உலகத் திரைப்பட விழாக்கள், கோவா திரைப்பட விழா, தேசிய விருதுக்குழு என ஒட்டுமொத்தமாகக் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ரமேஷும் விக்னேஷும். சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதை வென்று திரும்பியிருக்கும் இந்தச்சிறுவர்கள் வசிப்பது சென்னையின் கடற்கரை பகுதிகளில் ஒன்றான காசிமேடு. | வீடியோ இணைப்பு கீழே |
தேசிய விருது வாங்கியிருக்கிறோம், நமக்குக் கிடைத்திருப்பது இந்தியா அளவிலான அங்கீகாரம் என்பது பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் குழந்தைமை தொலைத்துவிடாமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு உரையாடியபோது நேரம் போனதே தெரியவில்லை
கடற்கடையில் கிடைத்தார்கள்
“இயக்குநர் மணிகண்டனை முதலில் எங்கு பார்த்தீர்கள்” என்று கேட்டபோது, “அண்ணா.. நான் சொல்றேன் முதல்ல... ஒரு நாள் நாங்க கடல்ல குளிக்கலாம்ன்னு வந்தோம். அதுக்கு முன்னாடி அங்குள்ள பசங்களோட ஜாலியாக மண்ணைக் கட்டி விளையாடிக்கிட்டிருந்தோம். அப்போ சில அண்ணாக்கள் வந்து எங்களை போட்டோ எடுத்தாங்க. அவங்க கூட மணிகண்டன் அண்ணாவும் இருந்தார்.
என்ன நம்மளைப் படம் எடுக்குறாங்கன்னு பயந்தேன். பயம் அதிகமாகிடுச்சு. உடனே தண்ணீருக்குள் போய் நீந்த ஆரம்பிச்சுட்டேன். அப்போவும் எங்களை கேமரா வெச்சுப் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. நான் வெளியே வந்து ரோட்டுக்குப்போய் நின்னுட்டேன். “இந்தப் பசங்க நல்லாப் பண்ணுறாங்கன்னு” சொல்லி போஸ் கொடுக்கச் சொன்னாங்க.
இல்லை… எங்கம்மா திட்டுவாங்கன்னு சொன்னேன். “சும்மா போஸ் மட்டும்தான்டான்னு “ சொன்னாங்க. அப்புறமா என் அம்மாகிட்டப்போய் மணிகண்டன் அண்ணா கேட்டாங்க. ஆனா எங்கம்மா முடியாதுன்னு சொல்லிடுச்சு. “நல்லா பார்த்துகிறோம், ஒரு குறையும் இருக்காதுன்னு சொன்னதும் அம்மா சரி என்று சொல்லி அனுப்பி வைச்சாங்க” என்று தேர்வு செய்யப்பட்ட விதத்தை விவரித்தான் ரமேஷ்.
நடிக்கவே இல்லையே
ரமேஷைத் தொடர்ந்து விக்னேஷ் தனது முன்கதை சுருக்கத்தைப் பகிர ஆரம்பித்தான், “இந்தக் காசிமேடு ஏரியாலதான் நானும் இருக்கேன். முதல்ல ரமேஷைத்தான் தேர்வு செஞ்சாங்க. அப்பறம் என்னைப் பார்த்து “நீயும் நடிக்க வர்றியா”ன்னு கேட்டாங்க. அம்மாகிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன். மணிகண்டன் அண்ணா இப்பவே பேசலாம் வான்னு எங்க வீட்டுக்கு வந்துட்டார். நான் நடுங்கிட்டேன்.
எங்கம்மா ’ உனக்கு பள்ளிகூடத்துல லீவ் கொடுத்தா நடிடான்னு சொன்னாங்க. எங்க டீச்சர்கிட்டப் போய் நான் சினிமா நடிக்கப் போறேன் எனக்கு லீவு வேணும்ன்னு கேட்டேன். ஒரு மாசம் லீவு கொடுத்துவிட்டு, “நல்ல நடிக்கணும்” என்று சொல்லி அனுப்பிட்டாங்க. அப்போ எனக்கு ஜாலியா இருந்துச்சு” என்று லம்பாக விடுமுறை கிடைத்த சந்தோஷத்தை ப்ளாஷ்பேக்கில் நினைத்துப் பார்த்து முகம் முழுக்கச் சிரித்தான்.
“கேமரா முன்னால நின்னு நடிக்கப் பயமா இல்லையா உங்க இருவருக்கும்” என்று கேட்டதும் ரமேஷ் முந்திக்கொண்டு பதில் சொன்னான்..
“ நான் நடிக்கவே இல்லையே... எங்க வீட்டுக்கிட்ட நின்னு எப்படி விளையாடிக்கிட்டிருப்பேனோ, அப்படித்தான் ஷூட்டிங் நடந்தப்பவும் விளையாடினேன். கேமிராவப் பார்த்து நடிக்கவே இல்ல. கதை என்னன்னே தெரியாது.
என்னைவிட இந்த விக்னேஷ்தான் ஷூட்டிங்ல எல்லோரையும் வெறுப்பேத்திகிட்டே இருப்பான். அப்பறம் கும்பலாகச் சேர்ந்துகிட்டு விக்னேஷை அடிப்போம். அந்த நேரத்தில டைரக்டர் அண்ணா வந்துவிட்டார்ன்னா அவ்வளவுதான்.. எல்லோரும் ஓடிப்போய் ஒளிஞ்சுப்போம்” என்று அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டான் விக்னேஷ்..
“அண்ணா. இவன் சொல்றதைதெல்லாம் நம்பாதீங்க… ஷூட்டிங்ல நான் எல்லோரையும் கலாய்ப்பேன். நிறைய பேர் அழுதுடுவாங்க. டைரக்டர் அண்ணாதான் “இப்படி எல்லாம் பண்ணக் கூடாது, நீதான் பெரிய பையன்” என்று கூறுவார். அப்பறம் கலாய்க்கிறதை நான் நிறுத்திவிட்டேன். மணி அண்ணாவைப் பார்த்தாலே எல்லாரும் பயந்து ஓடுவாங்க. நான் மட்டும் நின்னு பேசுவேன்.” என்று கெத்து காட்டினான்.
பறந்த அனுபவம்
உங்க படப்பிடிப்பு அனுபவம் போதும், இந்தப் படத்தை தயாரிச்ச நடிகர் தனுஷைப் பார்த்தப்போ என்ன சொன்னார் என்று கேட்டதும், “நான் ரெண்டு, மூணு தடவைதான் அவரைப் பார்த்துருக்கேன். “சின்ன வயசுலயே தேசிய விருது வாங்கப் போறீங்க. நல்லா படிக்கணும், படிப்பை பாதியில நிறுத்திடக் கூடாது”ன்னு சொன்னார் என்று ரமேஷ் சொல்லிக்கொண்டிருக்க.. விக்னேஷ் பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்தான் “
நான் வேற யாரோ வருகிறாங்கன்னு உட்கார்ந்துட்டு இருந்தேன். பார்த்தா தனுஷ் அண்ணா வந்து நிக்குகிறார். மணிகண்டன் அண்ணாகிட்ட.. இவர் ஒரிஜினல் தனுஷா இல்லை டூப்ளிகேட் தனுஷான்னு கேட்டேன். “டேய்.. ஒரிஜினல்டான்னு” சொன்னார், அப்படியா... தெரியவே இல்லன்னு சொன்னேன். எல்லாரும் சிரிச்சுட்டாங்க.
உங்க நடிப்புக்கு தேசிய விருது கிடைச்சிருக்குன்னு சொன்னப்போ எப்படி இருந்தது என்று கேட்டதும் ரமேஷ் இயல்பு காட்டினான். “விருது கிடைச்சிருக்குடான்னு டைரக்டர் அண்ணா போன் பண்ணி சொன்னப்போ, “அப்படியா.. நான் வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னேன்.
“தேசிய விருதுடா விமானத்துல போய் வாங்கணும்”னு சொன்னார். அப்படியா இப்போவே கிளம்பி வந்துவிடவான்னு கேட்டேன். விமானத்துல பறக்கப் போறோம்ங்கிறதை நினைச்சு சந்தோஷமாக இருந்துச்சு. விருது வாங்கிட்டு வந்தப்போ அங்கே நிறைய பேர் வந்து நல்லா நடிச்சுருக்கன்னு சொன்னாங்க” என்றான்.
நல்லா வருவீங்கண்ணா
ரமேஷின் டெல்லி பயணம் அனுபவம் வேறுமாதிரி.. “டெல்லில விருது வாங்க போனப்போ கையை நீட்டு, கைய தூக்குன்னு என்று சொல்லிச்சொல்லி உடம்புல எதாச்சும் இருக்கான்னு பார்த்தாங்க. நாங்கள் என்ன வெடிகுண்டா வைச்சிருக்கோம்ன்னு இயக்குநர் அண்ணாகிட்ட கேட்டேன்.
எங்ககிட்ட பாம் எல்லாம் இல்லைன்னு சொன்னேன். ஆனா அவங்களுக்கு தமிழ் புரியல. எனக்கு வெறுப்பாகிப் போச்சு. விருது வாங்கினப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
என்னோட நண்பர்கள் எல்லார்கிட்டயும் போய் விருதைக் காட்டினேன். நான் விருது வாங்கும்போது எனக்கு விருது கொடுத்தவர் யார்ன்னே எனக்கு தெரியாது. ஆனா இப்போ தெரியும். அவர்தான் நம்ம குடியரசுத் தலைவர்னு டீச்சர் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு.. “ தப்பா எதாச்சும் சொல்லியிருந்தா அதைப் பேப்பர்ல போட்டுராதீங்கண்ணா.. எங்க போட்டோ வரும்ல..?” என்று ரமேஷ், விக்னேஷ் இருவரும் கேட்டுவிட்டு எங்க இப்போ எடுத்த போட்டவ காட்டுங்க” என ஒளிப்படக்காரரை அவர்களது உயரத்துக்கு உட்கார வைத்து படத்தைப் பார்த்தவர்கள்.. “ நல்லா எடுத்திருக்கீங்கண்ணா.. நீங்க நல்லா வருவீங்கண்ணா” என்றார்கள்.
thanx = the hiundiu
0 comments:
Post a Comment