முகேஷ் நேர்முக அறைக்குள் வேகமாக நுழைகிறார். அங்கு உள்ள தேர்வாளர்களைப்
பார்த்துத் தலையசைத்தபடி அவர்கள் எதிரிலுள்ள நாற்காலியில் அமர்கிறார்.
கால்மேல் கால் போட்டுக் கொண்டபடி உட்கார்ந்திருக்கிறார். இது பற்றி
எல்லாம் கவலைப்படாததுபோல் தேர்வாளர்கள் கேள்விகளைக் கேட்கத்
தொடங்குகிறார்கள்.
தேர்வாளர் 1 – உங்க பெயர் என்ன?
முகேஷ் - ‘அடுத்ததாக மிஸ்டர் முகேஷை உள்ளே அனுப்புங்க’ன்னு நீங்க சொன்ன
பிறகுதான் அட்டெண்டர் என்னை அனுப்பியிருப்பார்னு நினைக்கிறேன்.
தேர்வாளர்கள் சிறிது அதிர்ச்சியடைகிறார்கள்.
தேர்வாளர் 2 – நீங்க லேப்டாப் வச்சிருப்பீங்க..
முகேஷ் - (அவர் முடிக்குமுன் குறுக்கிடுகிறார்) - சந்தேகமில்லாமல்
வச்சிருக்கேன். இந்தக் காலத்திலே பள்ளி மாணவர்கள்கூட வச்சிருக்காங்க.
இலவசமா வேறு அரசு அவங்களுக்குக் கொடுக்குது. நான் கம்ப்யூட்டர் படிப்பிலே
முதுநிலைக் கல்வி படிச்சிருக்கேன். என்கிட்டே லேப்டாப் இல்லாம இருக்குமா?
தேர்வாளர் 2 – (கோபத்துடன்) இப்ப என்ன, நான் கேட்டதுக்குச் சாரி சொல்லணுமா?
முகேஷ் - அது உங்க மனப்பக்குவத்தைப் பொருத்தது. நான் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன்.
தேர்வாளர் 1 – அவர் லேப்டாப் தொடர்பாக எதையோ கேட்க நினைக்கிறார்.
அதற்காகத்தான் அது தொடர்பாக ஒரு கேள்வியை முதலில் கேட்டிருக்கிறார் மிஸ்டர்
முகேஷ்.
முகேஷ் – நேரடியாகவே அந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்கலாம். பரவாயில்லே, இப்பதான் அந்தக் கேள்வியைக் கேளுங்க.
தேர்வாளர் 2 – லேப்டாப்பின் பவர் ஸ்விட்சில் ஒரு ‘ஐகான்’ இருக்குமே, அதன் அர்த்தம் என்ன?
முகேஷ் மவுனமாக இருக்கிறார்.
தேர்வாளர் 2 – கம்ப்யூட்டரை ஆன், ஆஃப் செய்ய ஒரு பட்டனை அழுத்துவோமே, அதிலே
ஒரு குறியீடு இருக்கும் ஏன் அந்தக் குறியீடுன்னு கேட்கிறேன்.
முகேஷ் - சார், தமிழிலே ஒரு பழமொழி இருக்கு. “வடையைத் தின்னச் சொன்னால்
துளையை எண்ணலாமா?’’ன்னு. அந்த மாதிரி ஆன்–ஆஃப் ஸ்விட்ச் எதுன்னு
தெரிஞ்சுகிட்டா போதாதா? அதுக்கும் மேலே அதிலே இருக்கும் குறியீடை எல்லாம்
தெரிஞ்சுக்க வேண்டியது அனாவசியம்.
தேர்வாளர் 1 – உங்கள் பதில்கள் ஆணவமாக இருக்கின்றன. இதுபோல
பதிலளித்துக்கொண்டிருந்தால் எங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பது
கஷ்டமாகிவிடும். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முகேஷ் - நஷ்டம் எனக்கில்லை. உங்கள் நிறுவனத்துக்குத்தான். வேற ஏதாவது நீங்க சொல்லணுமா?
தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். பின்னர் அறை வாசலை ஒரு
தேர்வாளரின் கை காட்டுகிறது. முகேஷ் கவலைப்படாமல் வெளியேறுகிறார்.
பல வருடங்களுக்கு முன் படித்த செய்தி இது. பிரிட்டனிலுள்ள சுமார் 100 பெரிய
நிறுவன மேலதிகாரிகளிடம் “நீங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் மிக
வித்தியாசமாக நடந்து கொண்ட நபரைப் பற்றி சொல்ல முடியுமா?’’ என்று கேட்கப்
பலவித விடைகள் கிடைத்தன.
தான் கொண்டுவந்த சான்விட்ச்களைச் சாப்பிட்டுக் கொண்டே விடையளித்த ஒருவர்.
நாற்காலியில் உட்கார மறுத்து நின்று கொண்டே அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்த ஒருவர்.
“என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் நிறுவனத்தின் பெயரை என் கையில் பச்சை குத்திக் கொள்வேன்’’ என்ற ஒருவர்.
“எனக்கு நேர்முகத் தேர்வு நடத்துமளவுக்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பதை நிரூபியுங்கள்’’ என்று கூறிய ஒருவர்.
இப்படிப் பலவிதத் தகவல்கள் அவர்கள் தந்த பதில்களில் வந்தனவாம்.
முகேஷ் நடந்துகொண்ட விதமும் இப்படித்தான் இருக்கிறது இல்லையா?
சில தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சி உண்டு. “தாஜ்மகால் எங்கே
இருக்கிறது?’’ என்று தேர்வாளர் கேள்வி கேட்பார். “மெட்ராஸிலே’’ என்பார்
வேலைக்காக வந்தவர். தேர்வாளர் திடுக்கிட, “பின்னே என்ன சார்? டெல்லின்னு
சரியா சொன்னா மட்டும் எனக்கா வேலையைக் கொடுத்திடப் போறீங்க? ஏற்கெனவே
சிபாரிசு மூலம் வந்த யாரையாவது செலக்ட் செய்திருப்பீங்க. இந்த
நேர்முகமெல்லாம் கண்துடைப்புதானே’’ என்றபடி விரக்தியுடன் வெளியேறுவார்
கதாநாயகன்.
முகேஷும் அப்படித்தான். பல நேர்முகத் தேர்வுகளில் தோல்வி கண்டவன். தனது
தவறுகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் வேண்டுமென்றே தனக்கு
வேலைவாய்ப்பு அளிக்காமல் சதிவேலை பின்னப்படுவதாக நினைத்துக்
கொண்டிருப்பவர்.
இன்றைய நேர்முகத் தேர்வில் அவர் அப்படி நடந்து கொண்டதற்கு ஒரு காரணம் இந்த விரக்தி. ஆனால் இன்னொரு காரணம் மேலும் முக்கியமானது.
அடுத்த மாதம் அவர் வேறொரு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வைச் சந்திக்கப்
போகிறார். அது மேலும் பெரிய நிறுவனம். இன்றைய நேர்முகத்தில் வெற்றி
பெற்றால் கிடைக்கக்கூடிய வேலைக்கான ஊதியத்தைவிட அந்தப் பெரிய நிறுவனத்தில்
இரண்டு மடங்கு ஊதியம். தவிர அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும்
ஒருவர் முகேஷின் உறவினர். அவர் அந்த வேலையை முகேஷுக்கு வாங்கித் தருவதாகக்
கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய நேர்முகத்தைத் தன் கடந்த கால
கோபத்துக்கு வடிகாலாக வெளிப்படுத்திக்கொண்டால் தவறில்லை என்று நினைத்துச்
செயல்பட்டிருக்கிறார் முகேஷ்.
இது மிக ஆபத்தான அணுகுமுறை. உறவினர் சொன்னதைச் செய்வாரா? ஒரு மாதத்துக்குள்
அவர் வேறு நிறுவனத்துக்கு மாறிவிட்டால்? ஒரு மாதத்துக்குள்
குடும்பங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதாவது ஏற்பட்டுப் பிளவு உண்டாகி
விட்டால்? ஒருவேளை அந்த உறவினருக்கு மாற்றலாகி விட்டால்? அல்லது அவர்
இறந்து விட்டால்?
இந்தக் கேள்விகளெல்லாம் ‘ஆனாலும் ஓவர்’ என்று நினைப்பவர்களுக்கு மேலும் சில
கேள்விகள். இன்றைய நேர்முகத்துக்கான தேர்வாளர்களில் ஒருவர் இந்த வேலையை
ராஜினாமா செய்துவிட்டு அந்தப் பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் சேர்ந்து
விட்டால்?
பெரிய நிறுவனத்தின் நேர்முகத் தேர்வையும் அவரே நடத்தும்படி
அமைந்துவிட்டால்? அல்லது குறைந்தபட்சம் இந்தத் தேர்வாளர்களும் பெரிய
நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ளவர்களும் நண்பர்களாக இருந்து முகேஷ் நடந்து
கொண்ட விதத்தைப் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டால்?
யாகாவராயினும் நாகாக்க - மிக முக்கியமாக நேர்முகத் தேர்வுகளில்.
(கணினியில் பவர் ஸ்விட்ச்சில் உள்ள குறியீடு பற்றி அறிய
விரும்புபவர்களுக்கு - அதை உற்றுப் பார்த்தால் ஒரு வட்டமும், அதன்
மேற்பகுதியில் உள்ள இடைவெளியில் ஒரு செங்குத்தான கோடும் இருப்பதைக்
காணலாம். இவை இரண்டும் முறையே 0, 1 ஆகிய எண்களைக் குறிக்கின்றன. கணினிகளைப்
பொருத்தவரை, பைனரி எனப்படும் இந்த இரு எண்களாக மாற்றப்பட்டுதான் நம்
ஆணைகளைக் கணினி செயல்படுத்துகிறது).
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment