Sunday, January 18, 2015

‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள் கருத்துக்கள், சர்ச்சைகள்

பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான சர்ச்சை குறித்த எதிர்வினைகள்

தலைகுனியும் நேரம்

வாஸந்தி, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்
பாரத நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் நிகழ்ந்திராத பகுத்தறிவு / சுயமரியாதை இயக்கம் மலர்ந்த தமிழ் நாட்டில் எழுத்தாளர்கள் ஜாதி அமைப்புகளின் மிரட்டலுக்குப் பயந்து பேனாவை மூடி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமக்குத் தாமே இரங்கற்பா எழுதுகிறார்கள். நான் எழுதுவது எழுதியது எல்லாமே நெருப்பில் போடப்பட வேண்டியவை; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னை வாழ மட்டும் விடுங்கள். நான் சொன்னது தவறு. மறந்துவிடுங்கள் ஐயா, என்னையும் என் குடும்பத்தையும் வாழ மட்டும் விடுங்கள்.
இது பராசக்தி நாடகமல்ல. ஓட ஓட விரட்டப்பட்ட ஓர் எளிய எழுத்தாளனின் புலம்பல். இந்த விஷயம் நாடெங்கிலும் பரவிவிட்டது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களிலிருந்து வரும் ஆங்கில நாளிதழ்கள் தலையங்கம் எழுதுகின்றன.
பெரியாரை யாருக்குமே இன்று நினைவில்லை. அவர் சொன்ன சேதியும் எவருக்கும் தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் தங்களது சுய மரியாதை வேறு எதிலோ இருப்பதாக நினைக்கிறார்கள். குல கௌரவம் தமது ஜாதியில் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் வேடிக்கை. ஒரு புத்தகம் வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் நெருப்பைக் கக்குகிறார்கள் அதில் தங்கள் இனத்தையும் தெய்வத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார் என்று ஒருமித்துக் குரலெழுப்புகிறார்கள். இந்த ரோஷம் இப்போது எப்படி வந்தது? யார் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பது?
அங்குதான் இருக்கிறது விஷயம். இன்று நாட்டில் வெகு வேகமாக, மூர்க்கமாக ஓர் அலை திடீரென்று வேகம் கண்டதுபோல் சகட்டு மேனிக்கு வீசிவருகிறது. இங்கொரு கல் அங்கொரு கல் வீசிப் பார்க்கிறது. இந்துத்துவ சக்திகள் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்படுகின்றன. புத்தகங்களுக்குத் தீ வைக்கிறார்கள். இந்து அல்லாதவரை முறை தவறிப் பிறந்தவர்கள் என்கிறார் ஓர் அமைச்சர், முஸ்லிம்களே வீடு திரும்புங்கள் என்கிறார் இன்னொருவர். அமைச்சர்கள், முதலமைச்சர்கள் இப்படிப் பேசும்போது பிரதமர் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். ஜாதிப் பெருமையும், மூட நம்பிக்கைகளும் துவேஷமும் புதுப் பலம் பெற்றிருக்கின்றன. அவர்களது முதல் வெற்றி பெருமாள்முருகனின் சரணாகதி.
புத்தகம் தடைபட்டால் அந்த எழுத்தாளரைக் கொலை செய்வதுபோல. அதைத்தான் பெருமாள்முருகன் சொல்லாமல் சொல்கிறார். அவரது செய்கை அதீதமானதுதான். அவர் பட்ட வேதனையும் அதீதமானது. எழுத்தாளர்களும், தமிழ்ச் சமூகமும் ஒட்டுமொத்தமாகத் தலை குனிய வேண்டிய நேரம் இது.

அரசியலமைப்புக்கு எதிரானது

ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், தமுஎகச
பெருமாள் முருகனின் அறிக்கையை முதலில் வாசித்தபோது அதிர்ச்சியும் வேதனையும் உண்டானது. ஓர் எழுத்தாளனைச் சமூகம் இப்படி நிறுத்திவிட்டதே என நினைத்து வருந்தினேன். யோசித்துப் பார்த்தால் இது அவருடைய தவறு அல்ல. அரசு நிர்வாகத்தின் மீதுதான் கோபம் வந்தது. ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்ற பயிற்சி இல்லாத சமூகமாக இருக்கிறோம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.
மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் பெருமாள் முருகனைக் காயப்படுத்தியிருக்கிறது. ‘என்ன எழுத்து’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், அவரது மேலும் மூன்று நாவல்களையும் தடைசெய்யக் கோரினார். இது போன்ற செய்திகள் அவரை விரக்தியில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் நடந்துகொண்டது அரசியலமைப்புக்கு எதிரான செயல். இதை எதிர்த்து தமுஎகச சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவிருக்கிறோம். இப்போது இந்தப் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. கேரளத்தில் இருந்து ஆதரவு வந்துகொண்டிருக்கிறது.

அவசரமான முடிவு

நாஞ்சில் நாடன், எழுத்தாளர்
எழுத்தாளன் என்பவன் அடுத்த தலைமுறையைச் சிந்தித்து எழுதுபவன். அவனுடைய கருத்து நிகழ்காலத்தில் விமர்சிக்கப்படலாம். அவன் தவறுகளும் செய்யலாம். தன் எழுத்து தனிப்பட்ட முறையில் யாரையாவது புண்படுத்துவதாக இருந்தால் அவன் வருத்தம் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட அந்தப் பகுதியை நீக்கலாம். ஆனால் அவன் முடங்கிப் போய்விடக் கூடாது. பெருமாள்முருகனின் இந்த முடிவு அவசரப்பட்டது என நினைக்கிறேன். ஊடகங்களில் பெருமாள்முருகனுக்கு எதிரான இந்தச் செயல்களைத் தொடர்ந்து கண்டித்து அவருக்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவித்துவருகிறேன். ஆனால் அவரது இந்த அறிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
படைப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் எனச் சொல்லியிருக்கக் கூடாது. உறுதியாக இருந்திருக்க வேண்டும். எழுத்தாளனை மிரட்டிக் கையெழுத்து வாங்குவதற்கு அவர்கள் யார்? பெருமாள்முருகன் அதற்குச் சம்மதித்திருக்கக் கூடாது. இது அவரது தனிப்பட்ட முடிவுதான். என்றாலும் எழுத்தாள நண்பர்களுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் அவர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். மாறாகக் கையெழுத்துப் போட்டதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையில் அவர் எந்த நெருக்கடியில் இருந்தார் எனத் தெரியவில்லை. இந்தச் சம்பவம், எழுத்தாளர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் கூட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடியதல்ல

இரா. காமராசு, கலை இலக்கியப் பெருமன்றம்
ஓர் எழுத்தாளனின் உயிர் மூச்சு அவன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் மண். நீரைக் குடித்து, காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதைப் போல்தான் எழுத்தாளனுக்கும் அவன் மண்ணுக்குமான உறவு. மீனைத் தண்ணீரிலிருந்து எடுத்து வெளியே போட்டதுதான் பெருமாள் முருகன் விஷயத்தில் நடந்தது. தான் நேசித்த மண்ணையும் மக்களையும் பிரிவது, விலக்கிப் பார்ப்பது அவரால் முடியாத ஒன்று. இந்த ஆற்றாமைத் துயர்தான் தன்னைப் பொதுவெளியிலிருந்து அகற்றிக்கொள்ள அவரைத் தள்ளியிருக்கிறது. என்றாலும் இது தனியொரு பெருமாள்முருகனுக்கு நேர்ந்தல்ல. அவர் ஒரு குறியீடுதான்.
சாதீயத்தின் கொடூர முகத்தை இந்தச் சிக்கலும் உணர்த்திவிட்டது. தனியதிகாரமாக உருவெடுக்கும் மதமும் இணைந்துகொண்டதில் வியப்பில்லை. இன்று திருச்சங்கோடு. நாளை திருநெல்வேலியாக, தர்மபுரியாக, மதுரையாக மாற அதிக நேரம் பிடிக்காது. அது மட்டுமல்ல; இனி கதைகளில் வரும் எந்தவொரு தனிக் கதாபாத்திரத்தையும் யாரேனும் ஒருவர் உரிமை கொண்டாடலாம். தன் முகத்தைப் பொருத்தி, இழிவுபடுத்திவிட்டதாக அரிவாள் தூக்கலாம்.
எழுத்துக்கும், கருத்துக்கும் அரணாக இருக்க வேண்டிய அரசு, கட்டப் பஞ்சாயத்தில் இறங்குகிறது. இடதுசாரிக் கட்சிகள், இலக்கியவாதிகள், ஒரு சில தலைவர்கள், ஊடகங்கள் தவிர்த்துத் தமிழ்ச் சமூகம் வழக்கம்போல வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது. என்றாலும் நாள்தோறும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடப்பது நம்பிக்கை தருகிறது.
பெருமாள்முருகனுக்கு ஒரு வேண்டுகோள். விலகும் முடிவை விலக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்காகக் குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வில் கலந்து உறவாடுங்கள். உங்கள் எழுத்து திரும்பப் பெற்றுக்கொள்கிற, எரித்து அழித்துவிடுகிற எழுத்து அல்ல.

மனித உரிமை மீறல்

ச. பாலமுருகன், எழுத்தாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
விரக்தி, பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல் போன்ற காரணங்களால்தான் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது சமூகம் மிக மோசமான பிற்போக்காக மாறிவருகிறது என்பதற்கான சாட்சி. சகிப்புத்தன்மையே இல்லாமல் ஆகிவிட்டது.
எல்லாமும் புனிதமாக மாற்றப்பட்டுவருகின்றன. சாதி, மத ஆதிக்கத்தால் பெருமாள் முருகனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அரசும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டுள்ளது என்பதுதான். இதில் பெருமாள் முருகன் என்பவர் ஒரு குறியீடுதான். அவர் எழுதுவதை நிறுத்திவிட்டால் திருச்செங்கோடு மக்களுக்குத்தான் பாதிப்பு. தன் எழுத்துகளின் மூலம் அவர் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திவருகிறார். இதை அந்த மக்கள் உணர வேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதையும் இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை என்பது கட்டாயப் பஞ்சாயத்துதான். அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எழுத்தாளரை மன்னிப்புக் கேட்கவைக்கும் அதிகாரத்தை மாவட்ட வருவாய் அதிகாரிக்குச் சட்டம் வழங்கவில்லை. இது 1948-ம் ஆண்டின் உலகளாவிய மனித உரிமைச் சட்டதை மீறக்கூடிய செயல்.
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் பெருமாள் முருகன். மேலும் கல்விக் கொள்ளை பற்றித் தொடர்ந்து எழுதிவருகிறார். இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரி சகாயத்தை ஆதரித்துப் புத்தகம் எழுதியுள்ளார். இந்து மத அவதூறுக்கு அப்பாற்பட்டு இந்த மூன்றும் பெருமாள் முருகன் மீதான எதிர்ப்புக்குப் பின்னாலுள்ள முக்கியக் காரணங்கள் என நினைக்கிறேன். பெருமாள்முருகன் விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடந்துகொண்டது முழுக்க முழுக்கச் சட்ட விரோதமானது.

சமூகத்தின் இழப்பு

ஜோதிமணி, எழுத்தாளர்
பெருமாள்முருகனுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் மிகத் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் பாசிசம் நுழைவதற்கான அறிகுறியாக இதைப் பார்க்கிறேன். அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு இது.
ஒரு நாவலின் இரண்டே இரண்டு பக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டு தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். மொத்த நாவலும் குழந்தை இல்லாத பெண்ணின், ஒரு குடும்பத்தின் வலியைப் பேசுகிறது. ஆனால் இந்த நாவலைப் பெண்களுக்கு எதிரானதாகச் சொல்கிறார்கள்.
எழுத்தாளர் என்ற முறையில் பெருமாள்முருகன் திரும்ப எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பெருமாள் முருகனுக்குத் தமிழக அளவில் மிகப் பெரிய ஆதரவு திரண்டது உண்மைதான். ஆனால் அவை எல்லாமும் கருத்து ரீதியான ஆதரவுதான். களத்தில் வந்த மிரட்டல்களை அவர் தனியாகத்தான் எதிர்கொண்டார். கண்டன அறிக்கைகள் மட்டும் அவரைக் காப்பாற்றாது. கள ஆதரவு வேண்டும்.
இது தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் முன்னெடுக்க வேண்டிய போராட்டம் அல்ல. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இன்றைய தமிழ்ச் சூழலில் எழுத்தாளனாக இயங்குவதே ஒரு பெரிய சமூகச் செயல்பாடுதான். எந்த அங்கீகாரமும் இல்லாமல் இயங்க வேண்டிய சூழலில்தான் எழுத வேண்டியதுள்ளது. அந்த வகையில் இந்த இழப்பு பெருமாள் முருகனுக்கானதுதல்ல; சமூகத்துக்கானது. குறிப்பாக கொங்கு மண்ணுக்கானது. ஏனெனில் பெருமாள்முருகன், கொங்கு நாட்டுச் சொல்லகராதி, கொங்கு நாட்டு வரலாறு, கொங்குச் சிறுகதைகள் எனப் பல பங்களிப்புகளைக் கொங்குப் பகுதிக்காகத் தந்துள்ளார்.

நியாயங்களின் வலிமைதான் என்ன?

ப்ரேமா ரேவதி, எழுத்தாளர்
நியாயங்களைப் பேசுவதற்கான களம் அல்ல இது. திரை மறைவில் யாரோ தூண்டிவிட, சில நபர்கள் தொடங்க, ஊர் பிரச்சினை என்ற பெயரால் பலர் ஆதரிக்க, பழுதுற்ற அரசு இயந்திரத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எனப் பெயரிடப்பட்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிரச்சினை இது. கற்பனையின் குதிரையில் ஏறி தான் பிறந்த சாதி, தான் வாழ்ந்த தெரு, தான் உண்ட உணவு என்பவற்றை மட்டுமே வலம் வரும் பல எழுத்தாளர்களைப் போலல்லாமல் தன் பிறப்பு தனக்கு அளித்த வட்டங்களைத் தாண்ட முயன்றவர் பெருமாள்முருகன்.
அதற்கான பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டவர். அவரைச் சுயகொலை செய்துகொள்ள வைத்து, அதையும் அவரையே அறிவிக்கச் செய்துள்ளது இந்தப் பொல்லாமை. சாதியின் தூய்மையை மதம் காப்பாற்றும், மதத்தின் குடையின் கீழ் சாதிப் புத்தி புனிதம்பெறும் படுகளம் இது.
எழுதுகோலும் சொற்களுமே சொத்தென்று வாழ்வோர் அறத்தின் பக்கம் நின்று நியாயங்களை மட்டுமே பேச முடியும். நாவலை வாசிக்காமல் பெண்களின் மானத்தை நிலுவையில் வைத்து வன்முறைகளை ஏவிவிடுவோம் எனப் போரிடும்போது நியாயங்களின் வலிமைதான் என்ன?
ஒரு நாவல் வாய்மொழி வழக்காறுகளின் ஊடாய் ஒரு கற்பனையான கதையை முன்வைத்தால் தம் பெண்களின் மானம் கலைந்துவிடும் எனக் களம் காண்கின்றனர், சாதித் தலைவர்களும், மதப் புனிதர்களும், இவர்களுடன் இணைக்கப்பட்ட சாமானிய பக்தர்களும். முச்சந்தியில் நிற்கவைக்கப்பட்டிருப்பது எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் மட்டுமல்ல. பெண்களின் உடல் மீது ஆண்டாண்டு காலமாய் வன்முறையாய்த் தன் அதிகாரத்தை நிலைநாட்டிவரும் ஒரு சமூகத்தின் கோர முகமும்தான்.

வாசக எதிர்வினைகள்

எழுத்துச் சுதந்திரம் கேலிக்கூத்தாகிவிட்டது..
கருத்துரிமை எழுத்தாளர்களுக்கு மட்டும் தானா? அந்த கருத்துரிமை அடுத்தவங்க உரிமை அல்லது நம்பிக்கையை கீழ்த்தரமாக நினைக்க கூடாது. இந்தமாதிரி எழுத்தாளர்களை சப்போர்ட் செய்வதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. எழுத்து சுதந்திரம் ஒரு கேலிக் கூத்தாகி விட்டது.
கணேசன்.வி - இணையம் வழியாக
போராடித்தான் ஆக வேண்டும்
ஒரு நாவல் என்பது முழுமையாகப் படைப்பாளனின் கற்பனை சார்ந்தது. அதில் வரலாற்றின் சாரல்களும் பண்பாட்டின் துளிகளும் கலப்பது என்பது அப்படைப்பின் தேவையையும் படைப்பாளியின் திறமையையும் பொறுத்தது. ஒரு படைப்பாளன் தனக்குள்ள கருத்துச் சுதந்திரத்தின் எல்லைக்குள் இருந்துதான் செயல்படுகிறான், செயல்பட வேண்டும். இந்தக் கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 மற்றும் 501க்குள் வரையறுக்கப்பட்டபடி பிற மனிதனின் சுதந்திரத்தை, உணர்வுகளை, நற்பெயரைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.
அப்படிப் பாதிக்காத பட்சத்தில், தனது எழுத்து ஒரு பிரச்சினையாக உருமாறும்போது அது தனக்குள்ள கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை மீறவில்லை என்பதை அவ்வெழுத்தாளன்தான் நிலைநிறுத்த வேண்டும். அதற்காகப் போராடித்தான் ஆக வேண்டும் என்றால் போராடித்தான் ஆக வேண்டும். அதை விடுத்து, எழுதுவதை விட்டு, ஊரை விட்டு, விலகிச் செல்வது என்பது வருந்தத் தக்கது.
அவரது படைப்பு, அது ஏற்படுத்திய எதிர்ப்புணர்வுகள், அதன் பின்விளைவுகள் இவையெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும்.
- எம்.எஸ். சௌந்தரராஜன், கோவை.
கலைஞனைச் சிதைத்த குற்றவாளிகள்
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் வெட்கப்பட வேண்டிய, விரக்தியடையக்கூடிய ஒரு சமூக, கலாசார, அரசியல் சூழலில் இருப்பது கோபத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு கலைஞனைச் சிதைத்த குற்றவாளிகளாக எண்ண வைக்கிறது. பெருமாள் முருகனை மறுபடியும் உயிர்த்தெழச் செய்வது நாம் அவருக்குத் தெரிவிக்கும் ஒட்டுமொத்த ஆதரவால் மட்டுமே சாத்தியம்.
- எம். நாராயணன், மதுரை.
முற்போக்குத்தனமா? பிற்போக்குத்தனமா?
இன்றளவும் பெயர், இடம் மாறாமல் உள்ள, மிகப் பிரபலமான ஒரு கோவில். அதில் இன்றளவும் தொடரும் ஒரு பண்டிகை. அதில் காலம் காலமாய், இன்றளவும் பங்கெடுக்கும் ஒரு முக்கிய சாதியினர்.. இவ்வளவையும் தெளிவாக விவரித்து.. படிக்கும் வாசகர்.. இடம் மற்றும் நிகழ்வுகளோடு வெகு சுலபமாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட பிறகு.. ஒரு அடிப்படை ஆதாரமற்ற செய்தியை இந்து பெண்களின் கற்புடன் சம்பந்தப்படுத்தி அல்லது களங்கப்படுத்தி எழுதினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தவிர முற்போக்கு எழுத்தாளர்கள் என்கின்ற போர்வையில் சிலர் இப்படிப்பட்ட கருத்துக்களை சமூகத்தில் விதைக்க முற்படுவது முற்போக்குத்தனமா? பிற்போக்குத்தனமா?
ராமகிருஷ்ணன் - இணையம் வழியாக
துன்பியல் முடிவு
பெருமாள் முருகன் ‘இலக்கியத் துறவை’த் தெரிவு செய்தது, ஒரு துன்பியல் முடிவு. விவாதத்துக்குரிய பிரச்சினைகளைத் தொடும்போது, எழுத்தாளன், விமர்சனங்களை எதிர்கொள்ளும் தார்மிக ஆளுமையையும் தற்சார்பையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது புலப்படுகிறது.
பக்க பலமும் பாதுகாப்பும் இல்லாத சூழலில், தனிமனிதனாக, குடும்ப மனிதனாக, அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, அவரைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முடிவுகளை அறிவிக்கும் அவரின் ஒவ்வொரு எழுத்திலும் விவரிக்க முடியாத வலியும் ஆற்ற முடியாத வெறுமையும் அமைதியாகக் குமுறுகின்றன. கருத்துச் சுதந்தரத்தை வன்முறை மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணும் ஒரு கூட்டம், திட்டமிட்டு முன்னோட்டம் பார்த்திருக்கிறது.
- நந்தா, போடிநாயக்கனூர்.
செத்தது எழுத்துரிமை
எழுத்தாளன் செத்துவிட்டான் என்பதைவிட எழுத்துரிமை, பேச்சுரிமையும் செத்துவிட்டதாக, மன்னிக்கவும் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன். நாவல் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பதிப்புகள் வெளிவந்து ஆயிரக் கணக்கானவர்கள் படித்துப் பாராட்டியது மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் செல்லத் தொடங்கிய பிறகு இப்போது அதைக் கொலை செய்து பிரேதப் பரிசோதனை இல்லாமல் சவ அடக்கம் செய்யத் துடிக்கிறார்கள். இதை அனுமதித்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுதைகள் அனைத்தையும் தேடி எடுத்து அவற்றையும் அதனை ஆக்கியவர்களையும் இல்லாமல் செய்துவிட முனைவார்கள்.
- லட்சுமிராயன், திருப்பூர்.
மீண்டும் வருக
பெருமாள்முருகன் எடுத்துள்ள இறுதியான முடிவு மிகவும் வேதனையளிக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லை எனில் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது. அவருக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களுக்குத் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் வாய் மூடி மௌனம் சாதித்தது ஏன்? பெருமாள்முருகன் இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து தனது எழுத்துப் பணியினைச் செய்ய வேண்டும்.
- என்.கே. ராஜா, சென்னை.
உசுப்பேற்றக் கூடாது
எழுத்தாளனின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர உசுப்பேற்றும் வகையில் அமைந்து விடக்கூடாது. ‘தி இந்து’ கருத்து களத்தில் எனது எத்தனையோ பதிவுகள் இடம் பெறவில்லை.. காரணம் எனக்கே தெரியும்.. பிறர் மனது துன்புறும் என்பதனால் தானே? காரணம் தெரிந்ததால் அதற்காக நான் வருந்தவில்லை. இந்த அளவுகோல் எழுத்தாளருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
கீழை ஜஹாங்கீர் - இணையம் வழியாகthanks  -the  hindu

0 comments: