நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாகரன். தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கிவரும் ‘உப்புக்கருவாடு’ படத்தில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் திரையுலகுக்கு வந்தது எப்படி?
என் சொந்த ஊர் திருச்சி. ஈ.ஆர்.சி பள்ளியில் படித்தேன். அப்பா ‘ரா’வில் பணியாற்றியதால் டெல்லியில் கொஞ்ச காலம் படித்தேன். பிறகு தஞ்சாவூர் சண்முகா கல்லூரியில் பொறியியல் படித்தேன். சென்னையில் மென்பொருள் பொறி யாளராக பணியாற்றினேன். நான் படிக்கும் போதே எனக்கு இயக்குநர் நலன் குமார சாமியை தெரியும். அவர் இயக்கிய சில குறும் படங்களில் நடித்திருக்கிறேன். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்தேன். இரவில் டப்பிங் பேசுவேன்.
ஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.
உங்களை சினிமா நடிகனாக்கியது இயக்குநர் சுந்தர்.சி என்கிறார்களே. உண்மையா?
உண்மைதான். ‘கலகலப்பு’ படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தார். வேலையில் இருப்ப தால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியும் “காசு பணம் துட்டு” பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா?
ரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்?
எமி ஜாக்சனுக்கு பிடித்த நாயகன் நீங்கள்தானாமே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படப்பிடிப்பு கொச்சி அருகில் நடந்தது. மலைப்பகுதி ஒன்றில் எமி ஜாக்சன் லூனா வண்டி ஓட்டும் காட்சி அது. மலையின் இரண்டு பக்கமும் பள்ளம். நானும், உதயநிதியும் காரில் அமர்ந்திருந்தோம். எமி ஜாக்சன் வண்டியை ஓட்டிக்கொண்டு பள்ளத்துக்கு மிக அருகில் சென்றுவிட்டார். நான் காரில் இருந்து ஓடிச்சென்று வண்டியைப் பிடித்து நிறுத்தினேன். தனக்கே உரிய ஸ்டைலில் நன்றி சொன்னார். இந்தக் காட்சியைப் பார்த்து உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தார். மற்றபடி தனக்கு பிடித்த நாயகன் என்றெல்லாம் என்னைப்பற்றி எமி ஜாக்சன் சொல்லவில்லை.
நீங்கள் சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்?
நான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தபோது வீட்டில் ரொம்பவே பயந்தார்கள். இப்போது, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நான் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் என் மனைவி எச்.ஆர். துறையில் வேலை பார்த்துவந்தார். அப்போது காதலைச் சொன்னால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லவில்லை. சினிமாவுக்காக வேலையை விடும் போது தைரிய மாக போய் காதலை சொல்லிவிட்டேன். காதலைச் சொல்லும் தைரியத்தை சினிமாதான் எனக்கு தந்தது.
நன்றி -த இந்து
0 comments:
Post a Comment