தவிர்க்க முடியாத அடையாளம் - தனுஷ் 25
13 ஆண்டுகளில் 25 படங்கள், 27வது வயதில் தேசிய விருது, கொல வெறி என்ற ஒரே பாடலில் மாபெரும் புகழ் என தமிழ் சினிமாவில் உற்றுக் கவனிக்க வைக்கும் ஓர் ஆளுமை தனுஷ் .
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று விவாதிக்கப்பட்டுவரும்
தருணத்தில் நாயகனுக்கும், சினிமாவுக்குமான ஊடாட்டத்தைப் பற்றிப் பேச
வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. 2014-ன் சினிமா குறித்த எதிர்வினைகள்
அதற்குப் பொருத்தமான சான்றுகளை முன்வைக்கின்றன.
தனுஷின் வருகை அண்மைக் காலத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு
வித்திட்டது என உறுதியாக சொல்லலாம். 2002ல் ‘துள்ளுவதோ இளமை' படத்தின்
மூலம் கதாநாயகனாக தனுஷ் அறிமுகம் ஆனார். படம் ஓரளவு பேசப்பட்டதே தவிர,
மறந்தும்கூட தனுஷின் பெயரை உச்சரிக்கவில்லை. ஆனால், செல்வராகவன்
இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்' தனி கவனம் பெற்றது.
கதாநாயகனுக்கான ஆகிவந்த குணாம்சம் எதுவும் இல்லாத தனுஷை ‘காதல் கொண்டேன்'
தனித்துக் காட்டியது. அதற்குப் பிறகு 'திருடா திருடி' படத்தில் நடித்த
தனுஷ் மன்மத ராசா பாடலால் உச்சத்துக்குச் சென்றார்.
ஒல்லியான தேகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற தோற்றம்
ஆகியவற்றின் மூலம் நாயகனுக்கான இலக்கணத்தை உடைத்தெறிந்தார் தனுஷ்.
ஒல்லிப்பிச்சான் என்று தன்னை நய்யாண்டி செய்தவர்களே கொண்டாடும் அளவுக்கு
வளர்ந்தார். இத்தனைக்கும் எல்லா திறமைகளோடும் தனுஷ் சினிமா துறைக்குள்
நுழைய வில்லை. ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டார்.
தனுஷுக்கு ‘புதுப்பேட்டை' மிகச் சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது.
சினிமாவுக்கு வந்த நான்காவது ஆண்டில் தனுஷ் ஒரு முழுமையான நடிகனாக தன்னைத்
தகுதிப்படுத்திக்கொண்டது இந்தப் படத்தில்தான்.
“தொண்டையில ஆப்ரேஷன், காசு கொடு” என்று பிச்சை எடுக்கும் தனுஷ் பின்னாளில்
கொக்கி குமாராக அதில் பரிணாம வளர்ச்சி பெறுவதைப் பார்த்திருக்கலாம். ஒரு
நடிகனாக, நிஜ வாழ்க்கையிலும் அத்தகைய பரிணாம வளர்ச்சியை தனுஷ்
அடைந்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.
இரண்டு வகைச் சவாரி
தனுஷின் படங்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முழுக்க முழுக்க
வணிகப் படங்கள், நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் படங்கள். இந்த, இரண்டு
வகைப் படங்களிலும் தனுஷ் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
வணிக அம்சங்கள் நிறைந்த படங்கள், பரிசோதனை முயற்சிகள் என இரண்டிலும்
திறனைக் காட்டி வெற்றி வாகை சூடத் தனுஷால் முடிகிறது. ‘திருவிளையாடல்
ஆரம்பம்', ‘பொல்லாதவன்', ‘யாரடி நீ மோகினி', ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற
படங்களில் தன்னை வணிகப் படங்களின் நாயகனாக, வசீகர நட்சத்திரமாக
நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், மசாலா படங்களை மட்டுமே நம்பி கல்லா கட்டுவதில் தனுஷ் குறியாக இல்லை.
‘அது ஒரு கனாக்காலம்', ‘ஆடுகளம்', ‘மயக்கம் என்ன', ‘3', ‘மரியான்' என
நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார்.
தனுஷின் சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும், அந்தப்
படங்களிலும் தனுஷ் தன் நடிப்பில் எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை.
நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் பிரமிக்கவைக்கும் அளவுக்குத்
தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘மரியான்' படத்தில் பார்வதியுடன் போனில் பேசும் காட்சி, ‘மயக்கம் என்ன',
‘3’ படங்களில் உளவியல் சிக்கல் கொண்ட பாத்திரங்களின் தன்மைகளை உள்வாங்கி
வெளிப்படுத்திய விதம், ‘ஆடுகளம்’ படத்தில் காதல், நட்பு, குருபக்தி
ஆகியவற்றை நிகழ்த்திக்காட்டிய விதம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
வணிக ரீதியாக நிறைய சறுக்கல்களைச் சந்தித்த பிறகு ‘வேலையில்லா பட்டதாரி'
படம் தனுஷ் தன்னை மீண்டும் வெற்றிகரமான வசூல் நாயகனாகத் தக்க வைத்துக்கொள்ள
உதவியது. 2014-ல் படம் வெளியான அந்தத் தருணத்தில் இனி வணிக சினிமாதான் என்
பாதை என்று தனுஷ் சொல்லவில்லை. இப்போது இந்தியில் அவரது ஷமிதாப் படம்
வெளிவரும் நேரத்தில் தமிழில் “பரிசோதனை முயற்சிகள் அதிகம் செய்து பார்க்க
முடியவில்லை” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
தனுஷ் அறிமுகமான அதே காலகட்டத்தில் மேலும் சில இளைஞர்கள் திரையுலகில்
அறிமுகமானார்கள். அவர்களில் பலரும் ஒரு டஜன் படங்களைத் தாண்டிப்
பயணித்துவிட்டாலும் அவர்களுக்கான இடம் எது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
இயக்குநர்களின் நடிகனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ள தனுஷ் நடிப்புத்
திறனில் மட்டுமில்லாமல் திட்டமிட்ட உழைப்பினாலும் தனக்கான இடத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடித்ததற்காகவே பல படங்கள் பேசப்பட்டுள்ளன. தனுஷை ஒரு நடிகனாக
வார்த்தெடுத்ததில் செல்வராகவனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்போது பாடல்,
நடிப்பைத் தாண்டி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதோடு, இந்தியிலும்
அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் கலைஞனாகத் தனுஷ் வளர்ந்து
நிற்கிறார். அடுத்து அவர் நடிப்பில் வரவிருக்கும் அநேகன், ஷமிதாப் ஆகிய
படங்கள் தனுஷின் இரண்டு வகைப் படங்களில் எந்தப் பட்டியலில் இடம்
பிடிக்கப்போகின்றன என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.
ஆனால் எந்த வகைப் படமாக இருந்தாலும் அதில் தனுஷின் அடையாளம் அழுத்தமாக
இருக்கும் என்று சொல்லிவிடலாம். தனுஷின் திரை ஆளுமை ஏற்படுத்திய நம்பிக்கை
இது.
நன்றி - த இந்து
- கக்கத்தில் மடக்கி மஞ்சள் பத்திர்க்கை பார்த்த தமிழர்கள் இருந்த காலத்தில் வந்தவர்கள் விஜய், தனுஷ். ஆரம்ப படங்கள் எல்லாம் "A " செர்டிபிகேட் உடன்தான் வந்தன. அதை இதை காட்டி கலாசாரத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிறகு நல்லவராகி விடுவது தமிழகத்தின் சாப கேடு. பள்ளி கூட பய்யன் ஸ்கூல் யூனிபோர்மோடு காதலிப்பான், முத்தமிடுவான் என்று அயோகியதனத்தை செல்வராகவனும் ,கஸ்தூரி ராஜாவும் மக்களுக்கு தன மகன் மூலம் காட்டி உரிவகிவிடபட்டவர்தான் தனுஷ். இப்போ பெர்ய ஆள். சூப் ஸ்டாரின் மருமகன். எனக்கும் தஞ்சுழை புடிக்கும். ஆனால் இந்த "A" தனம் இல்லாமல் முன்னேறுகிறார்களா என்றால் இல்லை என்பது என் வாதம்.Points38845
- ராஜேஷ் மகாலிங்கம்உண்மையான வரிகள்... "தமிழ் சினிமாவின், கதாநாயகனுக்கான வரையரைகளை முறியடித்து விட்டார் தனுஷ்"... இது போல் "தமிழ் சினிமாவின், கதானாயகிகளுக்கான வரையரைகளை முறியடிக்க ஒரு கதாநாயகி வந்தால் நன்றாக இருக்கும்"Points700
- Gnanasekaranதனுஷ் பத்து மெல்கிப்சன், அஞ்சு டெந்ஸெல் வாஷிங்டன்க்கு சமம். ஆஸ்கர் விருதுகள் எல்லாம் இவருக்கு துச்சம்.Points1760
- LION G.Saravananஉண்மை உழைப்பு=உயர்வு, என்ற தாரக மந்திரம் தெரிந்தவர் அடக்கம் அமைதி =அடையாளம் என்பதை நன்கறிந்தவர் அதனால் தான் இன்று உச்சத்தை தொட்டிருக்கிறார்! தனுஷ் என்ற மூன்றெழுத்து உலகளவில் உச்சரிக்கும் சொல்லாகும்! வாழ்த்துக்கள்!about 15 hours ago · (15) · (1) · reply (0) ·
- Surendar Gee System Engineer at DSM Soft (P) Ltdநிஜமாக சொல்கிறேன்..சேலத்தில் "காத கொண்டேன் " 25ஆவது நாள் விழாவிற்காக திரைஅரங்கில் தோன்றிய போது நான் பார்த்த... கேட்ட ரசிகர்களின் கரகோஷம் அன்றே என் நினைவுக்கு எட்டியது ஒரு நாள் தனுஷ் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ ஆவர் என்று...நான் யூகித்த படி அவர் செல்கிறார்.. எனது பள்ளி பருவத்தில் காதல் கிண்டேன் பார்த்தேன்..அந்த 25ஆவது நாள் விழாவிற்கு நானும் திரையின் கீழ் நின்று ஆரவாரம் செய்தேன் தனுஷ்'ஐ ..நான் காதல் கொண்டேன் 4ஆவது முறையாக பார்த்து கொண்டிருந்தேன்...அப்போதே அவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்
1 comments:
தனுசின் உழைப்பே அவரை உயரத்தில் நிறுத்தியிருக்கிறது...
Post a Comment