பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.
பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.
அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.
கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.
#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.
நன்றி - த இந்து
1 comments:
நம் மொழி
நமக்குப் பெருமை...
Post a Comment