இன்ஜினீயரிங் படிப்பு குறித்த பெருமிதம் இன்னும் தொடர்வது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஏனெனில் இப்போது இன்ஜினீயரிங் சீட் கிடைப்பது சிரமமில்லை. பள்ளிப்படிப்பு முடித்து ஒவ்வோர் ஆண்டும் வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கிறதோ இல்லையோ, லட்சக்கணக்கில் காத்திருக்கின்றன பொறியியல் கல்லூரியில் இடங்கள். கடந்த ஆண்டு வரையிலும், தமிழகத்தில் பெரும்பான்மை மாணவர்களுக்கு விருப்பப் பாடம் ‘ஐ.டி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி’ தான்.
அதற்கு ஏற்றாற்போலவே, ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் வேலைவாய்ப்பு நிச்சயம் என்றபடி வெளியாகும் கல்லூரி விளம்பரங்களில் டாப் ‘ஐ.டி.’ நிறுவனங்கள் தவறாமல் இடம்பிடிக்கின்றன. இப்படியான கல்லூரிகளில் சேர்ந்து படித்து, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் பொறியாளர்களாக வெளியேறுகின்றனர். இவர்களில் 53 சதவீதத்தினர்.
ஐ.டி. துறையில் சேர விருப்பம் தெரிவிப்பதாக, தேசிய வேலைவாய்ப்பு தகுதி படைத்தோர் குறித்த அறிக்கை (National Employability Report 2014) கூறுகிறது. இந்தியாவில் உள்ள 58,824 ஐ.டி. நிறுவனங்களில், தமிழ்நாட்டில் 7,074 நிறுவனங்கள் உள்ளன. (2011 மத்திய அரசுப் புள்ளிவிவரம்). இந்த நிறுவனங்களில், சில ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. பல தடைகளைக் கடந்து ஐ.டி. துறை வேலை என்னும் கனவுக்கு ‘கால் லெட்டர்’ பெறும் இளைஞர்களின் நிலைமை அவர்கள் எதிர்பார்த்ததுபோல் பிரகாசமாகத்தான் இருக்கிறதா?
தொழில்நுட்பப் பூங்காவின் வானுயர்ந்த கட்டிடங்களில் பரபரப் பாக இயங்கும் ஐ.டி. நிறுவனங்களின் கதவு திறக்க, அந்தப் புதிய வரவுகள் உள்ளே நுழைகின்றன. பெரும் நிறுவனங்களில் இப்படி வந்து சேரும் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவார்கள்; வரிசையாக அமர்த்தப்படுவார்கள். பின்னர் அவர்களிடம் ஒப்பந்தப் படிவங்கள் அளிக்கப்படும்.
“நான்காம் பக்கத்தில் இடதுபுறம் கையெழுத்திடவும், 14-ம் பக்கத்தில் கீழே வலதுபுறத்தில் கையெழுத்திடவும்” என்ற குரலுக்குத் தக்க படிவங்களை நிரப்புவார்கள். என்ன ஏதேன்று படித்துப் பார்க்காமல் எப்படி, ஏன் கையெழுத்திடுகிறார்கள்? “ஒப்பந்தங்களைப் படித்துப் பார்க்க யாருக்கும் நேரமிருக்காது. அதனால் அப்படியே நிரப்பிவிடுவோம்” என்கிறார் பிரசன்னா. அதன் பிறகு புதிதாக வேலையில் சேர்ந்துள்ள அவர்கள் பயிற்சி பெறும் குழுவில் இணைக்கப்படுவார்கள்.
வாழ்வின் வண்ணங்கள்
“அப்றம் மச்சி... வேலைல சேர்ந்தாச்சு. இன்னிக்கு நீதான் ட்ரீட்”, “ப்ராஜக்ட்ல கலக்கிட்ட, ட்ரீட்”, “பைக் வாங்கிட்ட ட்ரீட்” என நண்பர்களின் அன்புக் கட்டளைகள் தொடர - ஒவ்வொரு வாரமும் எஃப். பி.ல ‘செல்ஃபி’, ‘க்ரூப்பி’னு லைக்ஸ் அள்ளும். கிளையண்டுக்கு ஏற்ற உடை, மதிய உணவுக்கு பீட்சா ஷாப், அவ்வப்போது காபி டே என ஐ.டி. வாழ்க்கையின் வண்ணங்கள் அனுதினமும் அழகழகாக மலர்வதாகத் தெரியும். “நினைத்ததை அப்பவே வாங்கிடு” என்று தூண்டிக்கொண்டேயிருக்கும் பாக்கெட்டில் துருத்திக்கொண்டி ருக்கும் கிரெடிட் கார்ட்.
இதையெல்லாம் தவிர்க்க முடியாதா என்ன? இதற்குப் பதில் போல், “எனக்கு வேற வேலை இருக்கு. அநாவசிய செலவெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு தள்ளி இருக்க முடியாது. தனியா ஒதுக்கப்பட்ட மாதிரி தோணும். அவ்வப்போது ஃபுட் கூப்பன், அலுவலக வளாகத்திலயே கடைகள் என இந்தக் கலாசாரத்தை நிறுவனங்களே பரப்பவும் செய்றாங்க” என்று சொல்கிறார் சுகந்தி.
பயிற்சி முடிந்து புராஜக்ட் வேலைகளில் சேர்க்கப்படும் புதியவர்கள் ஏதாவது குழுவில் இணைக்கப்பட்டு, ஒரு பகுதி வேலையை மட்டும் முடிக்கும்படி அமர்த்தப்படுவார்கள். இதுவே சிறிய நிறுவனமாக இருந்தால் முழு வேலையையும் ஒருவரே முடிக்க நேரலாம். இரண்டிலும் வேலைப் பளு ஒன்றுதான்.
வருடத்துக்கு 15 நாட்கள் சி.எல். (தற்செயல் விடுப்பு) வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மேனேஜரைச் சந்தித்து விடுப்பு கேட்பது அத்தனை எளிதல்ல. “கேண்டீனில் சாப்பிடும் நேரம் தொடங்கி, பார்க்கிங்கில் கார் எடுப்பதுவரை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முதல் அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும். டீம் லீடரையும், மற்ற மூத்தவர்களையும் தாண்டி மேனேஜர் கண்ணில் படுவதற்கான திறனை வளர்ப்பதும் ஐ.டி. துறையில் பிழைத்திருக்க அவசியமானது” என்கிறார் அருண். புதுமுகமாய் வருபவருக்கு இந்த சூட்சுமம் புரிபடவே பல மாதங்கள் ஆகிவிடும்.
வேலை நிரந்தரம், பதவி உயர்வு, வேலை நீக்கம் என ஒவ்வொரு முடிவுக்கும் எது அடிப்படை என்று புரிந்துகொள்வதும் அத்தனை எளிதல்ல. பல ஆண்டுகள் இந்தத் துறையில் பணியில் உள்ளோரைக் கேட்டாலும், சரியான பதில்களை அறிய முடிவதில்லை. இப்படித்தான் ஐ.டி. சூழலுக்குத் தக்கவாறு இளைஞர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment