Tuesday, March 17, 2015

இணைய விமர்சகர்களை கிழி கிழி கிழிக்கப் போகிறதா இந்தப் படம்? - 'மசாலா படம்' இயக்குநர் பேட்டி

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ராஜீவ் மேனன் ஆகிய இருவரிடம் சினிமா கற்றவர். இப்போது ‘மசாலா படம்’ மூலமாக இயக்குநராகி இருக்கிறார். “ராஜீவ் மேனன் இயக்குநரான பிறகும் மணிரத்தினத்தின் ‘குரு’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதேபோல ஒளிப்பதிவும் பண்ணுவேன். ஒளிப்பதிவு வேறு, இயக்கம் வேறு” என்று தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் லஷ்மண். அவருடன் உரையாடியதிலிருந்து…
‘மசாலா படம்’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே... படத்தின் கதையைப் பற்றிச் சொல்லுங்கள்?
இந்தப் படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. எல்லா வயதினருக்கும் மூன்று விஷயங்கள் பொதுவாக இருக்கும். சினிமா, அரசியல், கிரிக்கெட். சினிமாவுக்குள் சினிமா (CINEMA IN CINEMA)என்பது ஒரு பிரிவு. அதில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. வாழ்க்கையிலிருந்து சினிமா(LIFE IN CINEMA) அதாவது ரசிகர்களின் பார்வையில் சினிமா என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதை யாருமே தொடவில்லை. அதைத் தொட்டிருக்கிறேன். சிவா, சிம்ஹா எல்லாருமே சினிமாவை ரசிக்கிற ஆளாகத் தான் வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு என்ன படம் பிடிக்கிறது, எதற்குக் கை தட்டுகிறார்கள் எனச் சொல்ற படம் ‘மசாலா படம்’
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் இயக்குவதற்குத் தைரியம் எப்படி வந்தது?
இயக்குநர் ஆகவேண்டும் என்றால், யாரிடமாவது உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்குப் பிறகு ஒளிப்பதிவாளருக்குத்தான் பொறுப்பு அதிகம். அப்படி இருக்கும்போது உதவி இயக்குநர் கற்றுக் கொள்வதைவிட, ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி நிறைய கற்றுக் கொண்டேன். அதை வைத்து கமர்ஷியல், யதார்த்தம் என்ற இரண்டுக்கும் நடுவே ஒரு விதத்தில் ‘மசாலா படம்’ பண்ணியிருக்கிறேன்.
முதல் படமே இவ்வளவு சிக்கலான கதை ஏன்?
ரசிகனோட பார்வையில் ஒரு படம் பண்ணியிருக்கேன். அதுதான் உண்மை. ஏன் மக்கள் மசலாலா படத்தைக் கொண்டாடுகிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட கதையே. இப்படியிருக்கும் கதையை யார் முதல் படமாகத் தேர்வு பண்ணுவார்கள் சொல்லுங்க. என்னுடைய திறமைக்கு ஒரு சவால்தான்.
‘மசாலா படம்’ படத்தில் இணைய விமர்சகர்களை விமர்சனம் பண்ணியிருக்கிறார்களா?
இந்தப் படத்தோட ட்ரைலர் வரும்போது இதற்கான விடை தெரியும். ரசிகர்களே விமர்சகர்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லையா.. ஒருத்தன் போய் படம் நல்லாயில்லை என்று சொன்னால் பத்து பேர் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவனுடைய கருத்துக் கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைப்பார்கள். இதைதான் இப்போதுள்ள இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். அதைத் தொட்டிருக்கிறேன்.
ரசிகன், விமர்சகன் ஆவது சரியா, தவறா?
இரண்டுமே சொல்லவில்லை. மசாலா பிரிவு கண்டிப்பாக ப்ளஸ் என்றுதான் சொல்கிறேன். ட்ரைலரில் ஒரு வசனமே இருக்கிறது. “தயாரிப்பாளர்கிட்ட 2 கோடி இருப்பதால் படம் எடுக்கிறார். என்னிடம் 120 ரூபாய் தான் இருக்கிறது. அவருக்கு 2 கோடி முக்கியம் என்றால் எனக்கு 120 முக்கியம் அதனால் நான் கேட்பேன்” என்ற வசனமே வைத்திருக்கிறேன். 120 ரூபாய் கொடுக்கிறேன்ல அதற்கு நான் விமர்சனம் பண்ணுவேன் என்று சொல்கிறான். இன்னொருபுறம் நீங்க இப்படி விமர்சனம் கொடுப்பதால் என்ன தப்பு நடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன்.


நன்றி  - த இந்து

0 comments: