Tuesday, May 12, 2015

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?- இளங்கோவன் அடுக்கும் 12 காரணங்கள்

கர்நாடக அரசு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக மட்டுமே ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா என்பது நாட்டு மக்கள் அறிந்துகொள்கிற வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''18 ஆண்டு காலம் நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஜெயலலிதா மீதான் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் அளித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 அன்று மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் 5 ஆம் தேதி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தொடங்கிய விசாரணை, மார்ச் 11-ந் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் தான் விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கில் விசித்திரமானது என்னவென்று சொன்னால் அரசு வழக்கறிஞராக யார் இருக்கவேண்டும் என்பதை குற்றவாளி ஜெயலலிதா முடிவு செய்ய முயன்றதுதான். இதை தடுத்து நிறுத்த நீதிபதி குமாரசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பணிநீக்கம் செய்தது.
இதற்குப் பிறகு ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் எடுத்துரைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் குமாரசாமியின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
1. நீதிபதி குன்ஹா வழங்கிய 1136 பக்க தீர்ப்பில் 1.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று கூறியிருந்தார்,ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சம் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளார். இதை எந்த அடிப்படையில் செய்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.
2. அதேபோல நிறுவனங்கள், சொத்துக்காள், கட்டுமான மதிப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஏறத்தாழ ரூ.27 கோடி என்றும், இதில் சுதாகரனின் திருமண செலவு ரூ.6 கோடியே 45 லட்சம் என்றும் நீதிபதி குன்ஹா குறிப்பிட்டார். ஆனால், சுதாகரனின் திருமணச் செலவை ரூ.28 லட்சம்தான் என்று நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டுள்ளார்.
சுதாகரனின் திருமணம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக நடைபெற்றது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால், ஆவணங்களின் அடிப்படையில் இதைப் புரிந்துகொள்ள வேண்டிய குமாரசாமி ஏன் இத்தகைய மதிப்பீட்டை செய்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
3. நமது எம்ஜிஆர் நாளேட்டிற்கு சந்தா சேர்த்த வகையில் ரூ.13 கோடியே 83 லட்சம் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியானது என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இது சட்டப்பூர்வமான வருமானம் தான் என்று நீதிபதி குமாரசாமி கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
4. நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் 852-வது பக்கத்தில் ஜெயலலிதா வங்கிகளில் வாங்கிய கடனாக ரூ.23 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள்ள தொகையை கூட்டினால் ரூ.10 கோடி தான் வருகிறது. இதில் மட்டும் ரூ.13 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் கணக்கிட்டதனால் தான் அது 8.3 சதவீதமாக நீதிபதிகுறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தவறுதலாக சேர்த்ததைக் கழித்தால் நீதிபதி குமாரசாமியின் கணக்கின்படி 76.75 சதவீதமாக உயர்ந்துவிடுகிறது. இந்தக் கணக்கை சரிசெய்தாலே ஜெயலலிதா 20 சதவீதத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கருதப்பட்டு, தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் 10 சதவீதம் வரை அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமை உடையவர்கள் என்கிற அணுகுமுறையை கேட்டு எல்லோரும் வியக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை வருவதற்கு நீதிபதி குமாரசாமி கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
5. தமிழக ஊழல் தடுப்பு பிரிவினர் ஜெயலலிதா வீட்டில் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, 750 ஜோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைகடிகாரங்கள் என 1996 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய பறிமுதலான பொருட்களின் சொத்து மதிப்பை மதிப்பிடுவதில் நீதிபதிகுமாரசாமி முற்றிலும் தவறிவிட்டார்.
6. ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள நீதிபதி குமாரசாமி, அதில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறுகிற குமாரசாமி ஜெயலலிதா வழக்கில் அடிப்படை ஆதாரங்களுடன் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக தீர்ப்பு வழங்கியிருப்பதற்காக அவர் கூறுகிற காரணங்கள் மேல் முறையீட்டில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஏனெனில், அவரால் கூறப்படுகிற காரணங்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை.
7. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் எனக்கு ஒருநாள் காலஅவகாசம் வழங்கி, எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இது எவ்வகையிலும் நியாயமாக கருத முடியாது. எனக்கு வாதம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியிருப்பதில் உள்ள நியாயத்தை புறக்கணிக்க முடியாது.
8. உச்சநீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் கால அவகாசம் அளித்தார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை விட, இயற்கையான நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் சிறந்ததாக இருக்க முடியும்.
9. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதை அப்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், பி.வி.ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்த போது எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும் என்று கூறி, அதையும் ஒரு நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது எந்த வகையிலும் நியாயமில்லை. இது ஒருதலைப்பட்சமானது.
10. பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு 3 மாதங்களில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வழக்கு முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசரத்தின் காரணமாக நீதி மறுக்கப்பட்டதோ என்ற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த வழக்கை கூடுதலாக 6 மாதங்கள் நடத்தியிருந்தால் அதனால் என்ன நடந்துவிடப் போகொறது? இந்த அவசரத்திற்கு என்ன காரணம்?
11. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை ஊழல் தடுப்பு பிரிவினர் மதிப்பிட்டது ஏறத்தாழ ரூ.66 கோடி. ஆனால் உயர் நீதிமன்றம் மதிப்பிட்டது. ரூ.37 கோடி. இதில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.
12. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இது குறித்து கர்நாடக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக மட்டுமே ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா என்பது நாட்டு மக்கள் அறிந்துகொள்கிற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் ஊழல் தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
எனவே, கர்நாடக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.


thanx - the hindu

0 comments: