விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment