Friday, January 02, 2015

விழிமூடி யோசித்தால்- சினிமா விமர்சனம்

விழிமூடி யோசித்தால்

அறிமுக இயக்குநர் கேஜி செந்தில்குமார் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ரொமான்டிக் த்ரில்லர் படம்தான் "விழிமூடி யோசித்தால்'.  சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதற்காக கோவையில் இருந்து தன் நண்பர்கள் அறையில் தங்குகிறார் கேஜி செந்தில்குமார். அதே கல்லூரியில் படிக்கும் வாய் பேச முடியாத நிகிதாவைக் காதலிக்கிறார்.
 
 
 ஊரில் இருக்கும் அம்மா ஊர்வசிக்கு தன் மகன் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமான ஆசை. மகன் கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதலிப்பதை அவனுடைய நண்பர்கள் மூலம் அறிந்துகொள்ளும் ஊர்வசி சென்னைக்கு வருகிறார். பெண்ணைப் பார்த்தவர் ஓகேவும் சொல்லிவிடுகிறார். 
 
 
 
 ரவுடி கும்பல் செய்யும் ஒரு கொலையை நேரில் பார்க்கும் நாயகி நிகிதா, அதை படமெடுக்கிறார். இதைக்கண்ட அந்தக் கும்பல் நிகிதாவை நாயகன் கண்ணெதிரிலேயே தீவைத்துக் கொளுத்துகிறது. தன் கண்ணெதிரே தன் காதலியைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து விதவிதமான முறையில் கொலை செய்வதுதான் படத்தின் மீதிக் கதை. 
 
 
 
 அந்த முதல் கொலையைப் பார்த்தும் திடுக்கிடுகிறோம். எதற்காக இந்தக் கொலை? யார் கொலை செய்கிறார்கள்? என்ன காரணத்துக்காக கொலை நடக்கிறது? என்ற பதற்றம் படம் பார்ப்பவர்களைத் தொற்ற வைத்திருப்பது அறிமுக இயக்குநரின் வெற்றி.  நடிப்பைப் பொறுத்தவரை நாயகன் செந்தில்குமார், நாயகி நிகிதா இருவருமே புதுமுகங்கள் என்பதை மறந்து நடித்திருக்கிறார்கள். 
 
 
 
  பவர் ஸ்டார் வரும் அந்த கல்லூரி மாணவர்களுக்கான பியர் போட்டி மாணவர்களைப் பாதை மாற்றும் செயல். அதை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும்
 
 
 
. ஊர்வசியின் ஓவர் நடிப்பு படத்துக்கு ஆகவில்லை. ஏன்.. ஏன்... ஊர்வசி அம்மா?  முகமது ஆத்திப் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை சேர்த்த அதேநேரத்தில், பின்னணி இசையால் காதுகளை டமாரடித்துவிட்டார்.  காதலுக்காக பழி வாங்க ஆரம்பித்து, இறுதியில் நாட்டுக்காக பழிவாங்கிறார் என்ற விஷயம் ரசிக்கும்படியாக உள்ளது. முதல் படம் படிப்பினைதான். சும்மா இருந்து விடாதீர்கள். அடுத்தப் படத்தை பாராட்டும்படி எடுங்கள்.  விழிமூடி யோசித்தால் -  யோசிக்காம பார்த்தால் சரி.
 
 

 
 
நன்றி - சினிமாஎக்ஸ்பிரஸ்

0 comments: