Monday, January 26, 2015

The Theory of Everything - சினிமா விமர்சனம் ( உலக சினிமா )

அதுவரை இயற்பியல் உலகில் நிலவிய அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று, கருந்துளையின் பலமான ஈர்ப்பு விசையிலிருந்து ஒளிகூடத் தப்பிக்க முடியாது என்பதாகும். ஆனால் கருந்துளையிலிருந்து சில கதிர்வீச்சுகள் வெளியாகிறது என்று நிரூபித்தவர் ஸ்டீபன். பிற்காலத்தில் ஹாக்கிங் கதிர் வீச்சு என்றே அது அழைக்கப்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய இயற்பியல் ஆய்வு கட்டுரைகளும், ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) எனும் புத்தகமும் விண்வெளி இயற்பியலில் (Astrophysics) புதிய திறப்புகளை ஏற்படுத்தின. 



அத்தகைய இயற்பியல் மாமேதையின் வாழ்வை அற்புதமாகச் சித்தரிக்கும் திரைப்படம் ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ (The Theory of Everything). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி மாணவரான ஸ்டீபனுக்கும் ஆங்கில இலக்கிய ஆய்வு மாணவியான ஜேனுக்கும் காதல் மலர்கிறது. ஸ்டீபன் ஒரு புறம் அபாரமான அறிவியல் மாணவனாக ஜொலிக்கிறார். மறுபுறம் காதலில் திளைக்கிறார். 21 வயது வாலிபனான ஸ்டீபன் ஒரு நாள் தடாலென்று கீழே விழுகிறார். அள்ளிக் கொண்டு போய் மருத்துவரிடம் காட்டினால், ‘எமையோட் ரோபிக் லேட்ரல் ஸ்கிலாரசிஸ்’ எனும் நரம்புக் கோளாறால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் வாழும் சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். 



இது தெரிந்த பின்பும்,எது நடந்தாலும் சரி எனத் துணிச்சலாக முடிவெடுத்து ஸ்டீபனை மணக்கிறார் ஜேன். ஒரு கட்டத்தில் கண்ணை இமைப்பது தவிர வேறெதையுமே செய்ய முடியாமல் போகிறது. ஆனால் அத்தனை காதலோடு 26 வருடங்கள் ஸ்டீபனுக்கு அர்ப்பணிக்கிறார் ஜேன். காலச்சுழலில் வாழ்க்கை பாதை மாற ஜேனும் ஸ்டீபனும் விவாகரத்து செய்ய நேர்கிறது. (இருப்பினும் நிஜத்தில் இன்றுவரை 74 வயதாகும் ஸ்டீபனின் நல்ல தோழியாக இருந்து வருகிறார் ஜேன்.) ஆருயிர் காதலர்களுக்கு இடையில் என்ன நடந்தது? விவாகரத்துக்குப் பிறகு ஸ்டீபன் மற்றும் ஜேன் வாழ்க்கை எப்படி மாறியது? இவற்றை நெகிழ வைக்கும் காட்சி மொழியில் சித்தரிக்கிறது படம். 



‘டிராவலிங் டு இன்ஃபினிட்டி: மை லைஃப் வித் ஸ்டீபன்’ என்ற தலைப்பில் ஜேன் பில்டே ஹாக்கிங் எழுதிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இந்தியாவில் நேற்று வெளியாகியிருக்கும் ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகள், ஹாலிவுட் பிலிம் விருதுகள், த ஹாலிவுட் ரிப்போர்ட்டர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. 



ஸ்டீபன் ஹாக்கிங் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய எட்டி ரெட் மெய்ன், ஜேன் வில்டே ஹாக்கிங் கதாபாத்திரத்தில் தீரா காதலை வெளிப்படுத்தி அனைவரின் கண்களை பனிக்கச் செய்த ஃபெலிசிட்டி ஜோன்சியும் ஏகோபித்த பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். அத்தனை சோதனைகளையும் வென்ற ஒரு மாமேதையின் காதல் கதையை அருமையாக படமாக்கிய இயக்கு நர் ஜேம்ஸ் மார்ஷ் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆண்டனி மேக்கார்டனை நோக்கி விருதுகள் படை எடுத்து வருகின்றன. 



காதலின் ஊடே இயலாமையை வெல்ல முடியும் என்பதை சிறந்த பின்னணி இசை மூலம் வெளிப்படுத்தியதற்காக இசையமைப்பாளர் ஜோஹன் ஜோஹன்சனுக்கும் ஏராளமான விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

நன்றி - த  இந்து

0 comments: