"கமல் சார் எப்போதுமே ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, 'இல்லை... இது முடியாது' என்று கூறினால், அவருக்கு பிடிக்கவே பிடிக்காது" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தார் நிகில். கமல்ஹாசனின் பர்சனல் பக்கம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை என் மொழி நடையில்...
பிடிக்காத வார்த்தை 'முடியாது'
எப்போதுமே கமல்ஹாசன் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கூறினால், அதை உடனடியாக முடியாது என்று மறுத்துவிட்டால் அவருக்கு பிடிக்காது. சொல்லும் விஷயத்தை கடைசி வரை முயற்சி செய்து, அது முடியாமல் போனால் மட்டுமே ஏற்றுக் கொள்வார். எப்போதுமே ஒரு விஷயத்தை முடிக்க முடியும் என்று எப்போதுமே சொல்வார். எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும், அக்காட்சி நினைத்த மாதிரி வரும் வரை விடவே மாட்டார். அவருடைய கலையுலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு பிடிக்காத வார்த்தை 'முடியாது'.
'விருமாண்டி' வசனத்துக்குச் சொந்தக்காரர்
'விருமாண்டி' படத்தில் "மன்னிக்க தெரிந்தவன் மனுஷன், மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்" என்று ஒரு வசனம் வரும். அதை நிஜ வாழ்க்கையில் பின்பற்றுவதனால்தான் படத்தில் வைத்தார். ஏனென்றால், ஒரு விஷயத்தில் தப்பு செய்து விட்டோம் என்றால், அவருடம் சென்று நீங்கள் இப்படி சொன்னீர்கள், நான் இப்படி செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்.
ஒருவர் பேசும் போது, பேசுவர் பொய் பேசுகிறாரா இல்லையென்றால் உண்மை பேசுகிறாரா என்பதை உடனடியாக கண்டுபிடித்துவிடுவார் கமல். அவரிடம் பேசும்போது நிறுத்தி நிறுத்தியோ, எச்சில் விழுங்கியோ அல்லது அவருடைய கண்ணைப் பார்க்காமலோ பேசினால், உடனடியாக பேசுபவர் பொய் சொல்கிறார் என்று கூறுவார் கமல். அதேபோல, நாம் ஒரு கேள்வியைக் கேட்டால், கேட்பவர் யாரோ அவருடைய கண்ணைப் பார்த்து மட்டுமே பதிலளிப்பார் கமல்.
அவருடைய கண்ணுக்கு தெரிகிற தூரத்தில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இங்கிருந்துக் கொண்டே இருவரும் என்னப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்படியே சொல்வார். 'அரங்கேற்றம்' சமயத்தில் டப்பிங் தியேட்டரில் பல நேரங்களில் அமர்ந்து கவனித்ததால் வந்தது என்று கூறுவார். பல சமயங்களில் பேசிவிட்டு இவரிடம் பேச வருபவர்களிடம் "நீங்கள் இதை தானே பேசிக் கொண்டிருந்தீர்கள்" என்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவார்.
மகள்களுக்கு அட்வைஸ் செய்யாத தந்தை
ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரிடமுமே எப்போதும் நீங்கள் இப்படி வரவேண்டும், இப்படி பண்ண வேண்டும் என்று எதையுமே கூற மாட்டார். எப்போதுமே அவர்களுடைய என்ன பிடிக்கிறதோ அதை பண்ணட்டும். அப்படி பண்ணினால் மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க முடியும் என்று நினைப்பவர் கமல்.
"ஒரு துறையில் நாம் இருக்கிறோம் என்றால், அந்த துறையில் நமது பெயர் இடம்பெற வேண்டும்" என்று கமலின் தாயார் அடிக்கடி கூறுவார். அதை அப்படியே தனது பிள்ளைகளிடம் கூறுவார் கமல். இதுநாள் வரை ஏன்.. இப்படி படம் நடிக்கிறாய்.. இப்படி நடிக்க வேண்டும்... இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எந்த ஒரு விஷயத்தை கமல் தனது மகள்களிடம் கூறியதில்லை.
எனது வளர்ச்சிக்கு காரணம் கமல் சார்: நிகில்
நீங்கள் கமலிடம் பணிபுரிவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நிகிலிடம் கேட்டபோது, "தமிழ் திரையுலகில் இப்போது 300 படங்களை கடந்து மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறேன். என்னைப் பார்ப்பவர்கள் அனைவருமே எப்படி தொழில்நுட்ப விஷயத்தில் இவ்வளவு அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பார்கள் ஆச்சர்யமாக. அதற்கு காரணம் கண்டிப்பாக கமல் சார்.
தொழில்நுட்பம் வளர வளர நாமும் அதோடு சேர்த்து வளர வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவோம் என்று கூறுவார் கமல் சார். ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டே வருகிறேன். இன்னும் 15 நாட்களில் இதுவரை இந்திய திரையுலகில் யாருமே பண்ணாதே ஒரு புதிய தொழில்நுட்பத்தில் கால் பதிக்க இருக்கிறேன்.
கமல் சாரிடம் பணிபுரிவது கடினம் என்று கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை கமல் சாரிடம் பணிபுரிவது நான் செய்த பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால், இன்றைய நான் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணம் அவர் தான். எப்போதுமே ஒரு விஷயம் என்னிடம் சொல்கிறார் என்றால், ஏன் சார் என்று கேட்க மாட்டேன். எதற்காக சொல்கிறார் என்று எனக்கு தெரியும். அவர் சொல்வதை விட, எதை யோசித்து இதை சொல்கிறார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆகவே தான் எனக்கு கமல் சாரிடம் பணிபுரிவது எளிதாக இருக்கிறது.
கமல் சாரைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட தகவல்களை வெளியிட ஒரு தளமாக 'தி இந்து' தமிழ் ஆன்லைன் இருந்ததற்கு நன்றி. இன்னமும் புதுப்புது விஷயங்களை கமல் சாரிடம் கற்றுக்கொண்டே வருகிறேன். ஆகவே இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் ஸ்டார் டைரியில் சந்திக்கலாம்" என்றார் உற்சாகத்துடன்.
0 comments:
Post a Comment