Sunday, February 01, 2015

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமாரி கேள்விகள் -பவானிசிங் திணறல்

தனியார் நிறுவன சொத்துகளை பறிமுதல் செய்யாதது ஏன்? - ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப் பட்டுள்ள 6 தனியார் நிறுவனங் களின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது ஏன்? என்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார். இதனால் தனியார் நிறுவனங்கள் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக் கப்பட்டுள்ளன. இதில் மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், சைனோரா பைனான்சிஸ், இந்தோதோஹா கெமிக்கல்ஸ் ஆகிய 6 தனியார் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி மேல்முறையீடு செய்தன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசா ரணைக்கு வந்தன. அப்போது 6 தனியார் நிறுவனங்களின் சார்பில் வழக்கறிஞர்கள் படேல், குலசேகரன், செந்தில், மூர்த்திராவ், பன்னீர்செல்வம், பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
தனியர் நிறுவனங்களின் வழக்கறிஞர் படேல் வாதிடும் போது, “சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் இந்த 6 நிறுவனங் களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 1991-96 காலகட்டத்தில் நால்வரும் இந்த நிறுவனங்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணப்பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை.
இந்த 6 நிறுவனங்களின் முதலாளிகளுக்கும், வழக்கில் தொடர்புடைய நால்வருக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. இந்த நிறுவனங்கள் சார்பில் ஆண்டுதோறும் முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த நிறுவனங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இணைத்துள்ளனர். எனவே 6 நிறுவனங்களின் சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றார்.
எனக்கு அதிகாரம் இருக்கிறதா?
இதையடுத்து நீதிபதி குமாரசாமி கூறும்போது, “சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே எனது தலைமையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு அமர்வு அமைத்துள்ளது. இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள், வழக்கு தொடர்பான மற்ற மனுக்களை விசாரிக்க எனக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப் படவில்லை.
எனவே தனியார் நிறுவனங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க எனக்கு அதிகாரம் இருக்கிறதா? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங் விளக்க கடிதம் பெறவேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும் பவானி சிங்கிடம் நீதிபதி, “சிவில் வழக்குகளில் மேல் முறையீட்டில் அரசு வழக்கறிஞராக தொடர தனி அரசாணை தேவை யில்லை. ஆனால் குற்ற வழக்குகளில் மேல்முறையீட்டில் ஆஜராக தனி ஆணையும், அதற்கு அரசாணையும் வெளியிடப்பட வேண்டும். நீங்கள் எந்த ஆணை யின் அடிப்படையில் ஆஜராகிறீர் கள்” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பவானி சிங், “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஆணை வழங்கி இருக்கிறது” என்றார். இதற்கு நீதிபதி, “இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணை மட்டும் போதுமா? கர்நாடக அரசின் ஆணை தேவையா? என்பது குறித்து நீங்கள் யோசிக்கவில்லையா? மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்க இவ்வளவு கால அவகாசம் இருந்தபோது நீங்கள் ஏன் நீதிமன்றத்தில் கலந்து ஆலோசிக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
சொத்துக்களை பறிமுதல் செய்யாதது ஏன்?
இதனைத் தொடர்ந்து நீதிபதி, “சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உச்ச‌நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்று, அபராதத்தையும், வழக்கின் செலவையும் வசூலிக்கலாம் என சிறப்பு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
எனவே இந்த 6 தனியார் நிறுவனங்களின் சொத்துகளை இதுவரை பறிமுதல் செய்யாதது ஏன்? இதற்கு தடையாக இருப்பது என்ன?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொல்ல பவானி சிங்கால் முடியவில்லை. நீதிபதி யின் சரமாரி கேள்விகளால் தனியார் நிறுவனங்களின் வழக்கறிஞர் களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


நன்றி - த இந்து

0 comments: