மத்திய அரசின் சக்திவாய்ந்த இந்தத் துறை தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மத்திய உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து அனில் கோஸ்வாமியை நீக்கி, உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பாராட்டுக்குரியவர்கள். சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பணிபுரியட்டும் என்று அனுமதிக்கப்பட்ட மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) சுயேச்சையாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைவரும் இந்த நடவடிக்கையை வரவேற்பார்கள்.
திடீரென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல இது. கடந்த சில நாட்களாகவே டெல்லி அதிகார வட்டாரங்களில் இந்த விவகாரம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. சாரதா சீட்டுநிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் உள்துறை இணையமைச்சர் மாதங்க சிங் கைது செய்யப்படுவதைத் தடுக்க உள்துறைச் செயலராக இருந்த அனில் கோஸ்வாமி முயற்சி எடுத்ததை சி.பி.ஐ. இயக்குநர் தகுந்த ஆதாரங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார். ஐ.மு.கூ. அரசு பதவியிலிருந்து நீங்கிய பிறகும்கூட மாதங்க சிங் அதிகார வட்டாரங்களில் செல்வாக்குடன் திகழ்ந்தார். மத்தியப் புலனாய்வுக் கழகத்தையே மிரட்டிக் காரியத்தைச் சாதிக்க முயன்ற அவர் இம்முறை சிக்கிக்கொண்டுவிட்டார்.
அனில் கோஸ்வாமியும் மாதங்க சிங்கும் நீண்ட நாள் நண்பர்கள். சி.பி.ஐ. தன்னைக் கைது செய்துவிடக் கூடாது என்று கேட்டுக்கொள்வதற்காக உள்துறைச் செயலாளரை மாதங்க சிங் தொடர்புகொண்டிருக்கலாம், அவர்களுடைய உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். மாதங்க சிங்கைக் கைது செய்துவிட வேண்டாம் என்று சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவரிடம் அனில் கோஸ்வாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சி.பி.ஐ. இயக்குநராக இருந்திருக்க முடியாது. அந்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரியான இயக்குநரின் கவனத்துக்கு இதைக் கொண்டுவந்திருக்கிறார். உடனே சி.பி.ஐ. இயக்குநர் இதை உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். இம்மாதிரியான விவகாரங்களில் முழு உண்மைகளும் வெளியே வராது. எனினும், மூத்த அதிகாரியான அனில் கோஸ்வாமி செய்திருப்பது முழுக்க முழுக்க முறையற்ற செயல் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
மாதங்க சிங் மீதான குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்றங்களை அவர் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. உடனே சரியாகச் செயல்பட்டிருக்கிறது. இதை நீதிமன்றம் ஏற்குமா, அனுமதிக்குமா என்பதெல்லாம் அடுத்த கட்டங்கள். இப்போதைக்கு சி.பி.ஐ. விசாரணை நடைமுறைகளில் மத்திய அரசுகூட தலையிட முடியாது. இந்த விஷயம் தன்னுடைய காதுக்கு எட்டியவுடனேயே மத்திய அரசு விரைந்து செயல்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பதவிப் பறிப்பு நியாயமே
அனில் கோஸ்வாமி செய்தது அறமற்றது. அதற்காக அவர் தன்னுடைய பதவியையே பலிகொடுக்க நேர்ந்தது அவருக்குத் தகுந்த தண்டனை. சி.பி.ஐ. விசாரணையில் தலையிட முயன்றாலோ, தடுக்க முயன்றாலோ கடும் விளைவுகள் ஏற்படும் என்ற செய்தி இதன் மூலம் அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
மத்திய அரசில் உள்துறைதான் மிகவும் சக்தி வாய்ந்த துறை. அவ்வப்போது சலுகைகளைப் பெற பல போலீஸ் அதிகாரிகள் உள்துறைச் செயலாளர்களிடம்தான் மண்டியிடுவார்கள். கோஸ்வாமி வகித்த பதவியில் அவருக்கு முன்னால் இருந்த பலர் நேர்மையும், நல்ல தலைமைப் பண்பும் உள்ளவர்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. அதிகார மையங்களுடன் தங்களுக்கு இருந்த நெருக்கத்தைக் கொண்டு தகுதியற்ற சில போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம், நல்ல பதவிகள் என்று சலுகைகளை வாங்கித் தருவார்கள். அதே சமயம் திறமை இருந்தாலும், பணிய மறுத்த ஒரே காரணத்துக்காக நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கவும் செய்வார்கள்.
இத்துறையில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் இனிமையாக இருந்ததில்லை. சி.பி.ஐ.க்கு உள்துறை அமைச்சர் அளித்த அடித்தளக் கட்டமைப்பு உதவிகளைக்கூட முறையாகப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. தன்னுடைய கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லையே என்ற ஆத்திரத்தில் அதற்குத் தேவைப்படும் உதவிகளைக்கூட செய்ய மறுத்தவர்களும் இருக்கிறார்கள்.
பிரதமரின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ.
பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. இருக்கிறது, மத்தியப் பணியாளர், பயிற்சித் துறையின் கீழ் அது வருகிறது என்பது அதிகம் பேருக்குத் தெரியாது. இதுவும் மத்திய போலீஸ் படை என்பதால் உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே நினைத்துக்கொள்வார்கள். சி.பி.ஐ.க்குத் தேவைப்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெற்று சி.பி.ஐ.க்குத் தரும் வேலையை மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் செய்கிறது. மற்றபடி, சி.பி.ஐ. மீது அதற்கு அதிகாரம் கிடையாது, அதிலும் குறிப்பாக, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சகத்துக்குப் பங்கு இல்லை. ஊழல் வழக்குகள் மட்டுமல்லாமல் குற்றவியல் வழக்குகள், நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத இதர பிரச்சினைகளையும்கூட சி.பி.ஐ. விசாரணைக்கோ, தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) விசாரணைக்கோ உள்துறை அமைச்சகம் அனுப்பிவைக்கிறது.
பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் சி.பி.ஐ. இயக்குநர். சி.பி.ஐ.யை உள்துறை அமைச்சகத்திலிருந்து பிரித்து பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் இந்திரா காந்தி. பிரதமர்தான் இதன் மேலதிகாரி என்பதால் வெவ்வேறு அமைச்சகங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இதில் தலையிடவே அச்சம், தயக்கம் இருப்பதுண்டு. தனது துறை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர், உள்துறைச் செயலாளரிடம் எதையாவது தெரிவிக்கிறார் என்றால், அது ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்கு அவசியம் என்பதால்தானே தவிர சட்டப்படி கட்டாயம் என்பதற்காக அல்ல. இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இப்படியே இருந்தால்தான் வெவ்வேறு எஜமானர்கள் குறுக்கிட்டு, வெவ்வேறு கட்டளைகளைப் பிறப்பிக்காமல் தடுக்க முடியும்.
ஆத்ம பரிசோதனை அவசியம்
தற்போதைய விவகாரத்தில் சி.பி.ஐ. தனது நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் யாரும் அதன் செயலில் துணிந்து குறுக்கிட மாட்டார்கள் என்பதால் அதன் வலிமை கூடிவிட்டது. இப்போதுதான் சி.பி.ஐ. அமைப்பு, அரசுத் துறைகளுக்கு நடுவே தனக்கு இப்படியொரு தலைமைப் பீடம் தேவையா என்று ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சி.பி.ஐ.க்கு இந்த அளவுக்கு அதிகாரமும் செல்வாக்கும் கூடாது என்று அதைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறிவருகிறார்கள். எனவே, தங்களுடைய விசாரணைகள் நடுநிலை பிறழ்ந்தோ தரம்தாழ்ந்தோ, அரசியல் தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்படும் விதத்திலோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சந்தேகப்படுகிறவர்களையும் கைதுசெய்வதற்கு முன்னால் சட்ட அம்சங்களை நன்கு ஆராய வேண்டும். உச்சபட்ச அதிகாரம் கையில் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு அதைக் கையாள வேண்டும். சி.பி.ஐ.க்குத் தலைமை தாங்கிய 2 மூத்த அதிகாரிகள் மீது சந்தேகம் என்கிற மேகம் படர்ந்திருக்கும் சூழலில் கவனம் என்பது இனி மிகவும் அவசியம்.
‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்ற புளித்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அந்த அமைப்புக்குள்ளேயே விழிப்புணர்வும் கண்காணிப்பும் அதிகமாக வேண்டும். இயக்குநரும் அவருடைய உதவியாளர்களும் மிகுந்த நேர்மையோடு செயல்பட வேண்டும். தவறினால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும். சோம்பலுடன் சி.பி.ஐ. செயல்பட்டாலோ, ஊழல்வாதிகளுடன் கைகோத்தாலோ அது சாமானிய மனிதர்களைத்தான் மிகவும் பாதிக்கும்.
- ஆர்.கே. ராகவன், சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர்
© தி இந்து (ஆங்கிலம்), |தமிழில்: சாரி|
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment