தன்னம்பிக்கை கலைஞனாக ஜொலிக்கும் அஜித்துக்கு இன்று பிறந்த நாள்.
''என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா'' என்று 'பில்லா 2' திரைப்படத்தில் அஜித் வசனம் பேசியிருப்பார். அந்த வசனம் தான் அஜித்தின் வாழ்க்கையும் கூட.
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாழும் நடிகர் அஜித் என்பதைத் தெரிந்துகொள்ள அஜித் வரலாறைப் புரட்டியே ஆக வேண்டும்.
பைக் மெக்கானிக் நடிகன் ஆன கதை
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட அஜித் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார். பைக், கார் மீது ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார். ரேஸில் கலந்துகொள்ள போதிய பணம் இல்லாததால் சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மிக விரைவில் அஜித்துக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. 1991-ல் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். துரதிர்ஷ்ட வசமாக அப்படத்தின் இயக்குநர் மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு 1992-ல் 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோவாக நடித்தார். 1993-ல் 'பிரேம புஸ்தகம்' ரிலீஸ் ஆனது. இதே ஆண்டில் தமிழில் செல்வா இயக்கத்தில் அஜித் நடித்த 'அமராவதி' ரிலீஸ் ஆனது.
அதற்கடுத்து 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜாவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்தார் .
வஸந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அஜித்தை தமிழ் சினிமா நடிகனாக ஏற்றுக்கொண்ட தருணம் இது.
'காதல் கோட்டை', 'காதல் மன்னன்' படங்கள் அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன. ஆசை நாயகன் அஜித் காதல் நாயகனாகவும், ஆக்ஷன் ஹீரோகவும் மாறிய காலகட்டம் இது.
'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தார்.
'முகவரி', 'சிட்டிசன்', 'பூவெல்லாம் உன் வாசம்', 'வில்லன்', 'அட்டகாசம்', 'வரலாறு', 'கிரீடம்', 'பில்லா', 'மங்காத்தா', 'ஆரம்பம்', 'வீரம்', 'என்னை அறிந்தால்' என படங்களின் வெற்றிப் பட்டியல் நீள்கிறது.
அஜித்தை ஏன் கொண்டாடுகிறார்கள்?
அஜித் தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை. வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை. ஆனால், ஏன் அஜித்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலகமே கொண்டாடுகிறது. காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக இருக்கிறார். அது எப்படி சாத்தியமானது என்பதை நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் படிக்க வேண்டியது அவசியம்.
உதவி இயக்குநர்களின் தோழன்
அஜித் நடித்த பல படங்கள் சறுக்கல்களைச் சந்தித்தன. தோல்விப் படங்களுக்காக அஜித் கவலைப்படவில்லை. கார் ரேஸ் கவனத்தையும் திருப்பி சினிமாவில் மட்டும் முழு மூச்சாக இறங்கினார்.
அதற்காக உதவி இயக்குநர்களை இயக்குநராக்கி அழகு பார்க்கவும் அஜித் தவறவில்லை. பெரும்பாலான இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்தது அஜித் தான்.
சரணின் முதல் படம் 'காதல் மன்னன்'. ஜேடி ஜெர்ரியின் முதல் படம் 'உல்லாசம்'. எஸ்.ஜே சூர்யாவுக்கு முதல் படம் 'வாலி'. முருகதாஸின் முதல் படம் 'தீனா'. ஏ.எல்.விஜய்யிடன் முதல் படம் 'கிரீடம்'.
ரமேஷ் கண்ணாவின் முதல் படம் 'தொடரும்'. ராஜூ சுந்தரத்தின் முதல் படம் 'ஏகன்'. சிங்கம் புலியின் முதல் படம் 'ரெட்'. 'ராசி', 'ஆழ்வார் ' என்று பல படங்கள் அறிமுக இயக்குநர்கள் படங்கள்தான்.
நடிகர்களின் நண்பன் அஜித்
'பாசமலர்கள்' படத்தில் அரவிந்த் சாமியுடனும், 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யுடனும் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு அஜித்தும், பிரசாந்தும் 'கல்லூரி வாசல்' படத்தில் இணைந்து நடித்தனர். 'உல்லாசம்' படத்தில் அஜித்தும், விக்ரமும் இணைந்து நடித்தனர்.
'பகைவன்' படத்தில் அஜித் - சத்யராஜ், 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் - அஜித் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 'ஆனந்த பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படங்களில் அஜித்தும் - கார்த்திக்கும் நடித்தனர்.
'தீனா' படத்தில் சுரேஷ் கோபி, 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன், 'ஆரம்பம்' படத்தில் ஆர்யா, 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் என அஜித்துடன் நடித்தவர்களின் பட்டியல் நீண்டது.
ரிஸ்க் எடுக்கப் பழகியவர்
எந்த வித பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த அஜித் தோல்வியைக் கண்டது கலங்கியதில்லை. முதுகுத் தண்டில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுக்கத் தயங்கியதில்லை.
இதனால் அஜித் உடல் குண்டானது. ஆனால், அதற்காக கிண்டல் செய்பவர்களைக் கண்டு மனம் வருந்தாமல் உடல் எடையைக் குறைத்தார்.
'ஆரம்பம்' திரைப்படத்தின் போது கூட காலில் அடிபட்டு ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு அஜித் ஆளானார்.
அக்கறையில் அண்ணன்
தன்னுடன் இருப்பவர்கள், நடிப்பவர்கள் நலனில் அக்கறை காட்டுவதில் அஜித்துக்கு அலாதிப் பிரியம் உண்டு.
'வான்மதி' படத்தில் நடித்த போது அஜித்துக்கும், ஸ்வாதிக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருரும் காதலிக்கவில்லை என்று மறுத்தனர். அதற்குப் பிறகு, ஸ்வாதிக்கு நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் 'உன்னைத் தேடி' படத்தில் நடிக்கும் போது, ஸ்வாதிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த தமன்னா இடைவெளிக்குப் பிறகு 'வீரம்' படத்தில் நடிக்க வைத்தார்.
கௌதம் மேனன் கடன் பிரச்னையில் தவித்த போது அஜித் உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட் குறித்த முனைப்பில் பரபரப்பாக இருந்த கௌதம் மேனனிடம், படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி? என்று அஜித் கேட்கவில்லை. உங்கள் பிரச்னை தீர்ந்ததா? என்றுதான் கேட்டார்.
தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
விளம்பரம் பிடிக்காதவர்
தன் படமாக இருந்தாலும் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளார் சந்திப்பு, வெற்றி விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர் அஜித். என் படத்தை ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்று கூட சொல்லியதில்லை.
கார் ரேஸ் - தீராக் காதலன்
கார் ரேஸில் கடும் பயிற்சியால் ஃபார்முலா 2 பந்தயத்தில் கௌரவமான இடத்தைப் பிடித்தார். 30 வயதைக் கடந்த பிறகு சிறுவயதைக் கனவை நிறைவேற்றிக்கொண்டவர்.
'தீனா' படத்தில் ஒரு காட்சி வரும். தன் தங்கை சின்ன வயதில் ஆசைப்பட்டதையெல்லாம் டீன் ஏஜ் கடந்த பிறகு வாங்கிக் கொடுப்பார்.
சின்ன வயசுல ஆசைப்பட்டது. ஆனா, கொஞ்சம் லேட்டா கிடைச்சிருக்கலாம். எப்பவுமே கிடைக்கலைன்னு ஆகிடக்கூடாதுல்ல என்ற தொனியில் வசனம் பேசி இருப்பார். கார் ரேஸைப் பொறுத்தவரையில் அஜித்துக்கு அப்படித்தான் நடந்தது.
அடுத்த எம்ஜிஆர் அஜித்: சோ புகழாரம்
எம்ஜிஆரால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அதனால்தான் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்டதோடு, ரசிகர்கள் வழிபடுகின்றனர். மிகப்பெரிய ரசிகரகளை ஈர்ப்பதில் எம்ஜிஆருக்கு அடுத்து அஜித் இருக்கிறார் என்று சோ ராமசாமி புகழ்ந்தார்.
அஜித் மீது இருக்கும் பாப்புலாரிட்டி அளப்பரியது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அதை விட அதிக எதிர்பார்ப்புடன் அடுத்த படத்துக்காக காத்திருக்கிறார்கள். காரணம், அஜித் நடிகராக மட்டுமில்லை. நல்ல மனிதராகவும் ஜெயித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து அஜித் தன் செயல்களில் இருந்து மாறவே இல்லை. ஆனால், மக்கள் அஜித்தைப் பார்த்து தங்கள் கண்ணோட்டங்களை மாற்றிக்கொண்டார்கள். அதனால்தான், அஜித் படத்தில் பெரிதாய் நடிக்கத் தேவையில்லை. வந்தாலே போதும் என்று குதூகலிக்கிறார்கள்.
விஜய் , சூர்யா பார்வையில் அஜித்
விஜய்: ''அஜித்திடம் எனக்குப் பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான். என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரும் பங்குண்டு. நான்தம்பி என்றால் அவர் அண்ணன்.'' என்றார் விஜய்.
சூர்யா : ''அஜித் சார் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கார்னு தான் சொல்லுவேன். நேருக்கு நேர், நந்தா, கஜினி படங்கள்ல நடிக்க அஜித் சாருக்கு தான் முதல்ல வாய்ப்பு வந்தது'' என்றார் சூர்யா.
இந்த பாப்புலாரிட்டியை அழுக்குப் படாமல், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அஜித் மேன்மேலும் மிளிர வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.
வாசகர் கருத்து
அஜித் தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை. வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை. ஆனால், ஏன் அஜித்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலகமே கொண்டாடுகிறது காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக இருக்கிறார். - அருமையான பதிவு, கட்டுரையாளருக்கு பாராட்டுகள்.
கர்வம் ,சின்னபுத்தி ,சுயநலம் வீண்பெருமை இதுதான் வாழ்க்கைக்கு தேவை என வாழும் சில மனிதர்கள் (நடிகர்கள் ) நடுவே தனித்தன்மையுடன் வாழும் தல வாழ்க நலம் மட்டும் பலத்துடன் ...
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment