‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்கு முக்கியமானவை’ | |
டயான் ப்ரோகோவன் / ஆனந்த் | |
ஆனந்த்: உங்கள் பின்னணி பற்றியும் நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள் என்பது
பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள்:
டயான் ப்ரோகோவன்: நான் ஆண்ட்வெர்ப் நகரில் 1946இல் பிறந்தேன். என் இருபதுகளில் நான்
நெதர்லாந்து சென்று, அங்கு ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றினேன். இப்போதும்கூட ஒரு
செய்தித்தாளின் புத்தகப் பகுதியில் இதைச் செய்து வருகிறேன். எனக்கு மூன்று
குழந்தைகள் ஆனபிறகு (இரண்டு மகன்களும் வங்காள தேசத்திலிருந்து சுவீகாரம்
எடுத்துக்கொண்ட ஒரு மகளும்) நான் 1981இல் என் முதல் குழந்தைகளுக்கான புத்தகத்தை
எழுதினேன். உடனே அதற்காக எனக்கு ஒரு இலக்கிய விருதும் கிடைத்தது. அது எனக்கு மேலும்
எழுதுவதற்குப் பெரும் உந்துதலை அளித்தது. 30 வருடங்கள் ஹாலந்தில் கழித்த பிறகு,
மீண்டும் என் சொந்த ஊரான ஆண்ட்வெர்ப்புக்குத் திரும்பி அங்கு பணியாற்றி வாழ்ந்து
வருகிறேன். இதுவரையில் 33 ஆண்டுகளில் 33 புத்தகங்களை நான் பிரசுரித்திருக்கிறேன். முதல் 20 புத்தகங்கள் குழந்தைகள் மற்றும் இளையவர்களுக்கானது. கடைசி 10 புத்தகங்கள் பெரியவர்களுக்கான நாவல்கள். அவற்றிற்குப் பல பரிந்துரைகளும் விருதுகளும் கிடைத்தன. இதுவரையில் நான் எழுதியவைகளுள் மிகுந்த புகழ் பெற்றது, ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’தான். இது பெல்ஜிய மொழியில் பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அங்கு 250,000 பிரதிகள் விற்று, மிகப் பெரிய அளவில் விற்பனையான புத்தகமாக ஆனது. அந்த அந்தரங்கமான சிறிய நாவல் இப்போது 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நான் நிறையப் பயணம் செய்திருக்கிறேன். இந்தியாவுக்கும் கூட. அங்கு நான் புனேயில் பகவான் ஓஷோவைப் போய்ப் பார்த்தேன். ஆனால் எல்லாவற்றையும்விட நான் எழுதுவதையே விரும்புகிறேன்.
இந்தக் கதை உங்களுக்கு எப்படித் தோன்றியது? எது இந்தக் கதையை எழுதத் தூண்டியது?
நான் நெதர்லாந்தில் என் பெற்றோரிடமிருந்து விலகி வாழ்ந்துகொண்டிருந்தேன். 2001ஆம்
ஆண்டில் நான் திரும்ப வந்தபோது, ஒரு புதிய அமைப்பில், சட்டென்று அவர்களுக்கு மிகவும்
நெருங்கிய குழந்தையாகிவிட்டேன். அந்த நேரத்தில் பெற்றோர் ஒருவரை இழப்பது என்பது
எப்படி இருக்கும் என்று நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். தன் வேர்களில் இருந்து
அறுபட்டுப்போவது எப்படி இருக்கும் என்பதை என்னால் வெகுகாலத்திற்கு நினைத்துக்கூடப்
பார்க்க முடியவில்லை. அதனால் முதிய தம்பதிகளில் ஒருவர் இறந்துபோவது பற்றி ஒரு கதை
எழுதினேன். அது வெறும் கற்பனைதான்; அதில் என் பெற்றோரின் வாழ்வில் நடந்த சில சிறு
சம்பவங்களும் சேர்ந்திருக்கின்றன. இந்த நாவல் அவர்கள் கதை அல்ல. ஆனால் அவ்வாறு
இருந்திருக்க முடியும். இந்தப் புத்தகம் பிரசுரமான இரண்டாவது வாரத்தில் என் தந்தை திடீரென்று இறந்துபோனார். அவரது மரணம் ஏற்கனவே அங்கு ‘காற்றில்’ இருந்ததுபோலவும். அது நடப்பதற்கு முன்னாலேயே நான் அதற்கு உருவம் கொடுத்ததுபோலவும் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் இருந்தது.
உறவின் உள்ளியக்கம் பற்றி உங்கள் பார்வை என்ன?
நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்த முதிய தம்பதிகளைப் பார்க்கும்போது நான் நெகிழ்ந்து
போவதுண்டு. என் தந்தை காலமானபோது அவரும் என் தாயும் 60 ஆண்டு காலம் ஒன்றாக
வாழ்ந்திருக்கிறார்கள். என் தாய்க்கு அவர் இல்லாத தன் வாழ்க்கையை வாழ்வது மிகவும்
கடினமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. இப்போது அவருக்கு 95 வயது. இவ்வளவு நீண்ட
காலம் ஒன்றாக இருப்பவர்கள் ஒருவராகவே ஆகிப்போய், ஒன்றாக ஒரே வாழ்க்கையை
வாழ்கிறார்கள். அது மிகவும் அழகான விஷயமாக இருந்தாலும் எனக்கு மிகவும் திகிலானதாக
இருக்கிறது. எனக்கு விவாகரத்தாகிப் பல ஆண்டுகளாகின்றன. நான் தனியாக இருப்பது என்
பணியைச் செய்து வாழ்வதற்கான சுதந்திரத்தை எனக்கு அளிக்கிறது. நல்லதோ இல்லையோ,
தொடர்ந்து ஒன்றாக வாழ்வது, நம் அகவளர்ச்சிக்கும் ஆழமடைவதற்கும் வாய்ப்பளிக்கிறது.
படைப்பூக்கம் குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன?
படைப்பூக்கம் ஒரு அழகான ஆற்றல், வாழ்க்கையின் ஒரு கூடுதல் படலம். படைப்பூக்கம்
இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வண்ணமயமாக்கும் பெரும்
உந்துசக்தியை இழந்தவர்கள். என்னைப் பொறுத்தவரையில் படைப்பூக்கம் என்பது பெருமளவுக்கு
மொழி சார்ந்தது. சாதாரண, தினசரி சந்தர்ப்பங்கள் பற்றி, நேர்த்தியான, சீரிய மொழியில்
எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது. வயதாக ஆக, எழுதுவதற்குக் குறைவான சொற்களே
தேவைப்படுகின்றன. சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்கு முக்கியமானவை.
நீங்கள் எவ்வாறு எழுதுகிறீர்கள்? மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுகிறீர்களா?
அப்படியென்றால் இந்த நாவலை எத்தனை முறை எழுதினீர்கள்?
என் தலைக்குள் முழுக்கதையும் ஏறக்குறைய உருக்கொண்டான பிறகுதான் நான் எழுதத்
தொடங்குகிறேன். குறிப்புகள் எடுக்கிறேன். கதை எப்படி இருக்கும், எப்படி
உருக்கொள்ளும் என்பது குறித்து நிறைய யோசிக்கிறேன். பிறகு எழுதத் தொடங்குகிறேன்.
நான் மிகவும் கட்டுப்பாடானவள். நான் ஒரு நாவலை எழுதும்போது, மற்ற எல்லா
விஷயங்களையும் விட அது முக்கியத்துவம் கொள்கிறது. காலையில் சீக்கிரம் எழுந்து,
சிற்றுண்டி அருந்திவிட்டு எழுதத்தொடங்கி, நடுப்பகல்வரையிலும் எழுதுவேன். பிற்பகல்
வேளையில், மற்ற வேலைகளைச் செய்துகொண்டே, மறுநாள் எழுத வேண்டியது பற்றிச்
சிந்தித்துக்கொண்டும் குறிப்பெடுத்துக்கொண்டும் இருக்கிறேன். இரவில் அதுபற்றிக் கனவு
காண்கிறேன். முதல் பிரதியை மீண்டும் படித்துத் திருத்தங்கள் செய்த பிறகு என்
பதிப்பாளர் அதைப் படிக்கிறார். மீண்டும் மீண்டும் பலமுறை எழுதுவது இல்லை.
‘‘இந்த நாவல் அவர்கள் கதை அல்ல. ஆனால் அவ்வாறு இருந்திருக்க முடியும். இந்தப்
புத்தகம் பிரசுரமான இரண்டாவது வாரத்தில் என் தந்தை திடீரென்று இறந்துபோனார். அவரது
மரணம் ஏற்கனவே அங்கு ‘காற்றில்’ இருந்ததுபோலவும், அது நடப்பதற்கு முன்னாலேயே நான்
அதற்கு உருவம் கொடுத்ததுபோலவும் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் இருந்தது,”
என்கிறீர்கள். இந்தக் கண்ணோட்டம் குறித்து இன்னும் ஏதாவது சொல்ல முடியுமா?
என் தந்தையுடன் எனக்கு எப்போதுமே வலுவான பிணைப்பு இருந்தது. எங்கள் இருவரின் பிறந்த
தினங்களும் ஒரே நாளில்தான் - மார்ச் 4ஆம் தேதி, மீன ராசியில். 30 வருட காலம்
நெதர்லாந்தில் வாழ்ந்துவிட்டு, 2000வது ஆண்டில் என் சொந்த நாட்டுக்குத்
திரும்பியதும் என் பெற்றோருடன் முன்பைவிடச் சட்டென்று நெருக்கமானேன். அவர்களுக்கும்
வயதாகிக்கொண்டு வருகிறது, இன்னும் வெகு நாட்கள் இல்லை என்பதையும் ஒரு விதத்தில்
உணர்ந்தேன். குறிப்பாக என் தந்தையுடன் சில விஷயங்களுக்கான தீர்வை நான்
எதிர்நோக்கினேன். ஆனால் கால அவகாசம் இன்னும் அதிகமாக இல்லை என்று எனக்குத் தெரியும்.
ஆலிஸ் இறந்துவிட்ட தன் கணவர் ஜூல்ஸிடம் அளித்த ஒப்புதல்கள், என் தந்தையிடம் நான்
சொல்வதற்கு எதிர்பார்த்து ஏங்கியதன் உருவகம் என்று கொள்ளலாம். ஆனால் அது நடக்காமல்
போய்விட்டது. ஏனெனில் நான் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தபோதே அவர்
நோய்வாய்ப்பட்டுவிட்டார். அதைப் படித்து முடித்த சில நாட்களிலேயே அவர்
இறந்துவிட்டார்.
சுதந்திரம், நன்னெறி, இவைபற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.
சுதந்திரம் என்னும்போது நான் அகச் சுதந்திரம் என்ற பொருளில்தான் சொல்கிறேன்.
நெறியற்ற, ஒழுங்கீனமான நடத்தை என்ற பொருளில் அல்ல. என் குழந்தைகள் சிறியவர்களாக
இருந்தபோது, நான் எழுதுவதற்கும் எழுத்தாளர் ஆவதற்கும் வலிமையான உந்துதல்
இருந்தபோதிலும் அவர்கள்தான் என் வாழ்வில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக
இருந்தார்கள். அப்போதே நான் பல புத்தகங்களை எழுதியிருக்கிறேன். என் பிள்ளைகள்
இப்போது தம் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.
அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்காகவும், அவர்களின் துணைவர்களுக்காகவும்
குழந்தைகளுக்காகவும் நான் எப்போதும் இருப்பேன். ஆனால் அவர்களின் ஆதரவாளராக இனி நான்
தேவையில்லை. அதனால் என் வாழ்க்கையின் பெரும் ஆர்வமான புத்தகங்கள் எழுதுவது, கதை
சொல்வது, இவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான சுதந்திரம் எனக்கு இப்போது
இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தில் நான் கட்டுப்பாடு மிக்கவளாகவும்
கட்டுக்கோப்பானவளாகவும் இருக்கிறேன். அன்று என்ன நடந்தாலும் சரி, நான் தினமும்
அதிகாலையில் எழுதுகிறேன்.
நீங்கள் எழுதும்போது என்ன மாதிரியான வாசகரை மனத்தில் வைத்துக்கொண்டு
எழுதுகிறீர்கள்?
நான் எழுதும்போது உண்மையில் விசேஷமான வாசகர் யாரையும் மனத்தில் வைத்துக்
கொள்வதில்லை. ஒரு கதையை நான் எழுத விரும்புகிறேன். அதைப் பல பேர், இளையவர்களும்
முதியவர்களும் ஆண்களும் பெண்களும் படித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.நன்றி - காலச்சுவடு |
0 comments:
Post a Comment