முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்க்கைக் கதையே ‘தி சோஷியல் நெட்வொர்க்’. பென் மெஸ்ரிக்கின் நாவலுக்கு ஆரோன் சோர்கின் திரைக்கதை அமைக்க இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டேவிட் ஃபின்செர். இந்த படத்துக்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. சிறந்த திரைக்கதை விருது அதில் ஒன்று.
பணக்காரர்கள் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும் மனோபாவம் நம் எல்லாருக்கும் உண்டு. அதனால்தான் பணக்காரர் பற்றிய கதை என்றால் உடனே படிக்கிறோம். ‘தி ஆக்சிடெண்டல் பில்லியனர்ஸ்’ என்ற புத்தகத்துக்கு அதனாலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. மார்க் ஸக்கர்பெர்க் உலகின் மிக இளம் பில்லியனர். எனவே அவர் எப்படி ஜெயித்தார் என்று தெரிந்துகொள்வதில் எல்லாருக்கும் ஆர்வம் இருந்தது.
இன்று வாட்ஸ் அப்பை வாங்கி விழுங்கிய ஃபேஸ்புக்கின் வீச்சும் வியாபாரமும் நமக்குத் தெரியும். ஆனால் இப்படி ஒரு சமூக வலைதளம் அமைக்க முடியும் என்று எப்படி எண்ணம் வந்தது? அதை இவ்வளவு பெரிய வியாபாரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? கடந்து வந்த தடைகள் என்ன? ‘தி சோஷியல் நெட்வொர்க்’ மார்க் ஸக்கர்பெர்க்கின் கதையை ஒரு ஜன்னலின் வழியாக நமக்குக் காட்டுகிறது.
இதை ஒரு நிர்வாகப் படம் என்றோ, தன்னம்பிக்கை பற்றிய படம் என்றோ, வியாபார நுணுக்கங்கள் நிறைந்த படம் என்றோ நினைத்துப் பார்க்காதீர்கள். இது ஒரு தனிமனிதனின் வியாபாரப் பயணம் பற்றிய படம். இதில் ஆசை, அறிவு, தொழில்நுட்பம், காதல், நட்பு, துரோகம், விரோதம், போட்டி என அனைத்தும் உண்டு. கதையைவிடச் சொல்லப்பட்ட விதத்தில் இது நல்ல திரைப்படமாகிறது.
காதலியின் நிராகரிப்பில் எரிச்சலடைகிறான் மார்க். உறவுகளைப் பக்குவமாகக் கையாளத் தெரியாத அவள், பிரிந்து செல்வதன் நியாயத்தைப் பார்க்கவில்லை. அவளைப் பழிவாங்க அவள் புகைப்படத்துடன் தன் பிளாக்கில் அவள் உருவ அழகைக் கொச்சைப்படுத்திப் பதிவேற்றம் செய்கிறான்.
பின் ஃபேஸ்மேஷ் என்று ஒரு தளத்தை உருவாக்கி அவர்கள் படிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பெண்களின் படங்களைப் பதிவேற்றம் செய்து வலைதளத்துக்கு வருகை தரும் ஆண்களை மதிப்பிடச் செய்கிறான்.
ஃபேஸ்மேஷின் பிரபல்யம் மார்க் ஜுகம்பர்கை நோக்கி மூலதனம் செய்யத்தக்க பணக்காரர்களை இழுத்துவருகிறது. ஹார்வர்ட் கனெக்ஷன் எனும் வளாகத்தில் உள்ள ஆண் பெண்களுக்கான டேட்டிங் தொடர்பை உருவாக்கித் தரும் வலைதளத்தை உருவாக்கச் சொல்கிறார்கள்.
அவர்களிடம் சம்மதித்த பின், தன் நண்பர்களிடம் தி ஃபேஸ்புக் எனும் மாணவர்களுக்கான வலைதளம் அமைக்கும் எண்ணத்தைக் கூற 1000 டாலர் நிதி கிடைக்கிறது. ஏல், கொலம்பியா, ஸ்டான்ஃபோர்ட் என்று பல முன்னணி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்புகிறது இந்த வலைதளம்.
ஸ்னாப்டீல் கம்பெனியின் நிறுவனர் மார்க்குக்கு இந்தப் புது வலைதளத்துக்கு “ஒரு பில்லியன் டாலர்” கனவு வேண்டும் என்று சொல்லி “தி” யை வெட்டி வெறும் ஃபேஸ்புக் என ஆக்கச் சொல்கிறார். பின் நடந்தவை அனைத்தும் சரித்திரம் எனச் சொல்லலாம்.
இதற்கிடையில் ஃபேஸ்புக்கின் வியாபாரக் கரு தங்களுடையது என்று வழக்குத் தொடர்கிறார்கள் ஹார்வர்ட் கனெக்ஷன் தளத்துக்கு மூலதனம் செய்தவர்கள். நிறுவனம் ராட்சஸத்தனமாக வளரும்போது தன்னுடன் நிறுவனத்தை வளர்த்த நண்பனின் பங்குகளை நீர்க்கச் செய்து அவனை வெளியேற்றம் செய்கிறான் ஜுகம்பர்க். இரண்டு வழக்குகளின் இடையில்தான் மொத்தப் படமும் சொல்லப்படுகிறது.
இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு தரப்புக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மார்க்கின் மனோபாவம் வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் எரிச்சலடையச் செய்கிறது. தீர்ப்பாகும் நேரம் மார்க் ஒருவருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த வண்ணம் இருக்கிறான்.
25 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 200 நாடுகளில் 500 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் மார்க் ஜுகம்பர்க்தான் உலகின் மிக இளைய பில்லியனர் என்றும் கூறி படம் முடிகிறது.
‘தி சோஷியல் நெட்வொர்க்’ படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் பல பாடங்களை உணர்த்தியது. உங்களுக்கும் அவை சம்மதமா என்று பாருங்கள்.
1.சமூகத் திறன் அதிகம் இல்லாத ஒருவன் சமூக வலைதளம் அமைத்து வெற்றிபெற்றது ஒரு முரண்நகை. வரும் தலைமுறைக்கான ஆளுமையை அது சித்தரிப்பது போலவும் எனக்குப் பட்டது. தன் காதலி, நண்பன், முதலீட்டாளன் என்று எந்த மனிதரிடமும் இணக்கமாக இல்லை. வியாபார வெற்றியும், பணமும் அவரை மாற்றியதாகத் தெரியவில்லை. சுற்றி வாழும் மனிதர்கள் மேல் உறவில்லாமல் வாழும் மனிதனின் ஆளுமையைப் படம் நிஜமாகக் காட்டியுள்ளது. பொருளாதார வெற்றிபெற்ற மனிதர்களின் பிழைகளை அறிவது முக்கியம்.
2. ஒரு சமூக வலைதளம் உருவாக்குவது என்று முடிவுசெய்து, அந்தத் திசையிலேயே தன் தன் எண்ணம், பேச்சு, செயல் எனத் தனது சக்தி முழுவதையும் கூர்மையாகச் செலுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை புது வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் பலர் எதிலும் வெற்றிபெறாதது ஏன் என்று புரிந்துகொள்ளலாம்.
3. கல்வி வளாகங்களின் கலாச்சாரங்கள் வியாபார எண்ணங்களைச் செழிப்பாக ஊக்குவித்தால் நிறைய வெற்றியாளர்கள் உருவாவது உறுதி. ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் படிப்பைப் போலவே தொழில் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றன. நம்மூர் ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம் கள்கூடப் படித்துவிட்டு வேலை தேடும் கூட்டத்தைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
4. தான் நம்புவதில் மிக உறுதியாக இருப்பது சுய தொழில் செய்பவரின் மரபணுக்களில் இருக்க வேண்டும். எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கி ஒரே திசையில் செல்ல இது முக்கியம்.
5. மார்க் ஜுகம்பர்க் வயது பற்றிய மதிப்பீட்டை உடைத்தெறிகிறார். 19 வயதில் தொடங்கும் தொழில் பயணம் அவரை உலகின் மிக இளைய பில்லியனராக்கியிருக்கிறது. உலகின் மிக இளைய தேசமான இந்தியா பல மார்க் ஜுகம்பர்க்குகளை உருவாக்க முடியும். அவர்களை லகான் போட்டுப் பிடிக்காமல் இருந்தாலே போதும்.
வலைதளம் மூலம் சமூகங்களை இணைத்தவனின் படம் இளைஞர்களுக்கான பாடம் என்று சொல்வேன்.
தொடர்புக்கு: [email protected]
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment