Wednesday, January 28, 2015

அழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க

செளந்தர்யம் என்பது ஒரு சாஸ்திரம் என்று அழுத்தமாய்க் கூறுகிறார் சென்னை அடையாறு மோளி ஆன் அழகு நிலையம் மற்றும் பயிற்சி நிலைய இயக்குநராக இருந்த மோளி அந்தோணி. முன்னாள் தலைமைச் செயலர் டி.வி. அந்தோணியின் மனைவி இவர்.
அழகுக்கு அழகு செய்யும் காஸ்மெடாலஜி என்னும் கலையை முறையாகக் கற்று, மேலைநாடுகளில் பயிற்சி பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அழகு நிலையமும், அழகுக் கலைப் பயிற்சி நிலையமும் நடத்தி வருபவர். உலகத்தரம் வாய்ந்த அதி நவீன அழகு சிகிச்சைகள் இங்கு செய்யப்படுகின்றன.
இங்கு நடத்தப்படும் அழகுக் கலைப் பயிற்சி நிலையம், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இப் பயிற்சியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்குக் கட்டணச் சலுகை உண்டு.
அழகுக் கலை பற்றி மோளி:
“”அழகுக் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகுக் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது பற்றிப் படிக்கும்போது காற்றில் இருக்கும் பாக்டீரியா, அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியையும் பிரிசத்தையும் பற்றிப் படிக்கும்போது இயற்பியல்.
ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றிப் படிக்கும்போது வேதியியல். எனவே அடிப்படைக் கல்வியாக 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அழகுக் கலையைப் பயிலலாம்.
பயிற்சிக்கான முதல் அடிப்படைத் தேவை அந்தத் துறையில் ஆர்வமும் ஈடுபாடும். பயிற்சி தொடர்பாக அவரிடம் சில கேள்விகள்.
* அழகுக் கலைப் பயிற்சி பெற முதலில் என்ன செய்ய வேண்டும்?
இக் கலையில் பயிற்சி பெற, கல்வித் தகுதியும் வயது வரம்பும் தேவையில்லை. ஆனால் அரசுச் சான்றிதழ் பெற 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை. பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையோ அல்லது அக்கம்பக்கம் ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவிகளிடம் கேட்டோ ஒரு நல்ல அழகுக் கலைப் பயிற்சி நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனுபவமும் திறமையும் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்ளுதல் முக்கியம்.
* என்ன வகையான பயிற்சிகள் உள்ளன?
பயிற்சிகளில் பல வகைகள், பல நிலைகள் உள்ளன. குறுகிய காலப் பயிற்சி, இரு வாரப் பயிற்சி, 6 வாரப் பயிற்சி, 3 மாதப் பயிற்சி, 1 மாதப் பயிற்சி எனப் பல உள்ளன. இவற்றில் பேசிக், அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று பல நிலைகளில் கற்கலாம். அது மாணவிகளின் வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது.
பயிற்சி வகைகள்: எளிய ஒப்பனையில் தொடங்கி மெஹந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், ப்ளீச்சிங், பெடிக்யூர், மேனிக்யூர் (கால் விரல்கள் மற்றும் கை விரல்களைப் பராமரித்தல்), ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு முறைகள் உள்ளன.
ஒவ்வொன்றையும் முறையாகக் கற்று, தரமான அழகு சாதனப் பொருள்கள் கொண்டு செய்ய வேண்டியது மிக முக்கியம்.
இவை அடிப்படை. இதிலேயே அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று போகும்போது சிறிது செலவு கூடும். அதே அளவு வருமானமும் உண்டு.
* பயிற்சி முடிந்ததும் அழகு நிலையம் தொடங்கலாமா?
உடனே ஆரம்பிப்பதை விட சில மாதங்கள் ஒரு நல்ல தரமான அழகு நிலையத்தில் பயிற்சி பெறுவது நல்லது. அனுபவரீதியாக, செய்முறையில் நிறையக் கற்றுக் கொள்ளலாம். தன்னம்பிக்கையும் ஆர்வமும் அதிகரிக்கும்.
* சொந்தமாய் அழகு நிலையம் தொடங்குவதற்குரிய தகுதிகள்?
அழகு நிலையம் தொடங்குவதற்கு முன் அழகு சிகிச்சை பற்றிய அறிவியல் சார்ந்த முறையில் முழுமையான அறிவு பெற்றிருக்க வேண்டும். சருமங்களின் பல வகைகளையும் (உதாரணமாக சாதாராணமானது, வறண்டது, எண்ணைய்ப் பசையுள்ளது போலப் பல வகை) அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
மேலும் தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், பேக் போன்றவற்றைப் பற்றிய அறிவு தேவை. வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் அறிவியல் ரீதியில் அழகு சிகிச்சை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள நல்ல தரம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக் கலை நிலையத்தில் பயிற்சி பெற்று, டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெறுவது அவசியம்.
* ஓர் அழகு நிலையம் தொடங்க குறைந்தது எவ்வளவு செலவாகும்?
அது நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைப் பொருத்தது. முதலில் அழகு நிலையம் தொடங்குவது பற்றியத் திட்டமிடல் வேண்டும். துவங்கப் போகும் இடம், அந்த இடத்தில் வசிப்போர் மற்றும் வாடிக்கையாளர் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதைப் பொருத்தே பட்ஜெட் அமையும்.
கிராமப்புறம் என்றால் குறைவாகவும் நகர்ப்புறம் என்றால் சிறிது அதிகளவிலும் முதலீடு செய்ய வேண்டும்.
* இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம்?
நடுத்தரக் குடும்பங்கள் இருக்கும் பகுதியாக எடுத்துக் கொண்டால் கூட தினம் 2 பேருக்கு புருவம் திருத்தி, 2 பேருக்கு ஃபேஷியல் செய்தால் கூடப் போதும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ. 500 அல்லது ரூ.1000-க்கு மேல் அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தும் அழகு நிலையத்தில் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பொருள்களின் தரத்தைப் பொருத்தும் வருவாய் ஈட்டலாம்.
மேலும் நாளுக்கு நாள் புதிதாக வளர்ந்து வரும் அழகுக் கலை பற்றிய உயர்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வருமானத்தைப் பன்மடங்காக அதிகரிக்கலாம்.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்.
அழகுக்கலை பற்றி நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டதாலும் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் இத் தொகை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவே தவிர, குறையாது.
அழகு நிலையம் நடத்துபவரின் திறமையும் இதில் உள்ளது. தரமாகச் செய்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் என்ன, நீங்கள்தான் அழகு ராணி!


நன்றி - தினமணி 

0 comments: