாயமா? முழுக்கவா அல்லது பாதியா என்பதை, நாங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். கலைஞர் மீது ஏனோ உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு. கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டால், நாங்கள் நிலைப்பாட்டை மாற்றுவோம்; மாற்றியும் இருக்கிறோம். அதனால் அதைப் பற்றிய வீண் கவலை உங்களுக்கு வேண்டாமே!''
நீதிமணி, நீடாமங்கலம்.
''வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய பெரியார், தமிழகத்தில் இரட்டைக் குவளை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை?''
''நீடாமங்கலம் நண்பரே... உங்கள் ஊரில் 1938-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதி திராவிடத் தோழர்கள் பந்தியில் (தேவசகாயம், ஆறுமுகம், ரெத்தினம்) அமர்ந்து உண்டதற்காக, அந்தக் கால காங்கிரஸ் நண்பர்கள், அவர்களுக்கு மொட்டையடித்து ஊர்வலம்விட்டார்கள். அந்தக் கொடுமைக்கு எதிராக வழக்கு நடத்திப் பாதுகாத்தவர் தந்தை பெரியார். இரட்டைக் குவளைக்கு அடிப்படை.. சாதி! அதை எதிர்த்து தன் 95-ம் வயதிலும்கூட, அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற சாதி தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார். சாதி வேரைச் சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பு என்பது நிழலோடு சண்டைபோடுவது என்பதைப் புரிந்துவைத்திருந்தவர் தந்தை பெரியார்!''
கலியமூர்த்தி, புதுவயல்.
''தீவிர ஆன்மிகவாதியான  ரஜினிகாந்துடன் உங்கள் பழக்கம் எப்படி?''
''ரஜினி அவர்களிடம் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. அவரது மகள் திருமண அழைப்பிதழைக் கொடுக்க பெரியார் திடலுக்கு வந்திருந்தபோது பேசியதுதான். அப்போது தந்தை பெரியார் பற்றிய பல்வேறு செய்திகளை நேரில் கேட்டு மகிழ்ந்தார். 'ஒவ்வொரு போராட்டத்துக்கும் எவ்வளவு உழைச்சிருக்கார். கிரேட் மேன்!’ என்று பெரியாரின் ஒவ்வொரு செயலையும் அறிந்து ஆச்சர்யப்பட்டார்!''
ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டி.
''உங்களோடு கொள்கை ரீதியில் நெருக்கமானவர் நடிகர் கமல்ஹாசன். அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் குறித்து சொல்லுங்களேன்?''
''கமல் 'தசாவதாரம்’ படம் பார்க்க அழைத்தார். பார்த்து கருத்து சொன்னேன். அவர் தயாரித்த 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது, 'ஒருவேளை தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லை என்று தெரிந்தால், மதச்சார்பற்ற மாநிலம் நோக்கி இடம் மாறுவேன். மதச்சார்பற்ற மாநிலம் கிடைக்கவில்லையென்றால் மதச்சார்பற்ற நாட்டில் குடியேறுவேன். வீழ்ந்தாலும் விதையாக வீழ்வேன். விதை மரம் ஆகும்!’ என்று குறிப்பிட்ட அந்தக் கொள்கை, உறுதி ஆகியவை நாங்கள் தூரத்தில் இருந்தாலும் எங்களை இணைக்கின்றன.
'ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத்துணியோடு, பூஜையை முடிச்சுட்டு வீட்ல இருக்கிறவங்களுக்கு, தீர்த்தம் கொடுத்திருக்கேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடுச்சு’ என்று கமல் ஹாசன் சொன்னது அவரை எங்களோடு மேலும் இணைத்தது. மற்ற நடிகர்களைப் போல ரசிகர் மன்றம் அமைக்காமல், நற்பணி மன்றமாக உருவாக்கி, மனிதநேயத் தொண்டர் பணிகளில் அதை ஈடுபட வைப்பது, ஒரு பகுத்தறிவாதி தலைசிறந்த மனிதநேயவாதியாக இருப்பார் என்பதற்கான சாட்சியம் ஆகும்!''
- பகுத்தறிவோம்...

''உங்கள் பார்வையில் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா, இப்போதும் சமூக நீதியைக் காக்கிறாரா?''

  ''அடுத்த நூற்றாண்டில் தந்தை பெரியார் எவ்வாறு நினைவுகூரப்படுவார்?''

''விநாயகர் சதுர்த்திக்கு மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து கூறப்பட்டு, பின்னர் தி.மு.க-வின் தலைமைக் கழக அறிக்கை அதை மறுப்பதுபோல சமாளித்திருக்கிறதே... அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

- அடுத்த வாரம்.

நன்றி - விகடன்

0 comments: