'ஓ காதல் கண்மணி' படத்தின் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்று அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
"ஓகே கண்மணி ஒரு இளமையான திரைப்படம். எனவே படத்தின் இசையும் அதற்கு ஏற்றார்போல உற்சாகமானதாக இருக்க வேண்டும். மணிரத்னம் எப்போதும் எனக்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிடுவார். எனக்கு முழு சுதந்திரம் தந்துவிடுவார். இந்தப் படத்தைப் பொருத்தவரையில், அதன் அலைவரிசைக்கு நெருக்கமாக இசை இருக்க வேண்டும் என நினைத்தேன். அவரது எண்ணங்களில் இளமை இன்னும் மாறவில்லை என்பதை நீங்கள் காணலாம்.
அதே போல வைரமுத்து அவர்களும். அவரது எழுத்தில் பாரம்பரியம் தெரியும், அதே நேரத்தில் தனக்கே உரிய தனித்துவ பாணியில் அவர் பல நிலைகளில் முன்னால் உள்ளார்.
இசையில் வரிகள் எப்படி வந்து உட்காரும் எனத் தெரியாது. ரசாயன மாற்றம் போல நிகழும். இன்றுவரை நாங்கள் மூவரும் இணையும்போது, எப்போதும் போல உற்சாகம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.
மென்டல் மனதில்
எப்போதுமே இந்த மாதிரியான பாடல் வேண்டும் என்ற நிலையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து விவாதிப்போம். ஆனால் இந்தப் பாடல் விவாதத்தின்போது வைரமுத்து சென்னையில் இல்லை. எனக்கும் வெளிநாடு போக வேண்டிய வேலை இருந்தது. அதற்குள் கண்டிப்பாக இந்தப் பாடலை முடித்துவிட வேண்டும் என்று நானும், மணிரத்னமும் நினைத்தோம். படப்பிடிப்பும் இருந்ததால், நாங்களே எழுதிவிடலாம் என்று உட்கார்ந்தோம். முதலில் முழுமையான வரிகள் இல்லை. இசைக்கு ஏற்றவாரு அவர் ஒரு வார்த்தை நான் ஒரு வார்த்தை என சொல்ல, கடைசியில் அவற்றை ஒழுங்குபடுத்தி பாடலை முடித்தோம்.
மன மன மன என மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை வைத்துக் கொள்ளலாம் என்று நான் உத்தேசித்தேன். மென்டல் என்ற வார்த்தையை மணி தான் சொன்னார். அதை முன்னால் இருக்கட்டும் என்று மாற்றினோம். இன்று மட்டும் ராஜா ராணி என முதலில் இருந்தது. முதலில் மென்டல் என்ற ஆங்கில வார்த்தை வந்துவிட்டதால், இதுவும் ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என கிங் அண்ட் குயினா என மாற்றினோம்.
மலர்கள் கேட்டேன்
பாட்டுக்காக மெட்டமைத்தேன். 3 வகையான வரிகளைத் தந்தார். அதில் எனக்கு மலர்கள் கேட்டேன் பிடித்திருந்தது. கர்னாடக இசைப் பாடகி பாத்திரம் ஒன்று பாடுவது போல சூழல். சித்ரா மிக அருமையாக பாடியிருந்தார். பாடலின் முடிவில் ஒரு ஆண் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நான் டிராக் பாடியிருந்தேன். அதுவே நன்றாக இருந்ததால், அப்படியே பாடலிலும் சேர்த்து விட்டோம்.
சினாமிகா
ஒரு மெட்டைத் தந்திருந்தேன். மணிரத்னமுக்கு அது பிடித்திருந்தது. எனவே அதை வைத்து வரிகள் உருவானது. புதிதாக ஒரு வார்த்தையை உருவாக்கலாம் என நினைத்தோம். சினம் கொண்ட ஒரு பெண், என சினாமிச்கா என்ற வார்த்தையை உருவாக்கினோம். அப்படியே அனாதிகா என்ற வார்த்தையும் உருவானது. அந்தப் பாடலை முடிக்கதான் நிறைய நேரம் ஆனது. பாடல் மிகவும் மென்மையாக இருந்ததால், பாடலில் இன்னும் உற்சாகம் தேவை, என்றென்றும் புன்னகை பாடலைப் போல இருக்கலாம் என மணிரத்னம் விரும்பினார். அப்படியே பாப் பாடல்களைப் போன்ற அம்சங்களை சேர்த்தோம். பாடலை முடிக்க 2 மாதங்கள் ஆனது. ஒரு குறிப்பிட்ட டிரம்ஸ் ஒலி வரவேண்டும் என மெனக்கெட்டதில் அதற்கே 5 நாட்கள் ஆனது. டிரம்ஸ் ஒலிக்காக மட்டும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வின்சென்ட் என்ற கலைஞர் வாசித்து அனுப்பினார்.
ஆட்டக்காரா
இந்தப் படத்துக்காக நாங்கள் உட்கார்ந்தபோது, முதல் ஒரு சில மாதங்களில் வந்த மெட்டு அது. வழக்கமான பாடலைப் போல் இருக்கக் கூடாது என்பதால் நிறைய யோசனைகள் இருந்தன. ஒரு 15 நிமிட பாடலை சுருக்க வேண்டும். பாடலில் ராப் பகுதி முதலிலேயே முடிந்துவிட்டது. மணிரத்னம் ஆட்டக்காரா என எழுதினார், காரா என நான் முன்னால் ஒரு வார்த்தையை சேர்த்தேன்.
தீரா உலா
படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிகளைப் பார்த்து இசையமைத்த பாட்டு இது.
பறந்து செல்ல வா
ஒரு அறையில் இருவரும் பாடுவது போல் இருக்கவேண்டும் என்பதால் வெறும் குரல்கள் மட்டும் போதும் என சொன்னார். அப்போது, ஐ பேடில் ஒரு செயலி இருப்பதைப் பற்றி சொன்னேன். நாம் என்ன பேசினாலும், பாடினாலும், இசைத்தாலும், அது பதிவாகி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்தியா, மேற்க்கத்திய நாடுகள் என பல இசைக் கலைஞர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். ஒரு புதிய ட்ரெண்ட் போல. அதை முயற்சி செய்யலாமா என யோசனை சொன்னேன். பாடகர் கார்த்திக்கை பாடவைத்தோம். என்னிடம் சில வார்த்தைகளின் பட்டியல் இருந்தது, அதை வைத்து அப்படியே பாடி பாடி இதை உருவாக்கினோம். பாடலை கேட்ட பிறகு மணிரத்னம் சில திருத்தங்களைச் சொன்னார். அதை வைத்து மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்து பாடலை முடித்தோம்.
மவுலா
என் மகன் பாடியது. தனிப்பட்ட உபயோகத்துக்காக மகன் அமீனை வைத்து இந்தப் பாடலை ஏற்கன்வே ஒலிப்பதிவு செய்திருந்தேன். மணிரத்னம் ஒருநாள் எதேச்சையாக அதைக் கேட்டார். யார் குரல் இது எனக் கேட்டார். எனது மகன் என்று கூறினேன். எனக்கு இந்தப் பாடல் வேண்டும் என்றார். முதலில் தனியாக அந்தப் பாடலை வெளியிடலாம் என்ற யோசனை எனக்கிருந்தது. நண்பர்களுக்குள் மட்டும் பகிர்ந்திருந்தேன். இவர் கேட்டவுடன் என்னால் மறுக்க முடியவில்லை. எப்படி இதை பயன்படுத்துவீர்கள் எனக் கேட்டேன். நான் அதை பார்த்துக் கொள்கிறேன். என்றார். என்னை அறிமுகம் செய்தது போல மவுலாவில் மணிரத்னமே என் மகனையும் அறிமுகம் செய்கிறார். வாழ்க்கை ஒரு முழு சுற்று வந்தது போல.
தமிழில் சரியான வரிகள் பொருந்திப் போக அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். தெலுங்கில் டப்பிங் செய்யப்படும்போது அவர்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது. முழு பாடலும் கைவசம் இருக்கும். ஓகே கண்மணியைப் பொருத்தவரை சில பாடல் வரிகள் தமிழை விட தெலுங்கில் நன்றாக இருக்கிறது. குறிப்பாக நானே வருகிறேன் பாடல்." என்று பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்
நன்றி -த இந்து
0 comments:
Post a Comment