Friday, January 02, 2015

பகடை பகடை - சினிமா விமர்சனம்

பகடை பகடை

உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் இருவர் ஆடும் ஆட்டம்தான் "பகடை பகடை'. ஆனால், அதை சரியாக உருட்டாமல் ஆடியதால் போங்காட்டம் ஆகிவிட்டது.  நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணாகப் பார்த்து செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான் முதலும் கடைசியுமான ஒரே கனவு. 
இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறார். இதனால் வீட்டில் மதிப்பும் மரியாதையும் போய்விடுகிறது.  இந்தநிலையில் திவ்யா சிங் ரூபத்தில் அடிக்கிறது அதிர்ஷ்டம். தீலிப்பை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியா வந்து அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறார்.  திவ்யா சிங் உண்மையில் திலீப்பை காதலிப்பவர் அல்ல. காதலிப்பதுபோல நடிக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டவர்.
 இவருடைய முதலாளியாக இன்னொரு தீலிப் குமார் இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. அதில் இவர்களுடைய ஐ.டி.கம்பெனியும் சிக்கிக்கொள்கிறது. இவர்களுக்குக் கடன் கொடுத்த மாஃபியா கும்பல், பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறது.  அப்போதுதான் கிராமத்தில் இருக்கும் நாயகன் திலீப்குமார், தன்னைப்போன்ற உருவத்துடன் இருக்கும் விஷயம் வில்லன் திலீப்குமாருக்கு தெரிய வருகிறது.
 அவரைக் கொன்று இன்சூரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான். இறுதியில், நாயகனைக் கொன்றுவிட்டு திவ்யாவும், வில்லன் திலீப்குமாரும் இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெற்றுத் தப்பித்தார்களா...? இல்லையா...? என்பது மீதிக்கதை.
  திலீப்குமார் அறிமுக நாயகன் போல் இருந்தாலும், நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார். நாயகியாக திவ்யா சிங். வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இளவரசு, கோவை சரளா,மயில்சாமி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
 ராம்ஜி, ஜான்பீட்டர் ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. முரளியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பிளஸ். கலகலப்பான படத்தைக் கொடுக்க நினைத்த இயக்குநர் சசிசங்கர், அதில் பாதியைத்தான் சாதித்துள்ளார்.  பகடை பகடை -  தாயமும் இல்லை! ஆதாயமும் இல்லை!
நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

0 comments: