‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் டைட்டிலில் எழுத்தாளர் ஜி. நாகராஜனுக்கு
நன்றி தெரிவித்திருப்பதைவிட வேறென்ன நிரூபணம் வேண்டும் இயக்குநர் வினோத்
ஒரு தேர்ந்த வாசகராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு? புத்தகக் காட்சியில்
புத்தகமும் கையுமாக நம்மிடம் பிடிபட்டார் வினோத்!
“சின்ன வயசிலருந்தே சினிமாவுக்கு வரணும்னு எனக்குக் கனவு, லட்சியம் எதுவும்
கிடையாது. திடீர்னு தோணித்தான் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேட
ஆரம்பிச்சேன். ஒரு நண்பர் மூலமா இயக்குநர் ரா. பார்த்திபன் அறிமுகம்
கிடைச்சுது. முதல் தடவையா அவரைச் சந்திச்சப்ப அ. முத்துலிங்கம் எழுதிய
‘மகாராஜாவின் ரயில் வண்டி’ சிறுகதைத் தொகுப்பைக் கையில வெச்சிருந்தேன்.
அதைப் பார்த்ததும் பார்த்திபன் சார் அந்தத் தொகுப்பிலருந்து ஒரு சிறுகதை
சொல்லுன்னு சொன்னார். திக்கித் திணறி, உளறி, சொல்ல ஆரம்பிக்கும்போதே
‘கரெக்டா இவனுக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு கணிச்சி “போதும், நீங்க ஆபீஸ்
வேலையப் பாருங்க. ஷூட்டிங் அப்ப அசிஸ்டெண்ட்டா வேலை செய்யுங்கன்னார்”. அந்த
முதல் படம் வேலை செஞ்சு முடிச்ச உடனே ‘அவசரப்பட்டு சினிமாவுக்கு
வந்துட்டோம், நமக்கு அதுல ஒண்ணுமே தெரியலை’ன்னு புரிஞ்சுது. அடுத்து என்ன
பண்றதுன்னு குழப்பமா இருந்தது. அப்ப என்னை மீட்டெடுத்தது புத்தகங்கள்தான்.
அப்ப புத்தகம் வாங்க வசதி இல்லன்னாலும், இயக்குநர் பாண்டிராஜ், சீனிவாசன்,
சரவணன் அப்பறம் நிறைய நண்பர்கள் வீட்டுலருந்து புத்தகங்கள்
எடுத்துக்கிட்டுப் போய்ப் படிக்க ஆரம்பிச்சேன். அந்தப் புத்தகங்கள்தான்
எனக்கு ஒரு தெளிவையும் வாழ்க்கைபற்றிய புரிதலையும் குடுத்திச்சி.
‘சதுரங்க வேட்டை’ திரைக்கதை எழுதுறதுக்கு ஜி. நாகராஜனோட ‘நாளை மற்றொரு
நாளே’, தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ பெரிய உந்துதலா
இருந்திச்சி. எனக்குப் புடிச்ச எழுத்தாளர்னா அமரர் ஜி. நாகராஜன் பேரைத்தான்
சொல்வேன். அவரோட எழுத்தைப் படிச்சதுக்கு அப்பறம்தான் நாம எப்படி
எழுதணும்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அவரோட நாவல்லருந்து எனக்கு ரொம்பப்
புடிச்ச ஒரு வசனத்தையும் என் படத்துல பயன்படுத்தினேன்.
சினிமா சம்பந்தமான எந்தப் பின்புலமோ, அது சம்பந்தமான படிப்பறிவோ இல்லாத
என்னை இயக்குநராக்கியது புத்தகங்கள்தான். சினிமாங்கிறது வெறும் பொழுது
போக்கா மட்டும் இல்லாம, மக்களை யோசிக்க வைக்கிற, மக்களுக்கான சினிமாவா
இருக்கணுங்கிற எண்ணத்தை விதைச்சதும் புத்தகங்கள்தான்.
இந்தப் புத்தகக் காட்சியில நெறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன்.
தாஸ்தாயெவ்ஸ்கியோட ‘சூதாடி’, யூமா வாசுகி மொழிபெயர்ப்புல ‘கலிவரின்
பயணங்கள்’, பிலிப் மெடோஸ் டெய்லரோட ‘ஒரு வழிப்பறிக் கொள் ளையனின் ஒப்புதல்
வாக்குமூலம்’, சி. மோகனோட மொழிபெயர்ப்புல ஜியாங் ரோங்கோட ‘ஓநாய்
குலச்சின்னம்’, ஜான் பெர்கின்ஸோட ‘ஒரு பொரு ளாதார அடியாளின் ஒப்புதல்
வாக்குமூலம்’ ஆகிய புத்தகங்கள்லாம் நான் வாங்கினதுல முக்கியமானதுன்னு
சொல்லணும்” என்றார் வினோத்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment