மனித குலத்தின் இன்றைய மிகப்பெரும் நெருக்கடி நம்பிக்கையின்மைதான். எல்லா வசதிகளும் பெருக பெருக வாழ்வு பற்றிய நம்பிக்கை மட்டும் குறைந்துகொண்டுதான் செல்கிறது. துக்க நோய் இந்தியாவில் இதய நோய் மற்றும் புற்று நோய் போல பரவ முக்கிய சமூக உளவியல் காரணம் நம்பிக்கையின்மைதான்.
சோதனையில் நம்பிக்கையுடன் காத்திருத்தல் எனும் மனப்பக்குவம் குறைந்துவருகிறது. எதையும் உடனே அனுபவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் வாழ்க்கையே வீண் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் நுகர்வு கலாச்சாரம் இளைஞர்களை மனதைப் பலவீனமாக்குகிறது.
வாழ்க்கையில் எல்லா வளங்களும் இருந்தும் பிடிப்பு இல்லாமல் வாழும் பலரை நாம் பார்க்கிறோம். உயிர் வாழ்வதிலே என்ன பயன் என்று பேசுவர். எதையோ பறிகொடுத்தது போல ஒரு பற்றில்லாமல் வாழ்வர். எது தன் வாழ்க்கையை நகர்த்துகிறது என்று அறியாமல் ஸ்தம்பித்து மனவியாதி இல்லாமலே துக்கத்தில் தவிப்பதைப் பார்க்கிறோம். அப்படி யாரேனும் உங்களிடம் வந்தால் ஷஷாங்க் ரிடெம்ஷன் படம் பார்க்கச் சொல்லுங்கள்.
செய்யாத குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற நாயகன். மனைவி வேறொருவருடன் கொல்லப்பட்டதால் கணவன் கொன்றதாக நம்பப்படுகிறது. வங்கி அலுவலரான நாயகன் இப்படி ஒரு கொடுமையான சிறை வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
அதிகாரிகளின் அடக்குமுறை, சக சிறைவாசிகளின் பாலியல் தொல்லைகள், நியாயத்தை நிலை நிறுத்த முடியாத கோபம் எனச் சிறை வாழ்க்கை ஆரம்பமாகிறது. அங்கு வெளிப் பொருட்களைக் கடத்திவந்து உள்ளே விற்று, அந்த கமிஷன் பணத்தில் செல்வாக்குடன் வாழும் ரெட் என்பவனின் நட்பு கிடைக்கிறது. தனக்குக் கல் செதுக்கும் சுத்தியல் ஒன்றும் நடிகை படம் ஒன்றும் கேட்க அவர்கள் நட்பு பலப்படுகிறது.
சிறை அதிகாரியின் வரிப் பிரச்சினையை தன் வங்கி அனுபவத்தால் குறைக்க ஆலோசனை சொல்லியதால், பாலியல் தொல்லை தந்தவனிடமிருந்து தற்காப்பு கிடைக்கிறது. நாயகனின் கல்வி அறிவாலும், நிதி பற்றிய நிர்வாகத் திறனாலும் சிறைத் தலைமையின் பார்வை இவன் மேல் படுகிறது.
நூலகத்துக்கு மாற்றப்படுகிறான் நாயகன். ஜெயிலரின் கணக்கு வழக்குகள் பார்க்கவும் உதவுகிறான். சிறைக் கைதிகளைக் கூலியில்லாத் தொழிலாளிகளாகப் பாவித்து ஒப்பந்த வேலைகள் செய்து சம்பாதிக்கும் பணத்தின் வரவு செலவு முழுதும் நாயகன் பார்வைக்கு வருகிறது.
சிறை நூலகத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் மூத்தவர், வெளி உலகத்துடன் ஒட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். விடுதலையும் வெளியுலக அமைதி வாழ்வும் வாய்க்காது என்று நம்பிக்கை இழக்கும் ரெட்டிடம் “நம்பிக்கைதான் வாழ்வின் மிகப்பெரிய சொத்து” என்கிறான் நாயகன்.
தன் மனைவியைக் கொன்றவன் பற்றிய துப்பு கிடைக்க, அதை ஜெயிலரிடம் தெரிவித்தபோது அவர் அதை உதாசீனப்படுத்துகிறார். அதைத் தெரிவித்த கைதியையும் என்கவுண்டரில் கொல்கிறார். நாயகன் கொதித்தெழுந்தபோது அவனைக் கடுங்காவல் சிறைக்கு மாற்றுகிறார். பிறகு ஒரு மாதத்தில் அவனைத் தன் வழிக்குக் கொண்டுவருகிறார்.
ஆறடி நீள பலமான கயிறு வேண்டும் என நாயகன் கேட்கும்போது ரெட் கவலைப்படுகிறான். அடுத்த நாள் நாயகன் அறையில் ஆள் இல்லை. நடிகையின் படம் கிழியும்போது கல்சுவரில் ஓட்டை போட்டு பாதாள சாக்கடை வழியாகத் தப்பியது தெரிகிறது. வருடக்கணக்கில் ஒற்றைச் சுத்தியுடன் நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் சிறிது சிறிதாகக் குடைந்த சுவர் நாயகனின் மீட்சிக்கு வழி வகுக்கிறது. முக்கிய கோப்புகளையும் மாற்று அடையாளத்துடனும் வெளி உலகில் செல்வந்தராகிறான்.
ஜெயிலரின் கள்ளக் கணக்குகளையும் தகிடு தத்தங்களையும் அரசுக்குத் தெரிவிக்க, காவல் துறை கைது செய்யும்முன்னர் தன்னைச் சுட்டுக்கொண்டு சாகிறார். ரெட்டுக்கு நன்னடத்தையால் விடுதலை கிடைக்கிறது. என்றாவது வெளியே வந்தால் ஓரிடத்தில் புதையலாகச் சிறு பணமும் தானிருக்கும் முகவரியையும் வைத்திருப்பேன் என்று சொன்ன நண்பன் வாக்கை நம்பிச் செல்லும் ரெட்டுக்குச் சொன்னது போல புதையல் கிடைக்கிறது. நண்பர்கள் ஒன்றுபடுகிறார்கள். நம்பிக்கை பலிக்கிறது!
ஆண்டி என்ற பாத்திரத்தில் வரும் டிம் ராபின்ஸ்தான் நாயகன். ஆனால் ரெட் என்ற நண்பன் பாத்திரத்தில் வரும் மார்கன் ஃப்ரீமேனின் குரலில்தான் கதை நகர்கிறது. ஸ்டீபன் கிங் எழுதிய நாவலுக்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஃப்ராங் டேராபோண்ட்.
ஐ.எம்.டி.பி வலைதளத்தில் முதல் இடத்தைப் பெற்று உலகப் படங்களிலேயே முதன்மையான படைப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியான பொழுது விமர்சகர்கள் பாராட்டினாலும் பெரிய வசூல் இல்லை. பின் விருதுகள் குவிந்து உலக கவனம் பெற்ற பின் மறு வெளியீட்டில் நல்ல வசூலைக் குவித்தது. அதைவிட சுவாரசியமான விஷயம் வாடகை வீடியோவில் உலகில் மிக அதிக அளவு சம்பாதித்த படம் இதுதானாம்.
மனதைத் தொடும் இடங்களிலும் அளவான கச்சிதமான நடிப்பு, அற்புதமான கதை நகர்வு, செறிவான வசனங்கள், கவித்துவமான ஒளி அமைப்புகள், இதமான இசை என அனைத்தும் சரிவர கலைப் பங்களிப்பைப் பெற்ற படம்.
வாழ்க்கை நம்மை முழுவதுமாக நசுக்கி, மீள வழியே இல்லை எனும் நிலையில் நம்பிக்கையுடன் தொடர் முயற்சி செய்தல் என்பது அசாதாரணச் செயல். இது சிறைச்சாலை வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நம்மைச் சிறை பிடிக்கும் அனைத்து அமைப்புகள், உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களுக்கும் பொருந்தும்.
மீட்சிக்கு வழியுண்டு எனும் நம்பிக்கை சிந்தனையைவிட நல்ல செய்தி எது?
தொடர்புக்கு [email protected]
- Madhu
கதையில் கற்பனை இருக்கலாம். நம்பும்படியான யதார்த்தமும், சுவாரசியமும், மனித நேயமும் வெளிப்படும்படி திரைக்கதை அமைந்தால் அது வெற்றி பெரும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். இது ஒரு மிகச் சிறந்த, அனைவரும் பார்க்க வேண்டிய படம். மிகவும் கொடுமையான குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற அந்த சிறையில் உள்ள அனைவருமே தாங்கள் 'அப்பாவிகள்' என்று சொல்லிக் கொள்ளும்போது அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள். சிறை வாழ்க்கை சிலரைத் திருத்தவும் செய்கிறது. சிலரைத் தாங்களே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. மனச் சிதைவுகளின் எச்சங்களும்,ஆளுமைகளும் வெளிப்படுகின்றன. மனித நேயமும், பறவைகளின் மீதுள்ள பாசமும் எட்டிப் பார்க்கின்றன. சில சிறைத்துறை அதிகாரிகள் தண்டனைக் கைதிகளை விடக் கீழ்த்தரமானவர்கள் என்பதையும் புட்டு புட்டு வைக்கிறார்கள்.அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் எவரும் இதுபோல் தப்பிக்க வாய்ப்பே இல்லை. நம்புங்கள். இந்தப் படம் வில்லனை உத்தமனாகக் காட்டவில்லை. ஒரு அப்பாவியை 'அப்பாவி'தான் என நமக்குத் தெரிய வைக்கிறது.Points1035
- Venkatesan
நல்ல படம் நம்பிக்கையை தரும் . முடிந்தால் பாருங்கள் .about 17 hours ago · (0) · (0) · reply (0) ·
- Vish
மிகவும் அருமையான படம்...டிம் ராபின்சும் மார்கன் பிரீமேனும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்....
thanx -the hindiu
0 comments:
Post a Comment