பார்லே ஜி பிஸ்கெட் ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, உலக பிஸ்கெட்களில் முதல் இடம் பிடிக்கும் பிராண்ட் எது?
இந்தியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான கடைகளில் கிடைக்கும் பிஸ்கெட் எது?
மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறும் நிலையில், 76 ஆண்டுகளாக மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் பிஸ்கெட் எது?
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் பார்லே ஜி பிஸ்கெட்!
இந்தியாவில், பிஸ்கெட்களை இரண்டு வகையாகச் சாப்பிடுகிறோம். காபி, டீயோடு சாப்பிடும் சிற்றுண்டியாக: குழந்தைகளின் தின்பண்டமாக.
1930 கால கட்டம். இந்தியாவில் கிடைத்த பிஸ்கெட்கள் இரண்டு வகை. முதல் வகை,
ஒவ்வொரு ஊரிலும் இருந்த சிறிய பேக்கரிகள் தயாரித்தவை. இவை சுகாதாரமான
முறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பது பற்றி மக்களுக்கு ஏகப்பட்ட
சந்தேகங்கள் இருந்தன. இரண்டாம் வகை பிஸ்கெட்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து
இறக்குமதியாயின. இவை தரமும் சுவையும் கொண்டவை. ஆனால், இவற்றின் விலை
நடுத்தர, அடிமட்ட மக்களுக்குக் கட்டுப்படியாகாத அதிக விலை. ஆகவே, இவர்களில்
பெரும்பாலானோர், டீயோடு ரஸ்க், பன், பொறை, லோக்கல் பிஸ்கெட் போன்ற
சிற்றுண்டிகளைச் சாப்பிட்டார்கள்.
பெற்றோர்களின் ஏக்கம்
குழந்தைகளின் உணவுகளை வாங்கும்போது, நாம் அதிக எச்சரிக்கையாக இருப்போம்.
ஆகவே, பணக்காரர்கள் அல்லாதோர் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறைந்த (?)
பிஸ்கெட் தராமல், முறுக்கு, மிக்சர் போன்ற சிற்றுண்டிகள் தந்தார்கள்.
“குழந்தைகளுக்கு எண்ணெய்ப் பண்டம் கொடுக்கிறோமே, அவர்களுக்கு ஆரோக்கியமான
பிஸ்கெட் தரும் வசதி நம்மிடம் இல்லையே?” என்னும் ஏக்கம் அவர்களிடம்
இருந்தது.
1929 இல், மும்பையில், மோகன் லால் தயால் செளஹான் (Mohanlal Dayal Chauhan)
ஆரஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புகள் தயாரித்துவந்தார். வில்ல பார்லே (Vile
Parle) என்னும் பகுதியில் வியாபாரம் செய்ததால், தன் கம்பெனிக்குப் பார்லே
புராடெக்ட்ஸ் என்று பெயர் வைத்தார். தரமான, சக்தி தரும் பிஸ்கெட்களைச்
சுகாதார மான முறையில் தயாரித்துச் சகாய விலையில் தந்தால், மக்களின்
ஏக்கத்தைப் பூர்த்தி செய்யலாம், பிசினஸை வளர்க்கலாம் என்று உணர்ந்தார்.
உடல் சக்தி என்றால், மக்கள் நினைவுக்கு முதலில் வருவது பால்.
குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கும் உணவு. இதனால், ஏழை வீடுகளில்கூட,
குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் வழக்கம் நாடு முழுக்க இருக்கிறது.
இதேபோல், குளுக்கோஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி உடனடிப் புத்துணர்ச்சி
கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.
பார்லே குளுக்கோ பிஸ்கெட் உருவான விதம்
பால், குளுக்கோஸ் ஆகியவற் றோடு பசி தீர்க்கும் கோதுமை மாவும் சேர்த்து
மோகன்லால் பிஸ்கெட் தயாரித்தார். பார்லே குளுக்கோ (Parle Gluco) என்று
பெயர் வைத்தார். கோதுமை வயிற்றுப் பசியைத் தீர்த்தது. பால் மணமும்,
குளுக்கோஸின் இனிப்பும் சுவை தந்தன. 100 கிராம் பிஸ்கெட் 450 கலோரி ஊட்டச்
சக்தி தந்தது. நிஜமாகவே, மோகன்லாலின் தயாரிப்பு சுவையான, ஊட்டச் சத்து
உணவு. 1939 ம் ஆண்டில் பார்லே குளுக்கோ அறிமுகமானது. பால், கோதுமை
ஆகியவற்றின் நன்மைகளைத் தருகிற பிஸ்கெட் இது என்று முதல் பார்வையிலேயே
கஸ்டமர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமே? பாக்கெட்டில், கோதுமை வயலில் ஒரு
பெண், பசு, கன்றுக்குட்டி, பால் கறக்கும் பாத்திரம் ஆகியவற்றோடு நிற்கும்
படம் இருந்தது.
விலை குறைவு
தன் பிஸ்கெட்டுக்கு, இறக்குமதி யாகும் இங்கிலாந்து பிஸ்கெட்களைவிட
மட்டுமல்ல, மிக்சர், சிவ்டா போன்ற சிற்றுண்டிகளை விடவும் விலை குறைவாக
மோகன்லால் வைத்தார். அன்றைய நாட்களில், விலை மலிவான தரமான ஸ்நாக் பார்லே
குளுக்கோ பிஸ்கெட்தான்!
பார்லே குளுக்கோ பிறந்த வேளை ராசியான நேரம். அதே 1939 ம் ஆண்டில், இரண்டாம்
உலகப் போர் தொடங்கியது, 1945 வரை நீடித்தது. போர்முனையில் குளுக்கோஸ்,
அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிலிருந்து வேதியல் முறையில் தயாரிக்கப்படும்
இனிப்புப் பொருள்.
வீரர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் உணவு பிஸ்கெட். ஆகவே, இங்கிலாந்து
மற்றும் ஐரோப்பாவிலிருந்த பிஸ்கெட் கம்பெனிகள், தங்கள் முழுத் தயாரிப்
பையும் போர் முனைகளுக்கு அனுப்பினார்கள். இந்தியாவுக்கு வெளிநாட்டு
பிஸ்கெட்கள் வருவது நின்றது. ஆகவே, பணக்காரர்களும் மோகன்லாலின் பிஸ்கெட்
வாங்கி னார்கள். எல்லோருக்கும் பிஸ்கெட் தரமும், சுவையும் பிடித்தது. சப்ளை
செய்யமுடியாத அளவுக்கு விற்பனை அதிகரித்தது.
விலை உயர்வு இல்லை
பெரும்பாலான கம்பெனிகள் இந்தத் தட்டுப்பாட்டு நேரங்களில் விலையைக் கூட்டிக்
கொள்ளை லாபம் அடிப்பார்கள். ஆனால், மோகன்லால் நேர்மையாக நடந்துகொண்டார்.
விலையைக் கூட்டவேயில்லை. தரம், சுவை, சகாய விலை ஆகிய காரணங்களால், இந்திய
பிஸ்கெட்களில் நம்பர் 1 இடத்தைப் பார்லே குளுக்கோ பிடித்தது. பார்லே
குளுக்கோ சக்தி தரும், சுவை நிறைந்த சகாய விலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்
மக்கள் மனங்களில் பதிந்துவிட்டது. யுத்தம் முடிந்தபின்னும் முதல் இடம்
நீடித்தது.
மோகன்லால் படிக்காத மேதை. பல நவீன மார்க்கெட்டிங் யுக்திகளை உள்ளுணர்வால்
அநாயசமாகக் கையாண்டார். தன் பிஸ்கெட் குறைந்த விலை என்று விளம்பரம்
செய்தால், தரமும் குறைவாக இருக்கும் என்று சாதாரணமாக மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, விளம்பரங்களில் விலையை மையப்படுத்தக்கூடாது, தரம், சுவை, சக்தி
ஆகியவற்றை மட்டுமே மையப்படுத்தவேண்டும். அதே சமயம், குளுக்கோ பிஸ்கெட்டின்
வெற்றிக்கு முக்கிய காரணம் குறைந்த விலை. வெற்றி தொடரவேண்டுமானால், விலையை
முடிந்தவரை உயர்த்தக் கூடாது.
மோகன்லால் மறைவுக்குப் பிறகும், பார்லே புராடக்ட்ஸ் இந்தக் கொள்கைகளைப்
பின்பற்றி வருகிறார்கள். 1984 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில், கோதுமை,
பால், சீனி ஆகிய மூலப்பொருட்களின் விலை 150 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால்,
இந்த 24 வருடங்களிலும், 100 கிராம் பார்லே குளுக்கோ விலை ஒரு பைசா கூட
அதிகரிக்கவில்லை. 1984 முதல் 2008 வரை, அதே 4 ரூபாய்தான்!
2008 இல் பார்லேயால் விஷமாக ஏறும் விலைவாசியைச் சமாளிக்க முடியவில்லை. 100
கிராம் பாக்கெட் விலையை 4.50 ஆக்கினார்கள். 50 காசு அதிகம். ஆனால்,
கஸ்டமர்கள் வாங்குவதை நிறுத்தினார்கள். வேறு வழி தெரியாத நிர்வாகம்
பாக்கெட் எடையை 92.5 கிராமாகக் குறைத்தார்கள். விலை அதே 4 ரூபாய்! இதேபோல்,
2012- ல் எடை 88 கிராம் ஆனது. விலை என்றென்றும் மாறாத அதே நான்கு ரூபாய்!
இன்றும், தரமான பிராண்டட் பிஸ்கெட்களில் மிக விலை குறைவானது பார்லே ஜி
தான்.
குழந்தைகளைக் கவர…
பிசினஸ் வளர வளர, எல்லா வயதினரும் பிஸ்கெட் சாப்பிட்டாலும், குழந்தைகள்தாம்
முக்கிய கஸ்டமர்கள் என்று பார்லே உணர்ந்தது. மார்க்கெட்டிங் யுக்திகளும்,
விளம்பரங்களும் இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன. 1960 முதல் பாக்கெட்
டிசைனை மாற்றினார்கள். அதுவரை இருந்த மாடு மேய்க்கும் பெண்ணுக்குப் பதில்,
அழகான குழந்தை படம்!
பார்லே குளுக்கோ என்று கடைகளில் கேட்டு வாங்கக் கிராமப்புற மக்கள்
சிரமப்பட்டார்கள். இதனால், 1980 இல், பிஸ்கெட் பெயரைப் பார்லே ஜி என்று
சுருக்கினார்கள். ஜி என்பது குளுக்கோவின் சுருக்கம். நம் ஊரில் “ஐயா”
என்பதுபோல், இந்தியில் “ஜி” என்பது மரியாதையான விளிப்பு. ஆகவே, பார்லே ஜி
என்னும் புதிய சுருக் பெயர் ``நச்” என்று மக்கள் மனங்களில் ஆழமாகப்
பதிந்தது.
இந்தியாவின் பிஸ்கெட் மார்க்கெட், போட்டியாளர்களின் பலங்கள், பலவீனங்கள்
ஆகிய அம்சங்களை ஆழமாக அலசிய பார்லே நிர்வாகிகளுக்கு மாட்டியது ஒரு லட்டு
ஐடியா. பார்லே ஜி என்றால் எனர்ஜி, எனர்ஜி என்றால் பார்லே ஜி என்று மக்களை
நினைக்கவைத்துவிட்டால், யாருமே பார்லே ஜி யை அசைக்கமுடியாது.
விளம்பரங்கள்…
இப்போது கச்சேரி ஆரம்பம். 1982 இல் டி.வி. விளம்பரம் வந்தது. ஒரு தாத்தா
தன் பேரனோடும், பேத்தியோடும் விளையாடும் காட்சி. அவர்கள் சேர்ந்து பார்லே
ஜி சாப்பிடுவார்கள். முழுக்க முழுக்கச் சுவை, முழுக்க முழுக்க சக்தி
என்னும் ஜிங்கிள் வரும். இந்த விளம்பரம் மாபெரும் வெற்றி கண்டது.
1998 இல் தொலைக்காட்சியில் சக்திமான் என்னும் தொடர் வந்துகொண் டிருந்தது.
சிறுவர் சிறுமிகளுக்குப் பிடித்த ஆங்கில ஸூப்பர்மேன் தொடர்போல்,
இந்தியாவிலும் ஒரு ஸூப்பர் ஹீரோவை உருவாக்கும் முயற்சி. வெற்றியும் கண்டது.
இந்தத் தொடரைப் பார்லே ஜி ஸ்பான்சர் செய்தார்கள். பார்லே ஜி சாப்பிட்டால்
நமக்கும் சக்திமானின் பலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை சிறுவர்,
சிறுமியர் மனங்களில் விதைக்கப்பட்டது.
உள்ளூர் போட்டிகள்
சக்தி என்றால், உடல் பலம் மட்டுமல்ல, அறிவு வலிமையும் சேர்ந்தது. பார்லே ஜி
மூளை வலிமையையும் வளர்க்கும் என்னும் அபிப்பிராயத்தை உருவாக்க அடுத்த
முயற்சி தொடங்கியது. மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை மிகவும் பிரபலமானது.
தெருவெல்லாம் பெரிய பந்தல்கள் போட்டு, பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள்
வைத்து ஆரவாரமாகக் கொண்டாடுவார்கள். யாருடைய விழா சிறப்பாக இருந்தது என்று
போட்டிகள் நடக்கும்.
பார்லே ஜி, சரஸ்வதி வந்தனா (கலைமகள் வணக்கம்)என்னும் பெயரில் 2002 இல்
இந்தப் போட்டி தொடங்கினார்கள். மேற்கு வங்காளப் பள்ளிகளுக்கான போட்டி இது.
மொத்தம் 55 பரிசுகள். முதல் பரிசு 30,000 ரூபாய். இத்தோடு ஐந்து முதல்
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக சரஸ்வதி பற்றிய கதை, கட்டுரை,
கவிதைப் போட்டிகள். மாபெரும் வரவேற்பு கண்ட சரஸ்வதி வந்தனா இன்னும்
தொடர்கிறது.
கொலு கலாட்டா
இதேபோல், 2005 முதல் தமிழ்நாட்டில் நவராத்திரி சமயத்தில், அழகான கொலு
வைத்திருக்கும் குடும்பங்களுக்குள் கொலு கலாட்டா போட்டி நடத்தி
வருகிறார்கள். பரிசு விழாவைச் சென்னையின் பிரபல காமராஜ் அரங்கத்தில்,
சின்னத் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்போடு கோலாகலமாக நடத்துகிறார்கள்.
சரஸ்வதி வந்தனா தொடங்கிய அதே 2002 ம் ஆண்டில் பார்லே ஜி நிறைவேற்றிய
அற்புதத் திட்டம் மேரா ஸப்னா ஸச் ஹோகா (என் கனவுகள் நனவாகும் என்று
அர்த்தம்). சிறுவர், சிறுமியரிடம் அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளைக்
கேட்டார்கள். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆசைகள் விண்ணப்பங்களாக வந்தன.
அவற்றுள் 300 கனவுகளை நனவாக் கினார்கள். டிஸ்னிலாண்ட் ட்ரிப், தனி
விமானத்தில் பயணம், கிரிக்கெட் கோச்சிங், படிப்புக்கான 25 ஸ்காலர்ஷிப்கள்
போன்றவை நிஜம் கண்ட சில பிஞ்சு மனது ஏக்கங்கள்.
ஜி ஃபார் ஜீனியஸ்
பார்லே ஜி என்னும் பெயரில் வரும் ``ஜி” குளுக்கோ என்பதன் சுருக்கம். 2004
இல் இதிலும் மாற்றம் கொண்டுவந்தார்கள். நடிகர் அமீர்கான் ஒரு சிறுவனோடு
வருவார். G = Genius என்று இருவரும் வலியுறுத்துவார்கள்.
பார்லே ஜி என்றால், உடல் வலிமையும், அறிவு பலமும் தரும் சுவை நிறைந்த
சகாயவிலை பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கைத் தொடர்ந்து பார்லே கம்பெனி
வலியுறுத்தி வருகிறார்கள். பிசினஸில் முதல் இடத்தைப் பிடிக்க மட்டுமல்ல,
தொடர்ந்து தக்கவைத்துக்கொளவும், பொசிஷனிங்கில் தொடர்ந்து புதுமைகள்
செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பதற்குப் பார்லே ஜி நல்ல உதாரணம்.
0 comments:
Post a Comment