Saturday, March 07, 2015

உன்னைப் போல் ஒருவன் - வெளிவராத உண்மைகள்

  • ‘உன்னைப் போல் ஒருவன்’
    ‘உன்னைப் போல் ஒருவன்’
  • ஜெயகாந்தன்
    ஜெயகாந்தன்
  • ‘உன்னைப் போல் ஒருவன்’
    ‘உன்னைப் போல் ஒருவன்’
ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் எம்.ஜி.ஆரின் படங்களைத் தொடர்ந்து கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். எம்.ஜி.ஆரின் பிற்காலப் படங்கள் என்பவை அவரை வழிபாட்டுக்குரியவராக மாற்றிய நல்லவன் இறுதியில் வெல்வான் வகை நாடகங்கள்.
அறுபதுகளின் இந்த வெகுஜன ரசனையை முற்றிலும் மறுத்து, தமிழ்த் திரையில் முதல் ‘புதிய அலை’யதார்த்த வகை சினிமாவாக வெளிவந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படமும் 50 ஆண்டுகள் நிறைவைச் சந்திக்கும் தருணம் இது.
ஒரு லட்சத்தில் படம்
நவீன தமிழ் இலக்கியத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சிய ஜெயகாந்தன், ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதிப் பின்னர் நாவலாக வெளிவந்தது உன்னைப்போல் ஒருவன். வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படைப்பைத் திரைப்படமாக்கத் துடித்தனர் திரையுலகைச் சேர்ந்த பலர். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேடைகளில் நல்ல சினிமா பற்றி அடிக்கடி பேசி வந்த ஜெயகாந்தன், ‘ உன்னைப் போல் ஒருவன்’ கதையை, ரசனையைப் புதிய களங்களில் வளர்த்தெடுக்கத் தவறிய சினிமாக்காரர்களிடம் கொடுத்தால் அதை அவர்கள் சிதைத்து விடலாம் என்று அஞ்சினார்.
ஜெயகாந்தனின் எழுத்துகளுக்குத் தீவிர ரசிகராக இருந்தார் பட அதிபர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. தனது கதைகளில் ஒன்றை ஜெயகாந்தன் இயக்க முன்வந்தால் அதைத் தயாரிக்கத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதை நம்பிய ஜெயகாந்தன், ‘ உன்னைப் போல் ஒருவன்’ நாவலைப் படமாக்க விரும்பி அவரைச் சந்தித்தார். அதை வரவேற்ற கிருஷ்ணமூர்த்தி முதலில் நாவலைத் திரைக்கதையாக எழுதும்படி கேட்டுக்கொண்டார்.
பதினைந்து நாட்களில் திரைக்கதையை எழுதி முடித்தார் ஜெயகாந்தன். உடனடியாக வீனஸ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்துத் திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தார். மறுநாள் ஜெயகாந்தனை அழைத்த பட அதிபர் “ நாம் பெங்காளிப் படம்போன்று இங்கே எடுக்க முடியாது. இந்தத் திரைக்கதையில் உண்பது உறங்குவது சமைப்பது என்று கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் விலாவாரியாகச் சித்தரிக்கப்படுவதை யாரும் ரசிக்கமாட்டார்கள்” என்று கூற, அவருக்குப் புன்முறுவலுடன் கைகுவித்துவிட்டு வெளியே வந்தார் ஜெயகாந்தன்.
தனது இயக்கத் தோழர்களில் பலரைப் படத்துக்கான முதலீட்டைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுகோள் வைத்தார். அவரும் தன் பங்குக்குக் கொஞ்சம் முதலீடு செய்ய 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாயில் 21 நாட்களில் 1964-ம் ஆண்டு படத்தை இயக்கி முடித்தார் ஜெயகாந்தன். படத்தை வெளியிடும்முன் தேசிய விருதுக்கு அனுப்பி வைத்தார். அகில இந்திய அளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது இப்படம்.
காமராசரின் கோரிக்கை
1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படத்தை பத்திரிகைகள் கொண்டாடித் தீர்த்தன. பதவியில் இல்லாத காமராசர் படத்தைப் பார்த்துவிட்டு “ இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாகத் திரையிட வேண்டும்.
காரணம் நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம் நமது ரசனை மலிந்துபோனதுதான்” என்று பேசினார். அப்போது பக்தவத்சலம் முதல்வராகப் பதவிவகித்தார். காங்கிரஸ் ஆட்சியாக இருந்தும் ஜெயகாந்தனை காம்ரேட் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்ததால், காமராசரின் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லை.
தங்கமும் சிட்டியும்
எளிய வெகுமக்களின் வாழ்வில் ஒளிரும் உன்னதமான குணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரங்கள் ‘ உன்னைப் போல் ஒருவன்’ படத்தை யதார்த்தக் காவியமாக்கின.
கணவனை இழந்த தங்கம் குடிசைப் பகுதியில் வசிக்கும் வெள்ளந்தியான பெண். தன் ஒரே மகன் சிறுவன் சிட்டியோடு வசிக்கிறாள். இதே குடிசைப் பகுதியில் புதிதாக வந்து குடியேறும் கிளிஜோசியக்காரன் மாணிக்கம், தங்கத்துக்குக் கபடமற்ற ஆறுதலைத் தருகிறான். அது அவர்களைப் பிணைக்கிறது. அந்தப் பிணைப்பு தொடர்பாகவும் மாறுகிறது.
அபலைத் தாயின் இந்த உறவு சிட்டிக்குத் தெரிய வர, அதை எதிர்த்துக் குமுறுகிறான் வாழ்க்கை புலப்படாத அந்தச் சிறுவன். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தங்களுக்கு இடையிலான உறவை உதறித்தள்ளிவிட்டு ஓடாத இறுக்கமான பிணைப்பு கொண்டது எளிய மக்களின் வாழ்க்கைமுறை. நாவலில் விரவியிருந்த இந்தக் கருத்தையும் உணர்ச்சியையும் அவற்றின் கலைத்துவம் கெடாமல் இயக்கியிருந்தார் ஜெயகாந்தன். தங்கம், மாணிக்கம், சிட்டி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது தனித்துவம் இழக்காத அசல் மனிதராகப் படத்தில் மிளிர்ந்தன.
அவர்களது உணர்வுகளைச் சிட்டிபாபுவின் வீணை இசை காட்சிகளோடு கைகோத்துக்கொண்டு ரசிகர்களின் இதயத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. ஒரு பாடல் கூட இல்லாமல் பின்னணி இசையை மட்டுமே துணிச்சலாக வைத்தார் இயக்குநர் ஜெயகாந்தன்.
விற்க மறுத்தார்
பொழுதுபோக்கு அம்சங்களோடு இருப்பதுதான் திரைப்படம் என்பதில் மாறாக் கருத்து கொண்ட திரைமேதை ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியார், இந்தப் படத்தைப் பார்த்து வியந்து, அதன் கதை உரிமை உட்பட அனைத்து வெளியீட்டு உரிமைகளையும் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
அதேநேரம் பிரபலமான நட்சத்திரங்களை வைத்து அந்தப் படத்தைத் தமிழிலேயே மறு ஆக்கம் செய்யும் விருப்பமும் அவருக்கு இருந்தது. இதை அறிந்துகொண்ட ஜெயகாந்தன் படைப்பின் மீதிருந்த நம்பிக்கையால் அதைச் செட்டியாருக்கு விற்க மறுத்துவிட்டார்.
முகம் தெரிந்த நடிகர்கள் படத்தில் இல்லாததால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி வெளியிட முன்வரவில்லை. இதனால் சொந்தமாகவே படத்தை வெளியிட்டார் ஜெயகாந்தன். ஆனால் படத்தைப் பற்றி மக்கள் பேசும் முன்பே திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.
திரையரங்குகள் அல்லாத பொதுத் திரையிடல்கள் மூலம் செலவிட்ட தொகையைத் திரும்பப் பெறக் கடுமையாகப் போராடியது ‘ உன்னைப் போல் ஒருவன்’. ஆனால் இயக்குநர் ஜெயகாந்தன் இதற்காகவெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை.
இதன்பிறகு‘ யாருக்காக அழுதான்’, ‘காவல் தெய்வம்’, ‘ சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ உட்பட அவரது பல கதைகள் படமாக்கப்பட்டுத் தமிழின் நிஜமான புதிய அலை யதார்த்த சினிமாவுக்கு அடித்தளம் அமைத்தன.


நன்றி  - த  இந்து 

0 comments: