Monday, January 19, 2015

மணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சிறுகதை

கதை
மணச் சட்டை  
தி. ஜானகிராமன்
குன்றின் அடிவாரத்தில் சைன்யம் சூழ நின்ற சுல்தான் எல்லையில்லாத பூரிப்படைந்தான். குன்றின்மேல் கோட்டை. கோட்டைக்கு நடுவில் ஓங்கி நின்ற மூன்று மாடி அரண்மனை. அதன் திறந்த மூன்றாம் மாடியில் கைப்பிடிச் சுவரோரமாக இரு கைகளையும் உயரத் தூக்கி நின்றாள் கனோராவின் அரசி. அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்டு “நில்” என்று மலைவெளி அதிர, ஒரு சத்தம் போட்டான் சுல்தான்.
“ராணியை வென்றுவிட்டேன்” என்று மறுபடியும் கோஷமிட்டான் அவன். வியூகம்கலைந்த சைன்யம் ஜயகோஷம் செய்துவிட்டு அடங்கியது.
கான் திரும்பவும் மேலே பார்த்தபோது, மொட்டை மாடி மொட்டையாக இருந்தது. அங்கே கனோராவின் வீரசக்தியைக் காணவில்லை. உடனே மெய்க்காப்பாளர்களையும் தளபதியையும் மட்டும் அழைத்துக்கொண்டு குன்றின்மீது ஏறினான் அவன்.
கோட்டைக்குள்ளிருந்த மாளி கைக்கு வந்தார்கள். இவர்கள் உள்ளே நுழைவதற்கும் உள்ளேயிருந்து ஒரு தூதன் வருவதற்கும் சரியாக இருந்தது.
“கான், ராணி தங்கள் கட்டளைக் காகக் காத்திருக்கிறாள். தங்கள் ஆக்ஞையைக் கேட்டு வரத்தான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லி ஆசனத்தைக் காண்பித்தான் தூதன்.
ஆனால் கான் உட்காரவில்லை. நின்று கொண்டே சொன்னான்: “ராணியின் இருதயம் அதிரும்படியாக நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. இதை மட்டும் போய் அவர் களிடம் தெரிவி. ஐந்து கோட்டைகளைப் பிடுங்கி, தங்களை ஓடஓட வெருட்டியதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்தக் கோட்டையைப் பிடித்ததற்காகவும் வருந்துகிறேன். தாங்கள் சரணாகதி அடைந்தது வாஸ்தவம். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக நான் சரணடைகிறேன். இனிமேல் நான் சுல்தான் அல்ல. என் இருதயக் கோட்டையை வென்று வீற்றிருக்கும் தாங்களே சுல்தானா. இந்தக் கனோரா விற்கு மட்டும் அல்ல; பூபாலுக்கும், தங்கள் நினைவின் ஊக்கத்தால் நான் இனி வெல்லப் போகும் அரசுகளுக்கும் தாங்களே அதிபதி. என் வெற்றிகள் யாவும் தங்கள் வெற்றி.”
“இப்படியே சொல்ல வேண்டுமென்று கானின் கட்டளையா?”
“ஆமாம். ஓர் எழுத்துக்கூட விடாமல் சொல்ல வேண்டும்.
தூதனுக்கு உதறல் எடுத்தது. இதைப் போய்த் தேவியிடம் எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. மெள்ள நகர்ந்தான்.
மேல் மெத்தையில் நின்று, கிடுகிடு பாதாளத்தில் சலக் சலக்கென்று பாறைமீது மோதிச் சென்ற நர்மதையின் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராணி. நதிக்குச் சுவர் எடுத்தாற்போல் செங்குத்தாக இருந் தது குன்று. ராஜ்ய காரியத்தை முடித்து விட்டு அங்கு வந்து, அத்தனை உயரத்தில், குளுகுளுக்கும் காற்றில், மகா ராணி நிம்மதியை அடைவது வழக்கம்.
இன்று அவள் நிலை நேர்மாறாக இருந்தது. காலடியில் சத்துரு வந்து நிற்கிறான். கனோராவின் கண்ணான ஐந்து கோட்டைகளும் போய்விட்டன. ஆனமட்டும் அவளும் முயன்று பார்த்தாள். கடைசி வரை போராடியதெல்லாம் பயனற்று விட்டன. இப்போது ஐந்தும்போய், இந்த விச்ராந்திக் கிருஹமும் விழப் போகிறது. சரணடைந்தாகிவிட்டது. இந்த அவமானத்தை எப்படிப் போக்குவது? செயலற்றுப் போய், அவள் குழம்பிக்கொண்டிருந்தாள். தூதன் வந்துவிட்டான்.
“தேவி, கான் கீழே மண்டபத்தில் இருக்கிறான். கூட மெய்க்காப்பாளர்கள் இருக்கிறார்கள்.”
“மண்டபத்தில் இருக்கிறானா? எப்பொழுது வந்தான்? சைன்யம்?”
“சைன்யம் கீழே இருக்கிறது, குன்றின் அடியில்.”
“என்ன சொன்னான்?”
“சொல்லக் கூடாதவற்றைச் சொல்லியிருக்கிறான். இந்த வார்த்தைகளைச் சொல்ல விதி என்னைத் தானா பொறுக்க வேண்டும்?”
“பாதகம் இல்லை, சொல்லு.”
“தங்கள் சரணாகதியை அவன் ஏற்கவில்லையாம். அவன்தான் தங்களிடம் சரணடை கிறானாம். கனோரா, பூபால், அவன் வெற்றிகள் - யாவற்றையும் தங்கள் சரணத்தில் சமர்ப்பிக்கிறானாம். அவன் இருதயம் -”
“சரி சரி, அலாவுதீன் சமாசாரம் போலத் தானே?”
“ஆமாம்.”
“ஹும், அரணைப் பிடிப்பதற்கு முன்னால் அந்தப்புரத்திற்கு ஆள் பிடிக்கத் தொடங்கி விடுகிறார்கள் இவர்கள். ஆனால் அதுவரையில் யார் காத்திருக்கப் போகிறார்கள்? நர்மதை இத்தனை நாளாகக் கோட்டையைக் காப்பாற்றிவிட்டாள். என்னைக் காக்க மாட்டாளா என்ன?”
சற்று நேரம் கண்ணை மூடித் தன் குலதெய்வத்தைப் பிரார்த்தித்தாள். மேற்கே தகதகவென்று தங்க வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே நழுவிக் கொண்டிருந்தது. அவளுக்குக் கண் கூசாமல் பார்க்க முடிந்தது. அந்த ஜோதிஸுக்கும் வணக்கத்தைச் செலுத்தினாள். உடனே தலைப்பை இழுத்துச் செருகி, கட்டைச் சுவரிடையே, அலங்காரமாகப் பூவும் செடியுமாகக் கட்டப்பட்டிருந்த கற்களினிடையே கால்வைத்து ஏறினாள்.
“தேவி!” தூதன் பதறினான். கூட இருந்தவர்கள் மூச்சடைத்து நின்றார்கள். தலை சுழலும் பள்ளத்தில் ஓடுகிறது நர்மதை. தேவி அதில் விழ - அவர்களுக்கு அந்தப் பயங்கரக் கற்பனையையே செய்து பார்க்க முடியவில்லை. பதறினார்கள்
“நில்” என்று மாடிப்படியில் எதிரொலித்தது. தூக்கி வாரிப்போட்டு நின்றார்கள் எல்லோரும். ராணி திரும்பிப் பார்த்தாள்.
“யார் நீ?”
“கான் எங்கள் இருவரையும் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்.”
“மரணத்திலும் பாவி குறுக்கிட்டுவிட்டானே” என்று துக்கப்பட்டாள் தேவி.
“காவல் எதற்காக? நான்தான் கானுடைய உத்தரவுக்குக் காத்திருக்கிறேனே. எங்கே அவர்?”
“கீழே இருக்கிறார்.”
“நான் பார்க்கலாமா?”
“சித்தம்.”
“சரி, முன்னால் போ.”
“பின்னாலேயே வருகிறோம்.”
“பேடிகள்!”
முதலில் இறங்கினாள் அவள்.
அப்போது கான் நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன் அழகிலேயே சொக்கிப் போயிருந்தான். பொன் வடியும் உடல். கருகருவென்று கன்னத்தையொட்டிச் சுருண்டிருந்த தாடி. தலைப்பாகை. போர்ப் புழுதி படிந்திருந்த சட்டை. பளிச்சிட்ட உடைவாள். சற்று மார்பை முன் தள்ளி, “இப்படியார் கிடைக்கப் போகிறார்கள் உனக்கு?” என்று கான் ராஜ பார்வையை மேலே உயர்த்தி னான். அங்கே கனோராவின் திரிலோக சுந்தரிக்குப் பதிலாக, மேல் மாடியின் ஒட்டுத்தான் தெரிந்தது.
“ஆகா! ஆகா!”
கான் திரும்பிப் பார்த்தான். அவனை ஆட்கொண்ட வனப்பு வடிவம் அங்கு நின்று புன்முறுவல் பூத்துக்கொண்டு இருந்தது.
“ஆகா, என்ன சௌந்தரியம்!” என்று மீண்டும் ஆகாகாரம் செய்தாள் தேவி.
“நானா அழகாக இருக்கிறேன்?”
“உங்களுக்குத் தெரியவில்லையா? கண்ணாடியில் பார்க்கிறீர்களே! இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு சுந்தர புருஷனை எங்கே பார்த்திருக்கிறீர்கள்?
“நான் உனக்குச் சொல்ல வேண்டியதை, நீ சொல்லுகிறாய் எனக்கு?”
“கான், தங்கள் பத்தினி மகா அதிருஷ்டசாலியாக இருக்க வேண்டும்.”
“யார்?”
“பூபாலில் தாங்கள் வெற்றியுடன் திரும்புவதைக் காணக் காத்திருப்பவள்.”
“எனக்குப் பத்தினி இல்லையே. நான் மறுபடியும் பிரம்மசாரி ஆகிவிட்டேன்.”
“அப்படியென்றால்?”
“போபாலின் ராணி நீதான். வெறுமே, பட்டமஹிஷி என்று பெயருக்கு மட்டுமல்ல. ராஜ்யத்தின் சர்வ அதிகாரமும் உன் கைக்கு வந்துவிட்டது.”
“கான், அப்படிச் சொல்லக்கூடாது. தங்கள் பத்தினிக்கு இதைவிடக் கொடுமையான, குரூரமான அநியாயம் இழைக்க முடியாது. பேசாமல் இருங்கள். தங்கள் வெற்றியைக் கண்டு பெருமிதம் அடைகிறவள் அவள் ஒருத்திதானே? நான் உங்கள் சத்துரு. நானா கர்வப்படப் போகிறேன்?”
“எனக்குப் பத்தினி இல்லை என்று சொல்லிவிட்டேனே. இனிமேல் நீதான் சுல்தானா. நீ என் சத்துரு அல்ல. என் எஜமானி. நீ என்னையே வென்று விட்டாய். என் அற்ப வெள்ளிகளைக் கண்டு பெருமிதம் அடைய அவ்வளவு சிறியவளல்ல நீ. உன் ராஜ்யத்தை மேன்மேலும் பெருக்கி, உன்னிடம் சமர்ப்பித்து, உன் ஆக்ஞைக்குக் காத்திருப்பது இந்த அடிமையின் கடமை.”
“கான், பிதற்ற ஆரம்பித்துவிட்டீர்களே.”
“உன்னைக் கண்டால், நாக்கு உளறாமல் என்ன செய்யும்?
“அப்படியானால் இவ்வளவு வாக்குறுதியும் அர்ப்பணமும் நாக்குளறல்தாமோ?”
“தேவி, சமத்காரமாகப் பேசுகிறாய். நான் எப்படிச் சொல்லுவது? ஹிந்துஸ்தானம் முழுவதையும் வென்று உன் காலில் கிடத்துகிறேன். நீ சர்வாதிகாரியாக இரு. என் அந்தப்புரம் முழுவதையும் உன் அடிமையாக்கிவிடுகிறேன்.”
“பெரிய அந்தப்புரந்தானோ!” என்று விஷமச் சிரிப்புச் சிரித்தாள் அவள்.
கான் வெட்கிப் போனான்.
“அப்படியானால் நான்தான் சர்வாதிகாரி என்று சொல்லுங்கள்.”
“ஆமாம்.”
“நானே சுல்தானா!”
“ஆமாம்.”
“நான்தான் அந்தப்புரத்து எஜமானி!”
“ஆமாம்.”
“நாணயத்தில்கூட என் உருவத்தைத்தான் போடுவீர்களோ?”
“ஆமாம்.”
“நல்ல ‘ஆமாம்’ இது.”
“பின் நான் என்ன சொல்வது?” என்று லேசாகச் சிரித்தான் கான்.
“கான், என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் சுபாவம் தெரியாமல் பேசிவிட்டேன். குழந்தைபோன்ற, துல்லியமான, கபடற்ற, வெள்ளை இருதயம் தங்களுக்கு. ஆனால் செயலோ பிரமிக்க அடிக்கிறது. புகை புகாத கனோரா கோட்டைக்குள் புகுந்து என்னை இந்த மூலையில் தள்ளி நெருக்கிவிட்டீர்களே. தங்கள் சுத்த வீரத்தையும் காம்பீர்யத்தையும், வீர்யஸ்ரீயையும் கண்டு எந்த ஸ்திரீதான் மனத்தை இழக்க மாட்டாள்? ஆனால் யாருக்கும் கிட்டாமல், எனக்கு நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள்! மகாவீரரான தங்களை நான் வந்து வரிக்க வேண்டியிருக்க, தாங்கள் வந்து என்னை வரிக்குமாறு நான் செய்ததே பெரிய குற்றம். மன்னிக்க வேண்டும். இப்போதே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். இன்று பௌர்ணமி. மேல்தளத்தில் நம்முடைய ஏகாந்தத்தின்மீது நிலவு பொழிந்து பரவசப்படுத்தப் போகிறது.
“தேவி, என்ன இனிமை, என்ன இனிமை! இன்னும் கொஞ்சம் பேசு. நான் கேட்கிறேன்” என்ற கான் கண்ணை மூடினான்.
“காரியம் தலைக்கு மேல் கிடக்கிறது. பேசிக்கொண்டிருந்தால் நடக்காது. எனக்கு அலங்காரம் செய்துகொள்ள ஐந்தாறு நாழிகையாகும். தங்கள் திவ்ய சுந்தர விக்கிரகத்தை மணக்கோலத்தில் காண வேண்டும். போய் ஆடைகளை அனுப்புகிறேன்” என்று சொல்லி ராணி உள்ளே விரைந்தாள்.
அவள் அனுப்பிய ஆடைகளைக் கையில் எடுத்தான் கான். ஆடையிலிருந்து லேசாக மணம் வீசியது. முகத்தில் புதைத்து மோந்து பார்த்தான் அவன். “என்ன திவ்ய கந்தம்! ஆகா, ராணி மகா ரஸிகை!” என்று கண்ணை மூடி மூடிப் பரவசமானான். அணிந்துகொள்ளுமாறு பக்கத்தில் இருந்தவர்கள் அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது.
* * *
சந்திரோதயமாகி ஒரு நாழிகைக்கு மேலாகிவிட்டது. மேல் தளத்தில் நிலவின் ஒளியில், கானும் தேவியும் தனித்திருந்தனர். பக்கத்தில் பக்கத்தில் மலர்ப் படுக்கையில் அமர்ந்து, ஏகாந்தத்தில் கனியும் ஆழ்ந்த, பாதி ரகஸ்யக் குரலில் ஒருவரையொருவர் புகழ்ந்துகொண்டிருந்தார்கள்.
“கான், எவ்வளவோ புண்ணியம் பண்ணியிருக்கிறேன் நான். ஷாஹேன் ஷாவாக வரப்போகும் கானா அற்பமான கனோராவின் குடிசையில் இருக்கிறார்!
ஷாஹேன் ஷாவா என்னுடன், என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்! ஆகா! எனக்கு நம்பவே முடியவில்லையே!”
“ஷாஹேன் ஷா ஆவதா பெரிது? தன் சிருஷ்டித் திறன் முழுவதையும் உனக்காகச் செலவிட்டுவிட்டான் அல்லா. இத்தனை சக்கரவர்த்திகளைக் கடந்து, என்னிடம் வந்திருக்கிறதே, ஆண்டவனின் அந்த எழிற்கனவு! என்னை இவ்வளவு பாக்கியசாலியாக ஆக்கிய அவனுக்கு என்னிடம் ஏதோ விசேஷ அன்பு இருக்க வேண்டும். நிலவு, புஷ்பம், உதய வானம் - எல்லாவற்றையும் கலந்து உன்னை நிர்மித்திருக்கிறான் அவன். விச்வத்தின் அழகே உன் உருவில் வடிந்திருக்கிறது.”
“கான் என்னைப் புகழ்வது இருக் கட்டும். இரவைப் பாருங்கள்; நிலவைப் பாருங்கள்; சுற்றிலுமுள்ள மலைகளைப் பாருங்கள்; கனோராவின் வம்சத்திற்கு எவ்வளவு ராஸிக்யம் பார்த்தீர்களா? மாளிகையை எவ்வளவு அழகான இடத்தில் நிறுவியிருக்கிறது!”
“அதையெல்லாம் ஏன் பார்க்க வேண்டும்? நிலவு, புஷ்பம், மலையின் காம்பீர்யம்- எல்லாவற்றையும் உன்னிடத்தில் காண்கிறேன். ஆடையில் வீசும் இந்தத் தெய்வீக கந்தம் உயிரையே கொண்டு போகிறதே! ஆகா, உன் கையால் கொஞ்சம் விசிறேன்.
“இன்னுமா காற்று வேண்டும்? ஏற்கனவே காற்று, சில்லிட்டில்லை?”
“உன் கையின் காற்று வேண்டும்”
“தலைப்பால் விசிறுகிறேன்.”
“விசிறியைக் கொண்டுவா. இது போதவில்லை. புழுக்கம் அதிகமாக இருக்கிறது.”
“எனக்குக் குளிர்கிறது; புழுக்கம் தாங்கவில்லை என்கிறீர்களே!”
“உண்மையைச் சொல்லுகிறேன். உடம்பு எரிகிறது. ஜுரம் மாதிரி இருக்கிறது. தொட்டுப் பார்.”
“சொன்னால் நம்பமாட்டேனா? தொட்டுத்தானா தெரிய வேண்டும்?”
“போய் விசிறியைக் கொண்டு வா. நெஞ்சு, கண், எல்லாம் பற்றி எரிகின்றன. தண்ணீரும் கொண்டு வா. நல்ல குளிர்ந்த ஜலமாக இருக்கட்டும்.”
“ஷாஹேன் ஷா!”
“போயேன்.”
“லோகாதிபதி!”
“அப்புறம் அழைக்கலாம். போயேன். தண்ணீர் கொண்டுவா. நாக்கு ஒட்டிக் கொள்கிறது. போயேன், போ, போ” என்று சட்டையைக் கழற்றத் தொடங்கினான் கான். கழற்றும் வரையில் சூடுபொறுக்க முடியவில்லை. கிழித்தான்.
“கான், என்னிடம் நீங்கள் யாசகம் செய்யலாமா?”
“போயேன், நான் அடிமை, போ, தண்ணீர் கொண்டுவா.”
“அடிமைக்கு - அதுவும் இந்த மாதிரி அடிமைக்கு நாங்கள் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் இல்லை, கொடுக்கவும் கூடாது” என்று எழுந்து ராணி, கோரமாகச் சிரித்தாள்.
“நாக்கு இப்படி உலர்ந்து போகிறதே. என்ன காரணம்? மரணதாகமாக இருக்கிறதே!”
“மரணதாகந்தான்!”
“ஹா!”
“அதேதான், கான், உன் உடம்பில் ஒவ்வோர் அணுவிலும், மயிர்க் காலிலும் மரணம் புகுந்துவிட்டது. நீ போட்டிருக்கும் சட்டை, கால் சட்டை, எல்லாம் விஷத்தில், காளகூட விஷத்தில் தோய்க்கப்பட்டிருப்பவை. அந்தத் தெய்வீக கந்தமும் அதுதான்.
“என்ன!
“என்னவா? மிருகமே, இந்த ஸ்திரீசபலம் என்று உங்களை விட்டுப் போகப் போகிறதோ! உன் சபலத்தைத் தெரிவித்தாய். நான் தப்பப் பார்த்தேன். முடியவில்லை. உன் சேவகன் குறுக்கிட்டான். உன் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டி வந்துவிட்டது. இப்போது என் நெஞ்சு ஆறிவிட்டது. மிகவும் அழகாக, நிலவொளியில், மலர் மஞ்சத்தில், திவ்யகந்தத்துடன் உன்னைப் பழி வாங்கிவிட்டேன். உன்னை வாயாரப் புகழ்ந்து, மரண வலையில் வீழ்த்திவிட்டேன். ஆனால் அந்தப் புகழ்ச்சிக்கு, அந்தப் பொய்ப் புகழ்ச்சிக்குக்கூட என் மனம் இடங்கொடுக்க மறுக்கிறது. பொய்யோ, மெய்யோ, புகழ்ந்து விட்டேன், நாயகனைப் புகழ்கிற மாதிரி. இந்த நர்மதை என்னைப் பரிசுத்தப்படுத்தி விடுவாள். கட்டாயம் என்னை ஏற்றுக்கொள்வாள். அப்பொழுது காவல் போட்டாய். இப்போது யார் என்னைத் தடுக்க? கடவுளை நினைத்துக்கொள். இன்னும் நாலைந்து நிமிஷம் உன் உயிர் இருந்தால் அதிகம்.”
கானுக்குக் கிறுகிறுத்தது. காது அடைத்து விட்டது. அவள் பேசியது எங்கோ தொலைவில் இருந்து பேசுவது போல் கேட்டது.
சுவர்மீது ஏறினாள் அவள்.
“ஹாம் ஹாம்’’ என்று திகிலுற்றுச் சத்தம் போட முயன்றான் அவன். ஆனால் வாயில் ஓசை கிளம்பவில்லை. அவனால் எழுந்திருக்கவும் இயலவில்லை.
சுவர்மீது ஏறி ராணி குதித்தாள்.
சுல்தானின் தலையும் தொங்கலிட்டது
* தி. ஜானகிராமனின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று இக்கதை. ‘கலைமகள்’ செப்டம்பர் 1945 இதழில் வெளிவந்த இந்தக் கதை அவரதுதொகுப்புகள் எதிலும் இடம்பெறவில்லை. ‘காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரவிருக்கும்
‘தி. ஜானகிராமன் சிறுகதைகள்’ முழுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.



நன்றி - காலச்சுவடு

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதைப் பகிர்வு.