எந்த விமர்சனத்தை அனுமதிப்பது, எதைத் தடுப்பது என யார் தீர்மானிப்பது?
அரவிந்தன்
நடிகை சுஹாசினி, தான் பேசுவது என்னவென்று புரிந்துதான் பேசுகிறாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. “எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இந்தப் படத்தைப் பத்தி எல்லாம் எழுதணும். நீங்க எல்லாம் இருக்கும்போது எல்லோரையும் எழுத விட்டுடாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க. அப்படி விட வேண்டாம்” - மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ இசை விழாவில் பத்திரிகையாளர்களுக்கு சுஹாசினி கொடுத்திருக்கும் அறிவுரை இது.
அபத்தமான வகைப்பாடு
ஒரு துறையில் பல காலம் இருந்து, சில வெற்றி களை அல்லது விருதுகளைப் பெற்றவர்கள்தான் திறமை சாலிகள் என்றால், புதிதாக யாரும் எதிலும் நுழையவே முடியாது. ஆகவே ஒரு சிலரைப் பார்த்து, “நீங்கள் திறமை உள்ளவர்கள், நீங்கள் எழுதுங்கள்” என்று சொல்வது அசட்டுத்தனம்.
தகுதியுள்ளவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று சிலரை சுஹாசினி தரம் பிரிக்கிறார். உதாரணத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானைச் சொல்கிறார். ரஹ்மான் என்றில்லை, இளையராஜா, மணிரத்னம், கமல்ஹாஸன், சிவாஜி கணேசன் என எல்லாத் திறமையாளர்களுமே தங்கள் திறமையை முதல் முயற்சியிலோ அல்லது அடுத்தடுத்த முயற்சிகளிலோ வெளிப்படுத்தியவர்கள்தான். அவர்கள் திறமை மீது அவர்களுக்கும் வேறு சிலருக்கும் இருந்த மதிப்புதான் அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்த வாய்ப்புதான் அவர்கள் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பிறகுதான் அவர்கள் ‘தகுதியுள்ளவர்கள்’ஆக அடை யாளம் காணப்பட்டார்கள். பத்திரிகையில் எழுதுபவர் களும் அப்படித்தான். திறமையை நிரூபித்துவிட்டுத் தான் உள்ளே நுழைய வேண்டும் என்றால், அனேக மாக யாருமே உள்ளே நுழைய முடியாது. எனவே, தகுதியுள்ளவர்கள் என்னும் வகைப்பாடே அபத்தமானது.
அனுபவம் இல்லாதவர்களிடம் பிரமிப்பு
வரலாற்றில் முதல்முறையாக, எந்த அமைப்பின் பின்புலமும் இல்லாதவர்களும் தங்கள் கருத்தைப் பொது வெளியில் முன்வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். “யார் வேண்டுமானாலும்” எழுதக்கூடிய, “மவுசைப் பிடித்தவர்கள்” எல்லாம் எழுதக்கூடிய இந்தக் களத்தில்தான் இன்று தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கின்றன. சமூகப் புரட்சிகளுக்கான வித்துகள் விழுகின்றன. புத்திசாலி என்று எங்கும் சான்றிதழ் வாங்கிவர வேண்டிய அவசியம் இல்லாமலேயே பலரும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்ளக்கூடிய களமாக இது உருப்பெற்றிருக்கிறது. அனுபவமும் அமைப்பு பலமும் இருப்பவர்களைவிடவும் சிறப்பாகவும் கூர்மையாகவும் இவர்களில் சிலர் செயல்படுகிறார்கள். வலைதளங்களின் தெறிப்புகளில் சிலவற்றை அச்சு ஊடகங்கள் தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, எந்த அனுபவமும் சான்றிதழும் இல்லாதவர்கள் இவ்வளவு சுருக்கமாக, இவ்வளவு அபாரமாக எழுதுகிறார்களே என்னும் பிரமிப்பு ஏற்படுகிறது.
ஒரு படைப்பு பொதுவெளிக்கு வந்துவிட்டதென்றால், எல்லா விதமான விமர்சனங்களையும் அது எதிர் கொள்ளத் தயாராகத்தான் இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் எல்லா மேதைகளுக்கும் எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தும். கடவுள்களும் அவதார புருஷர்களும் மகான்களும் சாதனையாளர்களும் மகா கலைஞர்களுமேகூட இதற்கு விதிவிலக்கல்ல.
ஜனநாயகத்துக்கு எதிரான அதிகாரக் குரல்
அது சரி, அவர்களை எழுதவிடாதீர்கள் என்று அம்மையார் கேட்டுக்கொள்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? எழுத விடாதீர்கள் என்னும் வேண்டு கோளுக்குப் பின் இருப்பது கடைந்தெடுத்த அதிகார உணர்வு. மேட்டிமைத்தனமான இந்த அதிகாரக் குரல் ஜனநாயகத்துக்கு எதிரானது. கடும் கண்டனத்துக்கு உரியது. இன்று அவர்களை எழுத விடாதீர்கள் என்று சொல்லும் இந்தக் குரல், நாளை வேறொரு பிரிவினரை எழுதத் தெரியாதவர்கள் என வரையறுத்து அவர்களையும் எழுத விடாதீர்கள் என்று சொல்லும். படிப்பறிவில்லாதவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று சில ‘மேதாவிகள்’ அவ்வப் போது சொல்வார்களே அதைப் போலத்தான் இது.
மாற்றுப் பார்வைகளும் கோணங்களும்
எதிர்மறை விமர்சனங்களால் மட்டுமே தோல்வி அடைந்த படங்கள் மிகமிகக் குறைவு. ஒரு படம் கருத்து, கலைத் தன்மை, படமாக்கப்பட்ட விதம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை முதலானவவற்றின் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வெகுஜன மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதில் வலுவாக இருந்தால், அந்தப் படம் ஓடிவிடும். விமர்சகர்களிடம் திட்டு வாங்கிய எத்தனையோ படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன. மோசமான படம் என்று பரவலாகப் பெயர் வாங்கிய படங்களும் பார்வை யாளர்களை இருக்கையில் உட்காரவைக்கும் ஒரே தகுதியால் வெற்றிபெற்றிருக்கின்றன. விமர்சகர்கள் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிய படங்கள் கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன. அச்சு ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற பல படங்கள், சமூக வலைதளங்களில் சாதகமான விமர்சனங்களைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஊடகங்களில் வெளிப்படாத மாற்றுப் பார்வைகளும் கோணங்களும் சமூக ஊடகங்களில் வெளிப்படுகின்றன. கோடிக் கணக்கில் செலவுசெய்து விளம்பரப்படுத்தப்படும் ஒரு படம், ஒரு சில குறுஞ்செய்திகளாலும் ட்விட்டர், ஃபேஸ்புக் குறிப்புகளாலும் தோல்வியடையும் என்றால், அது படத்தின் உள்ளார்ந்த பலவீனத்தையே காட்டும்.
மணிரத்னத்தின் பார்வை
நல்லவேளையாக மணிரத்னம் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார். “வலைதளங்களில் வரும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் இன்றைய சமூகம். முன்பு இந்த விமர்சனங்கள் டீக்கடையில் இருந்துவந்தன. இப்போது அதையே ட்விட்டர் தளத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். முன்பு கருத்துச் சொல்வதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. இப்போது அதற்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ‘தகுதியுள்ளவர்கள்’ பற்றிப் பேசும் சுஹாசினி, தன் கணவரிடம் முதலில் அதை விவாதிப்பதே நல்லது.
சுஹாசினியின் பொறுப்பற்ற பேச்சு
இன்று திரைப்படத் துறையைப் பீடித்துவரும் பிரச்சினைகள் மிகத் தீவிரமானவை. கேட்டால் ரத்தக் கண்ணீர் வரும் அளவுக்குப் பிரச்சினைகள் முற்றியிருக்கின்றன. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்வரை செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. பலராலும் பாராட்டு பெற்ற படங்கள்கூட வந்த சுவடு தெரியாமல் மூன்றாவது நாளே திரையரங்கிலிருந்து தூக்கப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான பல இடங்களிலும் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், திரையரங்கில் திரைப்படங்களை ஆதரிக்க ஆளில்லை.
பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் கொண்ட இந்தப் பிரச்சினையை ஆழமாக அலசி, விவாதித்துத் தீர்வுகாண வேண்டிய நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் மூலம் விவகாரத்தைத் திசைதிருப்புவது சூழலை மேலும் பலவீனமாக்கவே உதவும். அதிலும் “அவர்களை அனுமதிக்காதீர்கள்” என்பதுபோன்ற பேச்சு, சூழலை மேலும் மாசுபடுத்தவே செய்யும். விவரம் கெட்ட விமர்சனங்களைப் பார்த்து மனம் வருந்துபவர்கள் அதை விமர்சிப்பதில் தவறில்லை. அந்த விமர்சனமாவது கொஞ்சம் விவரத்துடன் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை!
- அரவிந்தன்,
தொடர்புக்கு: [email protected]
நன்றி - த இந்து
- முதலில் இந்த எதிர் வினை தேவை இல்லாதது, திருமதி. சுஹாசினி அவர்களின் கருத்தை ஏன் எதிக்க வேண்டும், ஒருவரின் கலை விமர்சனம் செய்பவருக்கு அந்த துறையில் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் இல்லை. உதாரணதிற்கு ஒரு கர்நாடக இசை கச்சேரியை பற்றி விமரிசனம் செய்ய இசை வித்தகனாக இல்லை கொஞ்சம் சுருதி தாள லயங்கள் பற்றியாவது தெரிய வேண்டியது அவசியம் அல்லவா. சில வருடங்களுக்கு முன்பு வரை பலர் ஆனந்த விகடன்/குமுதம் விமரிசனத்தை படித்த பின்புதான் படம் பார்க்க செல்வார்கள். யாரும் ஒரு படைப்பை விமர்சனம் செய்ய கூடாது என்பது அல்ல, நான் பணம் கொடுத்து படம் பார்ப்பேன் எனக்கு பிடிக்கவில்லை நான் விமரிசனம் செய்வேன் என்பது ஒரு தலை பட்சமானதாகவே இருக்கும். இது ஒன்றும் கருத்து உரிமை பறிப்பது அல்ல. தயவு செய்து ஆக்க பூர்வமான விசயங்களில் நமது கவனத்தை செளுதலமே இந்த சினிமா என்ற துறையை விட்டு விடலாமே.Points215
- யாகாவாராயினும் நாகாக்க ; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு. நடிகை நடிகையாகத்தான் இருக்கவேண்டும் மேடை ஏறி பேசக்கூடாது நல்ல பேசத்தெரிந்த பேச்சாளர்கள் தான் பேசவேண்டும் யார்வேண்டுமானாலும் மைக் கிடைத்தால் பேசலாமா ? என்று யாராவது இவரை பார்த்து கூறினால் என்ன வாகும். ? எந்த நிலையிலிருந்து எந்த உச்சத்தை அடைந்தவராகினும் அடக்கம் வேண்டும் குறிப்பாக நாவடக்கம் வேண்டும். இல்லை என்றால் அய்யன் திருவள்ளுவர் கூற்று அதனை உணர்த்தும். அன்பன் க.சுப்பராயன்.ராசிபுரம்.Points1285
- what wrong in her comments. Let me know, like you even she has right to say. Hope we have better things to do in life.Suresh Up Voted
- சுஹாசினி சொன்னதில் பெரும் உண்மையும் இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்களிடம் பேனாவோ MOUSE ஓ இருக்கிறது என்ற எண்ணத்தில் கண்ட குப்பைகளை எழுதி குவிகின்றனர். இதுகளை வெளியிடவும் பத்திரிகைகள் காத்து கொண்டு இருக்கின்றன . முதலில் எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் , தாங்களும் விமரிசனத்துக்கு உட்பட்டவர்களே என உணர வேண்டும் . இவர்களே காசு வாங்கி கொண்டு , வாங்கிய காசுக்கு ஏற்ப கட்டுரைகள் , செய்திகள் எழுதுவது இல்லையா என்ன ?Points43355SankarGovindan Up VotedJayennessJayaraman Down Voted
- உயரத்தை எட்டிவிட்டதாக நினைத்து..., தான் சரிகிறோம் என்பதை தாங்க முடியாமல்.., நிலை நிறுத்த பேசியதுதான்.Points1500Haja Up VotedJayennessJayaraman Down Voted
- சுஹாசினி மேடம் 200 வருடங்கள் பின்தங்கி இருக்காங்க. ஹலோ மேடம், முன்பெல்லாம் உங்க பிரிவு சார்ந்தவங்க தான் ரொம்ப குரல் குடுப்பாங்க.. ஆனா எல்லா பிரிவினரும் தத்தம் கருத்துக்கள சொல்ற உரிமைய இப்ப இணைய தளம் கொடுத்து இருக்கு. அதை வேணாம்னு சொல்ற உரிமை உங்களுக்கு கிடையாதுJayennessJayaraman Down Voted
- எல்லோருக்கும் பேசு வதிருக்கு உரிமை உள்ளது . அதேபோலே வமர்சிபதுக்கும் உரிமை உள்ளது . இந்த விஷயதிருக்கு நாம் இவளவ்உ . முன்னிரிமை தருகிறோமே . அதே போலே மற்ற எல்ல உரிமைகளுக்கும் நாம் முன் நிற்க வேண்டும். இந்த சுமுகத்தில் இப்பொழுது தான் சிறுது சிறிதாக சில விஷயங்களை ஜனநாயக ரீதி யாக விமர்சின்கின்றோம் . கேட்பவன் கேட்டல் நயமாக கீடைஇக்க வேண்டியது கீஇட்டும்
- சுஹாசினியின் கருத்து முற்றிலும் தவறானது. மௌசை கையில் பிடிப்பவர்கள் முட்டாள்கள் என்பது போல் சொல்கிறார். எம்ஜியார் எனும் மாமனிதரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது அடிமட்ட பாமரமக்கள் தானே! பாலைவனச்சோலை படத்தில் சுஹாசினி நடிப்பின் அரிச்சுவடிகூட தெரியாமல் தான் இருந்தார். நடிகைக்கு இருக்க வேண்டிய இயல்பான வசீகரமும் அப்போது அவருக்கு இல்லை. இருந்தாலும், அவரது இயல்பான நடிப்பை ரசிகர்கள் அங்கீகரிக்கவில்லையா? எழுத்தாளர்களும், கதாசிரியர்கள் மட்டுமே திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்கிறாரா சுஹாசினி? அப்படியென்றால், திரையரங்குகள் எல்லாம் ஈ ஆடிவிடுமே? மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் தோல்வி சுஹாசினி அய் இப்படி பேச வைத்திருக்கிறது. நல்ல படங்கள் எப்போது வெற்றி பெரும். தோல்வி அய் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கலைஞர்களுக்கு வேண்டும். சுஹாசினி தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.Points995
- முன்னொரு காலத்தில் சினிமா நிருபர்கள் என்பவர்களை 'கவர்' செய்துவிட்டால் படத்தை பற்றிய நல்லவிதமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிடலாம் என்கிற நிலை இருந்தது.பத்திரிகைகள் சற்று எச்சரிக்கையுடனே படங்களை விமர்சிக்கும் நிலையம் இருந்தது.40 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜியார் படங்கள் சரியில்லை என கூறிவிட முடியாது.விஜயின் ஆரம்பகால படத்தை விமர்சித்த பத்திரிகை கூட அத்தகைய எதிர்ப்பை கண்டு பணிய நேரிட்டது.இன்றைக்கு இணையம் எல்லோருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் வழங்கியுள்ளது.அதில் எல்லை மீறல்கள் இருப்பினும் பொதுவாக தமிழ் சமூகம் அதனை நாகரீகமாகவே கையாளுகிறது.தமிழில் எளிமையாக எழுதுகின்ற வசதியும் இன்றைக்கு பலரின் உழைப்பால் தோன்றியுள்ளது.இத்துணை ஜனநாயக தன்மைகளையும் மறுத்து சுகாசினி தனது கணவர் படத்தின் வெளியீட்டிற்கு முன் பேசியிருப்பது அவரின் அச்சத்தை மட்டுமல்ல ஆணவத்தையும் காட்டியிருக்கிறது.அவர் கணவர் காலத்தை உணர்ந்து படம் எடுத்தால் அது வெற்றிபெறும்.இந்த படமும் தோல்வியடைந்தால் அவர் கணவர் கட்டாய ஓய்வுக்கு தள்ளப்படுவார் என்கிற பதட்டமே இந்த மேட்டிமைத்தனத்தின் காரணம்!பரிதாபம்!Points3995
- விமர்சனங்கள் திரைபடத்தை பற்றியதாய் இருந்தால் ஏற்றுகொள்ளலாம். ஆனால் சமூக வலைதளங்களில் உலவி வரும் விமர்சனங்கள் நடிகர்களை பற்றியதாய் இருக்கிறது. இதனால் திரைப்படங்களின் தரம் குறைந்து வருகிறது. மேலும் நல்ல படங்கள் கவனத்தில் இருந்து வெளியேறுகிறது. "விமர்சனம் நமது உரிமை. ஆனால் சற்று பொறுப்புடன் விமர்சிப்போம்."Points165SankarGovindan Up Voted
- இந்திரா படம் வெளிவந்த பொழுது பத்திரிகை விமர்சனம் இந்திரா படம் எதிர்பார்த்த அளவு இல்லை, பல காட்சிகள் தூக்கத்தை வரவழைப்பதாக உள்ளது திரும்ப திரும்ப ஒரேமாதிரியான காட்சிகள் தென்படுகின்றன என்று எழுதியதற்கு, இவர் பத்திரிக்கையாளர்கலேயே கடுமையாக எதிர்த்து இவர்களுக்கு படம் எடுக்க தெரியுமா? படம் எடுக்க தெரியாதவர்கள் எப்படி விமர்சனம் செய்யலாம்? என்று குரல் எழுப்பினார், பின்னர் பத்திரிக்கயாலராக இருந்து சினிமா டைரக்டர் ஆன பலரை பற்றிய செய்தியுடன் துக்ளக் பத்திரிகை ஒரு செய்தியே வெளியிட்டது, இவர் கருத்து விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத இவர் மனோபாவத்தையே காட்டுகிறது, இணைய வழி கருத்து பரிமாற்றத்திற்கு பிறகே இங்கு எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் கருத்துக்களின் புதிய பரிமாணங்களும் அதிகரித்தும் வரும் அதே வேலையில் பலருக்கும் ஒரு புதிய உத்வேகத்தையும் கொண்டு வந்துள்ளது. கால மாற்றத்தை, வரவேற்க வேண்டிய ஒரு செயலை தனது சுயலாபத்திற்கு தடை ஏற்படுத்த நினைப்பது கண்டனத்திற்கு உரியது.Points680
- இணையம் வந்தப் பிறகே பலரின் கருத்துகள் சுதந்திரமாக வெளிவருகின்றன. அதனாலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அன்றும் பல துறைகளில் பல திறமையாளர்கள் இருந்தனர். ஆனால் செல்வாக்கு பெற்ற ஒரு சிலரே நிலைத்தனர். பலருக்கு எந்த வாய்ப்புமே கிடைக்கவில்லை. உதாரணமாக ஒரு பத்திரிகைக்கு கதை அனுப்புபவர்களின் எத்தனை பேர் பிரபலமடைந்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதே போல திரைப்பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் எத்தனை பேர் பிரபலம் என்பதையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஊடகங்கள் இணையம் வந்தப் பிறகே பல திறமையாளர்கள் வெளிவந்திருக்கின்றனர். விமர்சனங்களும் பாராட்டுகளும் வெளிப்படையாக வந்தப் பிறகே திறமையும் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட நினைத்தால் அதோ கதி தான். அதை புரிந்துக்கொள்வது நல்லது.Points715
- சரியான குட்டு. இதுபோல் இன்னும் சில சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு குடுக்கவேண்டும். நல்ல கட்டுரை. சமீப காலமாகவே நம் நாட்டில் அரசியல், சினிமா, விளையாட்டு , மற்றும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரம். இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம் இவர்களுக்கு எதிர் கருத்து உடைய மக்களுக்கு மட்டும் எந்த கேள்வி கேட்கும் உரிமை கிடையாது என்று நினைத்து அதற்கு ஏற்ற மாதிரி செயல் பட்டுவருகின்றனர். இதை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு. முதலில் மக்களாகிய நாம் இவர்கள் செய்யும் வேலைக்கு இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்தவேண்டும்.Points1185
0 comments:
Post a Comment