Monday, March 09, 2015

என் வழி தனி வழி - சினிமா விமர்சனம்

நன்றி - மாலைமலர்

மத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட்  
நடிகர் : ஆர் கே
நடிகை :பூனம் கவுர்
இயக்குனர் :ஷாஜி கைலாஷ்
இசை :ஸ்ரீகாந்த்தேவா
ஓளிப்பதிவு :ராஜரத்தினம்
கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் இருக்கிறார்கள்.



இவர்கள் அனைவரும் இணைந்து ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிறைய ரவுடிகளை என்கவுண்டரும் செய்கிறார்கள். 

அரசியலில் இருக்கும் முன்னாள் ரவுடிகளும் இவர்களது என்கவுண்டருக்கு தப்புவதில்லை. இந்நிலையில், ஒருநாள் ரோஜாவின் கணவரை ஆர்.கே. குழு என்கவுண்டர் செய்கிறது. ரோஜாவின் கணவர் அரசியல்வாதி என்பதால், 

அவர் இறந்த பிறகு ரோஜா அரசியலில் குதிக்கிறார். தனது கணவரை கொன்ற ஆர்.கே.வை பழிவாங்க துடிக்கிறார். 

இந்நிலையில், தனது மகனான ஆர்.கே.வுக்கு நேரம் சரியில்லாததால், அவருக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டும் என அவரது அம்மா சீதா, ஆர்.கேவை சொந்த ஊருக்கு வரச் சொல்கிறார். சொந்த ஊரில் ஆர்.கே.வின் முறைப்பெண்ணான பூனம்கவுர் ஆர்.கே.வை திருமணம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள்.

சொந்த ஊருக்கு செல்லும் ஆர்.கே., தனது அம்மாவின் அறிவுரைப்படி சில பரிகாரங்களை செய்கிறார். அப்போது, அவரது அம்மாவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். தனது அம்மாவை கொன்றது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் ஆர்.கே., அப்போது தனது அம்மா கொலையில் எம்.பி. ஒருத்தரின் தலையீடு இருப்பதாக அறிந்து அவரை நேரில் சந்தித்து மிரட்டல் விடுகிறார். 

எம்.பி.யோ தனக்கு தெரிந்த உயரதிகாரிகளிடம் ஆர்.கே. மிரட்டல் விடுத்த செய்தியை தெரிவிக்கிறார். மறுநாள் அந்த எம்.பி. மர்மமான முறையில் இறக்கிறார். அவரது கொலைக்கு ஆர்.கே.தான் காரணம் என்று சொல்லி, அவர் இருந்த பதவிக்கு ஆசிஷ் வித்யார்த்தியை பணியமர்த்துகிறார் உயரதிகாரியான ராதாரவி. பதவியில் அமர்ந்ததும் ஆசிஷ் வித்யார்த்தி ஆர்.கே.வை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கிறார். 

இந்த விஷயங்கள் எல்லாம் அறிந்ததும் ஆர்.கே. தலைமறைவாகிறார். பின்னர் ஒருநாள் அவரே நேரடியாக வந்து கோர்ட்டில் சரணடைகிறார். அதன்பின்னர், தங்களது வேலையில் இருக்கும் சிரமங்களை நீதிபதி முன் எடுத்து வைக்கிறார். இறுதியில், ஆர்.கே.வின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்று அவரை நிரபராதி என்று தீர்ப்பளித்ததா? தனது தாயின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து ஆர்.கே. பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை. 

ஆர்.கே. பொறுப்பான காவல்துறை அதிகாரியாக அழுத்தமாக பதிந்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் கடமையே கண்ணாக இருந்திருக்கிறார். தன் தாயை இழந்து பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு. ஆர்.கே.வின் முறைப்பெண்ணாக வரும் பூனம் கவுருக்கு குறைவான காட்சிகளே. இருப்பினும் அவற்றை நிறைவாக செய்திருக்கிறார். திரையில் பார்க்க அழகாகவும் இருக்கிறார். நாயகனுடன் இணைந்து ஒரு பாடல் காட்சியிலும் நடித்துள்ளார். 

காவல் துறை அதிகாரியாக வரும் மீனாட்சி தீட்ஷித் அழகு பதுமையாக இல்லாமல், துப்பாக்கி ஏந்தி மிரட்டியிருக்கிறார். கமிஷனராக வரும் ராதாரவி, மத்திய அமைச்சராக வரும் ரோஜா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆர்.கே.வை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரும் கதைக்கு எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். இவர்களது காமெடி சுத்தமாக எடுபடவில்லை. 

இயக்குனர் ஷாஜி கைலாஷ் இப்படத்தில் என்கவுண்டர் செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு வரக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் அதை எதிர்கொள்வதற்குண்டான வழிகளை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும், இராணுவத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல கருத்துக்களை படம் மூலம் கூறியிருக்கிறார்கள். 

படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். நீதிமன்றத்தில் ஆர்.கே. பேசும் வசனங்கள் எல்லாம் கைதட்ட வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அருமை.

மொத்தத்தில் ‘என் வழி தனி வழி’ முள்பாதை.

0 comments: