ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியதற்கான காரணங்களை விவரித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்படுவது தொடர்பான செய்தி நேற்று வெளியானது. இதையடுத்து அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தயாரிக்கும் பணியில் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் இறங்கினர். சுமார் 12 மணி நேர ஆய்வுக்கு பின்னர் 18 பக்க வாதத்தை அவர்கள் தயாரித்தனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பாட்டீலிடம் ஆச்சார்யா தனது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். 18 பக்கங்களில் 23 அம்சங்களை எழுத்துபூர்வமாக வைத்தார் பி.வி.ஆச்சார்யா.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்த வழக்கில், கர்நாடக அரசை எதிர் மனுதாரராக சேர்க்காமலேயே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு. குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த வழக்கை விசாரித்த ஒரே காரணத்துக்காக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜெயேந்திர சரஸ்வதி மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, இந்த வழக்கில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகள் தரப்பில் செயல்படும் தமிழக அரசால் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டிருக்கக் கூடாது. அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான வருமானத்துக்கு அதிக சொத்து சேர்த்தல், கூட்டுச் சதி செய்தல், பினாமி சட்டத்துக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்கள், சாட்சியங்கள் நீதிமன்றம் தரப்பில் கொண்டுவரப்பட்டன.
அதனை அடிப்படையாக வைத்து பெங்களூரு நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார்.
இந்த வழக்கில் 32 போலியான தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல கோடு ரூபாய் பணப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது. இந்த 32 நிறுவனங்களிலும் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் நிர்வாக இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் 1991-96 காலகட்டத்தில் 52 புதிய வங்கிக் கணக்கு தொடங்கி வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பணத்தை - பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களின் வாக்குமூலம் மூலம் உறுதியாகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதி குன்ஹா, ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை மூலம் ரூ.14 கோடி வருமானம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். அந்த நிர்வாகத்தில் அவ்வாறு வருமானம் வரவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பினாமியாக செயல்படுகிறார்கள் என்பது பினாமி சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம் - வைர நகைகள், ரூ.19 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், தமிழகம் முழுக்க இருக்கும் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர்.
1991-96 காலகட்டத்தில் இருந்த வருமானமும் சொத்து மதிப்பும் முந்தைய மதிப்புக்கும், பிந்தைய மதிப்புக்கும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை எனத் தெளிவாக தெரிய வருகிறது.
எனவே, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் கூட்டுச் சதி செய்தல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பிரிவின் கீழ் உரிய தண்டனையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment