Saturday, May 23, 2015

san andreas - பூகம்பம் பற்றிய ஹாலிவுட் படம் - ஒரு பார்வை

நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் சமீபத்தில் நேபாளத் தேசத்தின் மீது நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை நொடிகளில் பறித்த இந்த ஆறாத் துயரம் ஒட்டுமொத்த உலகையும் கண்ணீர் விட வைத்தது. அதேபோன்றதொரு நிலநடுக்கத்தை அமெரிக்கா எதிர்கொண்டால் எப்படியிருக்கும்? அதுதான் வரும் மே 29ம் தேதி வெளியாக இருக்கும் 'சான் ஆன்ட்ரியாஸ்' படத்தின் ரணகளமான கதைக் களம்.
ஹாலிவுட்டை தன்னகத்தே வைத்திருக்கும் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரை நிலநடுக்கம் தாக்குகிறது. அதன் கடுமையான பாதிப்பை அறிந்த டுவைன் ஜான்சன் கலிபோர்னியாவில் வசிக்கும், முற்றிலும் தன்னை வெறுத்து ஒதுக்கும் தன் மகள் சான்ட்ராவை காப்பாற்றத் தனது மனைவியுடன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரை பயணம் செய்கிறார்.
ஆங்காங்கே பூமி பிளந்து கிடக்கப் பயணத்தைத் தொடர முடியவில்லை, ஜான்சன் தீயணைப்பு மீட்பு துறையில் பணியாற்றுபவர். அந்த அனுகூலம் அவருக்குக் கைகொடுக்கிறது. ஒரு மீட்பு ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு தன் மகளைக் காப்பாற்ற விரைகிறார்.

இந்தப் பயணத்தின்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக் கண்முன்னால் பேரழிவைக் காண்கிறார் ஜான்சன். இத்தனைபெரிய அழிவுக்குப் பிறகும் தன் மகள் உயிர் பிழைத்திருப்பாளா என்ற சந்தேகமும் ஏன் அவள் உயிரோடு இருக்கக்கூடாது என்ற நம்பிக்கையும் அவரைக் குடைந்தெடுக்கிறது. மரண ஓலங்களுக்கு நடுவே அவர் தன் மகளைக் காப்பாற்றுகிறாரா, இல்லையா.. என்பதுதான் படம்.
கடந்த 2009-ல் வெளியான '2012' திரைப்படத்தில் உலகமே அழிவதுபோல பிரமாண்டக் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டு உலக ரசிகர்களை அந்தப் படம் மிரட்டியது. அதைப்போன்று இல்லாவிட்டாலும் முதல் உலக நாடு ஒன்றின் வளர்ந்த நகரங்கள், அவற்றுக்கு நீராதாரமாக இருக்கும் பெரிய அணைக்கட்டுகள் கடும் நிலநடுக்கத்தால் சின்னாபின்னமானால் எத்தகைய பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தப் படம் 3டி கிராஃபிக்ஸ் மூலம் பிரமாண்டமாகவும் அதேநேரம் உயிரோட்டமாகவும் காட்ட இருக்கிறது என்கின்றன ஹாலிவுட் வட்டாரங்கள்.
இப்படத்தை இயக்கியிருப்பவர் கனடா தேசத்தின் இயக்குநரான ப்ராட் பெய்டன்.
`ஜர்னி டு த சென்டர் ஆஃப் எர்த்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹாலிவுட்டில் கவனம் பெற்றவர். மிக பிரபலமான `ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படத்தின் கதாநாயகன் டிவைன் ஜான்சனை மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இயக்கியிருக்கிறார். டிவைன்தான் மகளைத் தேடி இதயம் படபடக்கப் பறக்கும் பாசக்கார அப்பா.
தொகுப்பு: ஐஸ்வர்யா

நன்றி - த இந்து

0 comments: