சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி என இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறது கடந்த ஆண்டு வெளியான ‘சைவம்’. அந்தப் படத்தின் இயக்குநர் விஜய் தற்போது விக்ரம் பிரபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கிறார்.
ஏற்கெனவே வரலாற்றுக் களத்தில் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் காதலை ஆழமாக வார்த்த இவர், தற்போது நிகழ்காலத்தின் காதலைக் கையில் எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து ’ தமிழுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது...
இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழலில் வசூல், விருது இரண்டையும் மனதில் வைத்துப் படத்தை இயக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
இயக்குநராக, எழுத்தாளராக ஒரு படத்தை உருவாக்கத் தொடங்கும்போது எனது முதல் எதிர்பார்ப்பு, அது வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான். இரண்டாவது அந்தப் படத்தின் தரம் பற்றி ரசிகர்களும் விமர்சகர்களும் தரும் அங்கீகாரம். சைவம் திரைப்படத்தைப் பொறுத்தவரை எந்தவிதச் சமரசமும் இல்லாமல் ஒரு ப்யூர் சினிமா பண்ண வேண்டும் என்று நானும் ஜி.வி. பிரகாஷ், நீரவ்ஷா, நாசர் உள்ளிட்ட எனது டீமும் ஆத்மார்த்தமாக உழைத்ததால்தான் சைவம் உருவானது. நா. முத்துக்குமாருக்கும் பாடகி உத்ராவுக்கும் கிடைத்த விருதுகளை எங்கள் எல்லாருக்கும் கிடைத்ததாகவே உணர்கிறோம்.
சைவம் படத்தை மேனகா காந்தி பார்க்க விரும்பினார் என்ற செய்தி காதுக்கு வந்தது. அது உண்மைதானா?
ஆமாம்! நான் இதுவரை இயக்கிய எந்தப் படத்துக்கும் கிடைக்காத சிறந்த விமர்சனங்கள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன. உங்கள் படத்தைப் பார்த்துவிட்டு இனி அசைவம் உண்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டோம் என்று நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் எனது இன்பாக்ஸை நிறைத்தன. எங்கள் மனசுக்கு மட்டும் நெருக்கமான படமாக அது தேங்கிவிடவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு பாக்யராஜ் சார் அதன் திரைக்கதை அம்சங்களை மனம் விட்டுப் பாராட்டினார்.
பாரதிராஜா சாரோ “என்னப்பா இப்படியொரு வாழ்வியலை எடுத்துவைத்துவிட்டாய். பல இடங்களில் கண் கலங்கி அழுதுவிட்டேன்” என்று கூறி நெகிழவைத்தார். புளூகிராஸ் அமைப்பின் நிறுவனர் சின்னி கிருஷ்ணா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அமலா நாகார்ஜுனுக்குச் சொல்ல, அவரும் படத்தைப் பார்த்துவிட்டு மேனகா காந்திக்குத் தெரிவிக்க, அவர் படத்தை மிகவும் ஆவலோடு பார்த்துவிட்டு, இந்தப் படத்தைப் பற்றி நரேந்திர மோடிக்குத் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார்.
இது என்ன மாயம் என்ற தலைப்பே காதல் சொல்கிறதே?
எனது ஒவ்வொரு படமும் ஒரு ஜானரில் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கதைகளை முடிவு செய்து இயக்கியிருக்கிறேன். மதராசப்பட்டினம் ஒரு பீரியட் லவ் ஸ்டோரி. அதில் காதலின் உணர்ச்சிகளை ஒரு எல்லைக்கு அப்பால் எடுத்துச் செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை எனக்கு இருந்தது.
இந்தப் படம் அந்த எல்லைகளை உடைத்துக்கொண்டு காதல் பிரவாகமாக வந்திருக்கிறது. ஒரு முழுமையான அழகான லவ் ஸ்டோரி இது. வயது வித்தியாசங்களைக் கடந்து அனைவரது இதயத்தையும் கவரும் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது.
இந்தக் காதல் கதையில் எதைப் புதிதாக எதிர்பார்க்கலாம்?
காதல் என்ற உணர்ச்சி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழைப் போலவே அதுவும் மூத்த உணர்ச்சிதான். ஆனால் காதல் முகிழ்க்கும் அந்தத் தருணம்தான் மிக அழகானது. அது எப்போது முகிழ்க்கும் எந்தச் சூழ்நிலையில் முகிழ்க்கும் என்பதைக் காதல் தேவதையால்கூடக் கணிக்க முடியாது. அதுதான் இந்தக் கதையின் காதல் பயணத்தைத் தொடங்கிவைக்கிறது.
படத்தில் இரண்டு காலகட்டங்கள் இருக்கின்றன. ஒன்று கல்லூரி வாழ்க்கை; மற்றொன்று நிகழ்கால வாழ்க்கை. நாம் நம்மால் வெளிப்படுத்த முடியாத காதலை அதன் நெருப்பு அணைந்துவிடாமல் மனசுக்குள் அடைகாத்து வைத்திருப்போம். அப்படி அடைபட்டுக் கிடந்த காதலை நிகழ்கால வாழ்க்கை விடுதலை செய்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இது விடுதலையா இல்லை இன்னொரு சிறையா என்பதுதான் இந்தப் படம்.
காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இதுவரை விக்ரம் பிரபுவுக்குச் சரியான வாய்ப்பு அமையவில்லை. அந்த மாயத்தை இந்தப் படம் செய்திருக்கிறதா?
விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்தாலும் அதில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இதில் ஒரு முழுமையான ரொமாண்டிக் ஹீரோவாக அருண் என்ற கதாபாத்திரத்தில் பின்னியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்குக் கொஞ்சம் குறையாமல் கீர்த்தி சுரேஷ் மாயா என்ற கேரக்டரில் மாயம் செய்திருக்கிறார். முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ்.
விஜய், ஜி.வி. பிரகாஷ், நா. முத்துக்குமார், நீரவ்ஷா, ஆன்டணி. இந்தக் கூட்டணியைத் தொடர்ந்து இயக்குவது எது?
நட்பும் புரிதலும்தான். எங்கள் கூட்டணிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கொஞ்சம்கூடக் குறையாததால் எங்கள் பொறுப்பும் படத்துக்குப் படம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
உங்களது ஒவ்வொரு படத்திலும் ஜி.வி.பி.யும் சைந்தவியும் இணைந்து பாடி ஒரு பிராண்டட் மெலடி பாடலைத் தந்துவிடுகிறார்கள். இந்தப் படத்தில் அந்த வரிசைப் பாடல் இருக்கிறதா?
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒரு முழு நீள ரொமாண்டிக் படத்துக்கான இசையை ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்குக் கொடுத்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுமே வெற்றிபெறும். அதில் நீங்கள் குறிப்பிடும் அந்தப் பாடல் ‘இரவாக நீ.. நிலவாக நான்’ என்று தொடங்குகிறது. ஜி.வி.பி-சைந்தவி இருவரும் இணைந்து பாடி உள்ளனர்
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment