சென்னையை உலுக்கிய சினிமா- மிஸ்டர் கப்லான் (Mr. Kaplan)
சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
மிஸ்டர் கப்லான் (Mr. Kaplan)
உருகுவே நாட்டு நகைச்சுவைத் திரைப்படம். ஆனால் வெறுமனே நகைச்சுவைத் திரைப்படமல்ல. இதன் பின்னால் காலத்தாலும் ஆறாத வரலாற்றுப் பகையும் துயரமும் உள்ளது. ஜேக்கப் கப்லான் இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து உருகுவே நாட்டிற்குப் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட, புலம் பெயர்ந்த ஒரு யூதர். எந்தவொரு யூதரையும் போலவே நாஜிகளால் பாதிக்கப்பட்டவர்.
சிறு வயதில் பெயர் சூட்டப்படும் நிகழ்ச்சியின்போது 'யூதச் சமுதாயத்திற்காக நற்பணியும் சேவையும் ஆற்ற வேண்டும்' என்று அவரது தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டவர். இப்போது எழுபதுக்கும் மேற்பட்ட வயதாகும் கப்லானுக்கு இயந்திர வாழ்க்கையும் சக யூதர்களின் போலித்தனங்களும் சலிப்பேற்றுகின்றன. சிறு வயதில் போதிக்கப்பட்ட தந்தையின் உபதேசம் வேறு நினைவிலேயே உறைந்திருக்கிறது.
வேறு அடையாளத்தில் நீண்ட வருடமாக மறைந்திருந்த நாஜி ஒருவர் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கிறார் கப்லான். இந்தச் செய்தியிலுள்ள சாகசம் அவரைச் சிந்திக்க வைக்கிறது. கடலோரத்தில் உணவகம் நடத்திவரும் ஜெர்மனியர் ஒருவரை 'நாஜி' என்று செல்லமாக அழைப்போம் என்று அவருடைய பேத்தி சொன்னது அவரது நினைவிற்கு வருகிறது. அந்த நபரை ரகசியமாகக் கண்காணிக்கிறார் கப்லான். விசாரணையில் அவர் நாஜி என்பது உறுதியாகத் தெரிகிறது.
அவரைக் கடத்திச்சென்று இஸ்ரேலின் நீதி விசாரணை முன் நிறுத்த வேண்டும் என்பது கப்லானின் ரகசியத் திட்டம். எழுபது வயதுள்ளவரால் இது சாத்தியமா? எனவே போலீஸ் வேலையை இழந்த ஒரு அசட்டு நபரைத் துணைக்கு வைத்துக்கொள்கிறார்.
இருவரின் நகைச்சுவையான, நெகிழ்ச்சியான சாகசங்கள்தான் திரைப்படம். குற்றவுணர்வுள்ள ஜெர்மனியரும் மனித நேயமுள்ள யூதரும் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்ளும் நெகிழ்வான இறுதிக் காட்சிகளுடன் படம் நிறைவுறுகிறது.
காட்சிகள் நகைச்சுவையாக நகர்ந்தாலும் நாஜிகள் யூதர்கள் மீது நிகழ்த்திய இனவொழிப்புச் சம்பவங்கள் நினைவிற்கு வந்து இதன் அவலச்சுவையைக் கூட்டுகின்றன. அற்புதமான திரைப்படம். ஆல்வாரொ ப்ரிச்னர் இயக்கியிருக்கும் இந்தப் படம் உருகுவே நாட்டின் சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட திரைப்படம்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment