Thursday, January 22, 2015

Taste of Cherry (1997) - சினிமா விமர்சனம் ( உலக சினிமா )

எதிர்பார்ப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை அணுகுபவர்களுக்கு இந்த வாழ்க்கை பெரும்தோல்விதான். அதேநேரத்தில் முயற்சியின் ஊடாக கிடைத்தவற்றில் இருந்து வாழ்வை துவங்குபவர்களுக்கோ இந்த வாழ்க்கை ஒரு செர்ரிப்பழம் என்று கூறுகிறது 'டேஸ்ட் ஆஃப் செர்ரி' திரைப்படம்.
தற்கொலை செய்துகொள்ள விழைந்து அதற்காக மெனக்கெடுபவர்களை அதிலிருந்து முற்றிலுமாக மீட்டெடுக்கும் மிக உன்னதமான பணியை இத்திரைப்படம் செய்கிறது.
நடுததர வயதுள்ள பாடி என்பவர் டெஹ்ரானில் சாலைகளில் மெதுவாக தனது காரை ஓட்டியபடியே பிளாட்பார ஓரங்களில் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறார். காலையில் தினப்படி வேலை அழைப்புகளுக்காக சாலையோரங்களில் காத்திருக்கும் சிலர் ''சார் வேலைக்கு ஆள் வேணுங்களா'' என்று கேட்கிறார்கள். அவர் எதுவும் சொல்லாமல் காரை அருகிலுள்ள மலைப் பிரதேசத்திற்குச் செலுத்துகிறார். அங்குதான் அவர் செய்ய வேண்டிய ஒரு வேலை உள்ளது. உண்மையில் அந்த வேலையைச் செய்வதற்கு உதவியாக ஒர் ஆளைத்தான் அவர் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர் அழைக்கும் வேலைக்குச் சம்மதிக்க வேண்டுமே.
மலைப்பாதை வழியில் ஓரிருவர் அவர் காரில் ஏறவும் செய்கிறார்கள். ஆனால், அவர் எதிர்பார்க்கும் பணியை ஓர் உதவியாகக்கூட யாரும் செய்யத் தயாராக இல்லை. அப்படி இவர் கார்களில் ஏறி வருபவர்களை அழைத்துச் சென்று மலையின் வேறு வேறு பாதைகளில் பயணித்து மலையின் பின்பக்கம் யாருமற்ற வனாந்தரம்போல ஆளரவமற்ற ஆழ்ந்த அமைதியான பகுதிகளில் இவர் தோண்டி வைத்திருக்கும் பள்ளத்தின் அருகே கொண்டுவந்து காரை நிறுத்துகிறார்கள்.
இவர் காரில் வைத்திருக்கும் ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட பிறகு, இவரை அந்தப் பள்ளத்தில் தூக்கிப் போட்டுவிட வேண்டுமாம். (இது என்ன கதையாக இருக்கிறது) அதன்பிறகு மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு செல்லவேண்டியதுதான். அதற்காக இவர் தரவுள்ள ஊதியம் 2 லட்சம் டோமன். அனேகமாக இவர் ஓட்டிவரும் இந்தக் காரின் விலையும் அதுதான். அதைத்தான் சொல்கிறார்போல.
ஆனால், காரில் இவரோடு வந்த மனசாட்சியுள்ள குர்திஸ்தான், ஆப்கான் இளைஞர்கள் இருவர் இவர் கூட்டிவந்த இடத்திற்கு வந்ததும் இவர் கூறியதைக் கேட்டதும், மறுத்துவிட்டு காரைவிட்டு இறங்கி ஓடுகிறார்கள். ஏதோ வேலையென்று சொல்லிவிட்டு கடைசியில் இந்த மாதிரி வேலைக்கு அழைத்து வந்திருக்கிறாரே இந்த மனுஷன் யாருக்கு வேணும் 2 லட்சம் டோமன், ஐயா ஆளைவிடுங்கள் என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவது போன்றதாக இருக்கிறது அவர்கள் எடுக்கிற ஓட்டம்.
அடுத்ததாக ஒரு பெரியவர் வருகிறார். ஒரு வேலை இருக்கிறது செய்யமுடியுமா என்று கேட்டமாத்திரத்திலேயே வருகிறார். தவிர, பாடி தனது தற்கொலை புராஜெக்டைப் பற்றி எடுத்துக் கூறியபோது எந்த வித பதற்றமும் அவர் அடையவில்லை. கார் பல மேடுபள்ளங்களைத் தாண்டி மலைகளின் விஸ்தாரமான வளைவுகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வெளிவந்திருப்பவர் அந்தப் பெரியவர். இதற்கப்புறம் என்ன வாழ்க்கை இருக்கிறது என வெறுத்து தற்கொலை செய்துகொள்ள துணிந்த தனது அனுபவத்தை மெதுவாக இவருடன் பகிர்ந்துகொள்ளத் துவங்குகிறார்.
அதிகாலை சாலையோரம் இருந்த ஒரு கார் கூரைமீது ஏரி மேலேயிருந்த கிளைகளை இழுத்து ஒரு கயிறைக் கட்டி தூக்குமாட்டிக்கொள்ள அதற்கான வேலைகளில் இறங்குகிறார். அந்த நேரம் மேலிருந்த மரக்கிளைகளிலிருந்த செர்ரிப்பழங்கள், மல்பரிப் பழங்கள் விழத் துவங்குகின்றன. அவற்றை எடுத்து சுவைத்துப் பார்த்ததையும் கூறுகிறார். அப்போதுதான் காலை விடியத்துவங்கி மலைக்குப் பின்னாலிருந்து சூரியன் எழுந்துவந்ததையும் தெரிவிக்கிறார்.
ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக வீட்டு ப்ரிட்ஜில் நிறைய பழங்களை வைத்திருந்து எடுத்துத் தருகிறார். தாயோ ப்ரிட்ஜோ இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில், வெவ்வேறு பருவத்திற்கு ஏற்றவாறு நிறைய பழங்களை தந்திருக்கிறார் கடவுள். வாழ்வின் சுவையை உணர குறைந்தபட்சம் செர்ரிப்பழத்தின் சுவையாவது நாம் அனுபவிக்க வேண்டும் என்று பெரியவர் பேசிச் செல்ல, கார் மலையின் வேறு பாதையை நோக்கிச் செல்லத் துவங்குகிறது.
இப்படத்தின் நாயகன் ஹூமாயூன் எர்ஷாடியின் நடிப்பு மிக மிக யதார்த்தமானது. பேச்சின் வழியாகவே தான் கடந்துவந்த அனுபவத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் பெரியவராக வந்த அப்டோர்ரஹ்மான் பாகெரியின் பங்களிப்பில் இப்படம் வேறு ஓர் உயரத்திற்குச் செல்கிறது. வாழ்க்கை மீது பிடிப்பைத் தரும் அறிய செய்திகளைத் தாங்கி 1997-ல் வெளிவந்த இந்த ஈரானியப் படத்தை இயக்கியவர் உலகின் உன்னத இயக்குநர்களில் ஒருவரான அப்பாஸ் கியாரஸ்
 
 
நன்றி - த இந்து

0 comments: