Friday, April 10, 2015

புலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி


'வசமாகச் சிக்கிய எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி

கா. இசக்கிமுத்து

த  இந்து

சென்னையின் பிரம்மாண்டமான பின்னி மில்லில் பதுங்கியிருக்கிறது ‘எலி’. அங்கே அண்ணாந்து பார்க்கவைக்கும் அரங்குகள் அமைத்து, அதில் வடிவேலு நகைச்சுவை நாயகனாக நடித்துவரும் ‘எலி' படத்தைப் படமாக்கிவருகிறார் இயக்குநர் யுவராஜ். ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஆச்சரியப்படுத்தியிருப்பரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்..
யுவராஜ்
‘எலி' என்ற தலைப்பே கிச்சு கிச்சு மூட்டுகிறதே?
மிக மோசமான ஒரு கொள்ளைக் கூட்டம். அதைப் பிடிக்க அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. கெட்டவர்கள் கூட்டத்துக்குள் ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால், “இந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு எலி இருக்கான்டா. அவனைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா” என்பார்கள்.
அதனால்தான் ‘எலி' என்று தலைப்பு வைத்தேன். கொள்ளைக் கூட்டத்துக்குள் அவர் மாட்டிக்கொண்டு முழிப்பதும், அந்தக் கூட்டத்தைப் பிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை. 1960-களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
வடிவேலு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ‘தெனாலிராமன்' படத்தை இயக்கினீர்கள். ஆனால் வெற்றி கிடைக்கவில்லையே என்ன காரணம்?
“நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தோம். ஆனால் செஸ் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்” என்று முகநூலில் ஒரு ரசிகர் விமர்சனம் பண்ணியிருந்தார். அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பிக்கிறார், எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி ரொம்ப காமெடியாகப் பண்ணவில்லை. சிரிக்கவைத்து, கூத்தடித்து அனுப்பிவிட்டார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்ற விஷயத்தில் நானும், வடிவேலும் தெளிவாக இருந்தோம்.
அதனால்தான் ‘தெனாலிராமன்' என்ற ஒரு பாத்திரத்தைக் கனமாக அமைத்தோம். “நல்ல மரியாதையான ஒரு படம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த காமெடி அதில் இல்லை” என்று படத்தைப் பார்த்த நிறைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எந்த இடத்தில் தவறு நடந்தது என்றால் ரசிகர்கள் முழுக்க காமெடி படம் என்று நினைத்து வந்துவிட்டார்கள்.
நாங்கள் நல்ல படம் கொடுத்திருந்தோம். ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை எடுக்கவில்லை. இப்போது “இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் இந்தாங்க ‘எலி'” என்று விருந்து கொடுக்கப் போகிறோம். விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்கள்.
ஒரு படம் தோல்வியடைந்தும் மறுபடியும் அதே இயக்குநர் - நடிகர் இணைவது ஆச்சரியமாக இருக்கிறதே?
எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் இருக்கிறது. ‘தெனாலிராமன்' படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு காமெடிப் படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் திரும்பவும் வாய்ப்புக் கொடுத்தார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது, கருத்துப் பரிமாற்றம் தான் இருக்கிறது.
மூன்றாவது வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள்?
அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இப்போதைக்கு ‘எலி' பண்றோம். அடுத்த படத்துக்கான கதையையும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் முடித்த உடனேயே பண்றோமா, கொஞ்சம் நாட்கள் கழித்து பண்றோமா என்பது அவரது விருப்பம்தான்.
வடிவேலுவை வைத்துப் படம் பண்ணி னால், அவருடைய தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?
“தொடர்ச்சியாக இவ்வளவு காமெடி வசனங்கள் அள்ளிக் கொடுக்குறீங்க. நீங்கள் ஏன் இயக்கக் கூடாது” என்று அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். அப்போது “இல்லை நண்பா. நீ ஒரு காட்சி கொடு. அதில் நான் காமெடி கலந்து சூப்பராகச் சொல்வேன். ஆனால் அடுத்த காட்சி இதுதான் என்று எனக்குத் தெரியாது. நீ என்னிடம் ஒரு விஷயம் சொல்லு, அதை நான் காமெடியாக்கி உன்னைச் சிரிக்க வைக்கிறேன்” என்றார். இதை ஏன் இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் என்னிடம் கூற மாட்டார்.
முதலில் கதையைச் சொல்லச் சொல்வார். கதையைக் கேட்டவுடன், இந்த இடத்தில் எனக்கு இது சரியாக வருமா என்று கேட்பார். சரியாக வரும் என்று கூறியவுடன், முழுக் கதையையும் மூளையில் ஏற்றிக்கொள்வார். ஒரு வாரத்துக்குள் அந்தப் பாத்திரத்துக்கு என்ன பண்ணலாம், பண்ணக் கூடாது என்று மனதில் முடிவு செய்துவிடுவார். அதற்கு பிறகு நாம் என்ன சொன்னாலும், அதில் தலையிடவே மாட்டார்.
காட்சி இதுதான் என்று கூறியவுடன், வசனத்தில் இப்படிப் பண்ணலாமா என்று நிறைய சாய்ஸ் சொல்லுவார். ஆனால் மறந்தும் கதை, திரைக்கதை ஏரியாவுக்குள் வடிவேலு தலையிடுவதில்லை. ஒரு காட்சி சொன்னால் இதுக்கு முன்னால் என்ன காட்சி, பின்னால் என்ன காட்சி என்று கேட்பார். அதற்குத் தகுந்தவாறு நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவ்வளவுதான். அந்தக் காட்சிக்குள் அவருடைய விளையாட்டு நடக்கும்.
மறுபடியும் காமெடியனாக களம் இறங்குவது குறித்து வடிவேலு உங்களிடம் எதுவும் கூறியிருக்கிறாரா?
அடுத்த அடுத்த படங்கள் பண்ணுவேன் என்று சொல்வார். யார்கூடப் பண்ணினால் நல்லாயிருக்கும் என்று என்னிடம் கேட்பார். உடனே அதை எப்படி நான் சொல்லுவேன் சார்.. நீங்கதான் சொல்லணும் என்பேன். அவசரப்படாமல் பண்ணுவோம் யுவராஜ், எனக்கு இது பிடித்திருக்கிறது என்பார்.
மக்களை சிரிக்கவைக்கச் சரியான படங்கள் அமைய வேண்டும் என்பார். நிறையப் பேர் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ‘எலி' முடியட்டும், முடிந்தவுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.


நன்றி  - த  இந்து

0 comments: