டப்பாவாலாக்கள் மும்பையின் தவிர்க்க இயலாத அடையாளம். மதிய உணவுக்கான டிபன் பாக்ஸை முற்பகலில் வீட்டுக்கு வந்து வாங்கிச் சென்று, அலுவலகத்தில் சேர்த்து, உண்ட பின்னர் பிற்பகலில் மீண்டும் வீட்டில் டப்பாவைக் கொடுக்கும் மகத்தான பணி அவர்களுடையது. லட்சக்கணக்கான டிபன் பாக்ஸுகளை வெயில், மழை பாராது, நேரம் தவறாது கொண்டு சேர்க்கும் இவர்களின் நிர்வாகம் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உண்டு.
அப்படியொரு ஆவணப்படம் எடுக்க நினைத்தே குறும்பட இயக்குநர் ரித்தேஷ் பாத்ராவும் ஆராய்ச்சியில் இறங்கினார். தவறுதலாக ஒரு டிபன் பாக்ஸ்கூட மாறி வேறொருவருக்குப் போய்ச் சேராது என்பதுதான் அவர்களின் சிறப்பம்சம். அப்படி ஒரு டிபன் பாக்ஸ் மாறினால்? இந்தச் சிந்தனைதான் ‘தி லஞ்ச் பாக்ஸ்’ கதையின் விதை.
மனைவியை இழந்த, சாஜன் ஃபெர்னாண்டஸ் ஓய்வுபெறும் வயதிலுள்ள அரசுப் பணியாளர். தினம் மெஸ்ஸிலிருந்து மதியச் சாப்பாடு வரும். கடந்த காலக் கசப்பும், தனிமையும், அரசுப் பணி தந்த இறுக்கமுமாய்த் தினசரி நடவடிக்கைகளினூடாக வாழ்க்கையை நகர்த்திவருகிறார்.
இலா இளம் இல்லத்தரசி. சலிப்புத் தட்டும் திருமண வாழ்க்கையில் மகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் கணவனுக்குச் சமையல் செய்து டப்பாவில் அடைத்துக் கொடுப்பதும்தான் அன்றாடக் கடமைகள். மேல் வீட்டு ஆன்ட்டி அறிவுரையின் பேரில் தினுசு தினுசாய் ருசியாய் சமைத்து அனுப்புகிறாள் கணவனுக்கு. அவனின் அலட்சியத்தைக் கலைக்க அவன் கவனம் பெறத் தன் சமையல் உதவும் என்று நம்புகிறாள்.
ஒரு நாள் இலாவின் டிபன் பாக்ஸ் தவறுதலாக சாஜனுக்குப் போய்விடுகிறது. வெகு வருடங்களுக்குப் பிறகு நல்ல வீட்டு உணவை நுகர்ந்த சாஜன் ருசித்துச் சாப்பிடுகிறார். முழு டிபன் பாக்ஸையும் துடைத்துக் காலி செய்து அனுப்புகிறார், கணவர் ரசித்துச் சாப்பிட்ட மகிழ்ச்சியில் விசாரிக்க, சாப்பாடு ஆள் மாறிப் போயிருப்பது தெரிகிறது. சிரத்தையுடன் செய்து அனுப்பிய உணவை ரசித்ததற்காக மறுநாள் தன் கணவனுக்குப் பிடித்த உணவைச் செய்து அனுப்புகிறாள். ஒரு சிறு கடிதத்துடன். சாஜன் பதில் எழுதி அனுப்ப கடிதங்கள் தொடர்கின்றன.
மனைவியில்லாத தனிமையில் உள்ள சாஜனுக்கு, தனிமையில் வாடும் இலா மூலம் தன் கடந்த காலப் பொறுப்பின்மை புலப்படுகிறது. தன் சலிப்பான வாழ்க்கையைப் பகிரும் இலாவுக்கு சாஜன் நம்பிக்கை கூறுகிறார். கணவன் உடலாலும் மனதாலும் விலகிப் போவதை உணர்கிறாள். பூடான் போன்ற தேசத்துக்கு மகிழ்ச்சி தேடிப் போவதாக இலா எழுத, “நானும் வரவா?” என்று பதில் வருகிறது.
ஓர் உணவு விடுதியில் மதிய நேரம் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். இலாவைத் தூரத்திலிருந்து பார்த்த சாஜன் அவள் இளமை, அழகு, அவளுக்கும் தனக்கும் உள்ள வயது வித்தியாசம் எல்லாம் கணக்கிட்டு அவளைச் சந்திக்காமல் வந்துவிட, கோபத்தில் மறு நாள் காலி டிபன் பாக்ஸ் அனுப்புகிறாள். நிஜம் சொல்லி ஓய்வுக்குப் பிறகு நாசிக் கிளம்புகிறார். சாஜன் அலுவலகம் தேடி வந்து பார்த்த இலா ஏமாற்றத்துடன் திரும்புகிறாள்.
தன் வாழ்வின் வெறுமையை உணர்ந்த இலா கணவனைப் பிரிந்து கிளம்புகிறாள். அதே நேரம் இலாவைத் தேடி நாசிக்கிலிருந்து மீண்டும் மும்பைக்கு சாஜன் வருகிறார். ரயிலில் டப்பாவாலாக்கள் பாடலுடன் படம் முடிகிறது.
சாஜனின் வேலையை நிரப்ப வந்த இளைஞன், முகம் காட்டா மாடி வீட்டு ஆண்ட்டி, இலாவின் அம்மா, கணவன், சாஜனின் மேலதிகாரி என அனைவரும் நாம் தினசரி சந்திக்கும் அச்சு அசலான கதாபாத்திரங்கள். மும்பை வாழ்க்கையின் குறுக்கு வெட்டை மிகச் சில காட்சிகளிலேயே பதிவுசெய்வதன் மூலம் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபிக்கிறார் ரித்தேஷ் பாத்ரா.
ரயிலில் சமையலுக்குக் காய் வெட்டியவாறு செல்வது, அரசாங்க அலுவலகத்தின் மதிய உணவு நேரம், இரவில் புகைத்தவாறு கடைச் சாப்பாட்டை பிளாஸ்டிக் பையிலிருந்து வழித்தெடுப்பது, மேல் மாடியிலிருந்து மசாலாத் தூள் பால்கனி வழியாகத் தூளியில் வருவது என உணவைக் குறியீடாகக் கொண்டே கதைமாந்தர்களின் இயல்பையும் அவர்கள் வாழ்க்கையையும் விவரிக்கிறார் இயக்குநர்.
நகரம் மனிதர்களைக் கூட்டமாக ஓரிடத்தில் அடைக்கும். அதே நேரம் தனிமைப்படுத்தும். கிராம வீடுகளில் அறைகள் குறைவு. மனிதர்கள் அதிகம். நகரங்களில் சிறு அளவில் நிறைய அறைகள். அதில் அடைந்து கொள்ளும் குறைவான மனிதர்கள். அன்றாட நிர்ப்பந்தங்களால் பின்னப்பட்ட வாழ்க்கையில் கைதிகள் போல வாழ்கிறார்கள். யோசிக்க நேரமில்லாமல் ஓட வேண்டும். யோசிக்க நேரம் கிடைத்தால் விரக்திதான்.
திருமணத்துக்குள் தனிமைப்படுகையில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை வருகையில் அந்த அமைப்பு பற்றிய நம்பிக்கை குலைகிறது. ஒரு சிறு புன்னகை, தீண்டல், பரஸ்பர நகைச்சுவை, இருவருக்கும் பொதுவான காரியங்கள் இல்லாதபோது அலுவலகத்தில் உள்ள சக பணியாளர் போல வாழ்க்கைத் துணையை உணர்வில்லாமல் பார்க்கும் மனோபாவம் ஆபத்தானது.
அன்பு, மரியாதை, புரிதல் பற்றி இயல்பான எதிர்பார்ப்புகள் ஒருவருக்கு மறுக்கப்பட்டாலும் அது அந்த உறவை விரிசலடையச் செய்கிறது. அப்போது எங்கிருந்தோ வரும் மெல்லிய நூலிழையைக்கூடப் பற்றிக்கொள்ள வைக்கிறது.
முகம் பார்க்காமல், குரல் கேட்காமல், வெறும் காகிதக் கடிதங்கள் மூலம் ஓர் அழகான உறவினில் இணைவது இதனால்தான். கவர்ச்சி, காமம், கனவு இல்லாமல் ஒரு காதல் உறவு ஏற்படுகிறது. அது காதலா என்றும் தெரியவில்லை. வருங்காலம் பற்றிய திட்டம் இல்லை. ஆனால் இருவரும் தங்களை அடுத்தவர் மூலம் உணர்கிறார்கள்.
ஒருவர்மீது காதல் கொள்வதே தன்னை அறியத்தானோ? தவறான ரயில்கள்கூடச் சரியான ரயில் நிலையங்களுக்கு இட்டுச் செல்கின்றன என்று ஒரு வசனம் வரும். அது தரும் தாக்கம் அபரிமிதமானது.
இர்ஃபான் கான், அனுராக் காஷ்யப், கரன் ஜோஹர், என்.எஃப்.டி.சி மற்றும் பிரெஞ்சு, ஜெர்மானிய அமைப்புகள் சேர்ந்து தயாரித்து உலகில் 30 மொழிகளுக்கு மேல் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி, வசூல், விருதுகள் கண்ட படம் இது.
இர்ஃபான் கானின் மிகைப்படாத அழுத்தமான நடிப்பும், நிம்ரத் கவுரின் இயல்பான உடல் மொழியும், நவாசுதீன் சித்திக்கியின் வித்தியாசப் பங்களிப்பும் படத்தை ஓர் உலகளாவிய தளத்துக்கு இட்டுச்செல்கின்றன.
தொடர்புக்கு: [email protected]
நன்றி - த இந்து
1 comments:
Great Articel.
Visit: http://www.azharansar.com/?p=1
Post a Comment