‘வெள்ளைக்கார துரை’, ‘இது நம்ம ஆளு’, ‘ரஜினி முருகன்’, ‘மாப்பிள்ளை
சிங்கம்’, ‘கத்துக்குட்டி’, சுசீந்திரன் - விஷால் படம் என்று கைநிறைய
படங்களுடன் காமெடி ரேஸில் வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறார் சூரி.
நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படப்பிடிப்புகளுக்குப்
பறந்துகொண்டிருக்கும் சூரியை, அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
“2015 நிச்சயமா எனக்கு நம்பிக்கைக்குரிய வருஷமா அமையும்ணே..." என்று
உற்சாகமாக பேசத் தொடங்கினார். அவரது அலுவலகத்தில் உலகின் முன்னணி சிரிப்பு
ஜாம்பவான்களின் புகைப்படங்களுடன் இயக்குநர் சுசீந்திரனின் படத்தையும்
மாட்டி வைத்திருக்கிறார். “எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்ணே...” என்று
சுசீந்திரனின் படத்தைச் சுட்டிக் காட்டியபடி பேட்டிக்கு அமர்கிறார் சூரி.
கிராமத்துக் காமெடிக்கு மட்டும்தான் சூரி சரியா இருப்பார். சிட்டி காமெடி செட்டாகாதுன்னு ஒரு பேச்சு இருக்கே?
“வரிசையா கிராமத்துப் படங் களா பண்ணுனதால அப்படி சொல்லியிருப்பாங்க. என்ன
கேரக்டர் கொடுத்தாலும், அதை என்னால நல்லா பண்ண முடியும். ‘நிமிர்ந்து நில்’
படத்துல சிட்டி கேரக்டர்தான். இப்போ பண்ணிட்டு இருக்கிற ‘இது நம்ம ஆளு’
படத்துலயும் சிட்டி கேரக்டர்தான். ‘இது நம்ம ஆளு’ வந்ததும் இந்த மாதிரி
கேள்விக்கே இடமில்லாமப் போயிடும்.
ரஜினி, கமல், அஜீத், விக்ரம் என்று இன்னும் நீங்கள் இணைந்து நடிக்காத நடிகர்கள் லிஸ்ட் இருக்கே...?
என்னோட போன்ல தெரியாத நம்பர் வந்தா, அது இந்த நடிகர்களோட இணைஞ்சு நடிக்கிற
வாய்ப்புக்கான போனா இருக்காதான்னு ஏங்குறவன் நான். அவங்க கூட நடிக்க
விரும்பாதவங்க யாராவது இருப்பாங்களா?
‘வீரம்’ படத்துல தம்பி ராமையா சார் ரோல்ல நடிக்க முதல்ல என்னைத்தான்
கேட்டாங்க. ஆனா அந்த கேரக்டர் அஜீத்தைக் கலாய்க்கிற கேரக்டரா இருந்துச்சு.
நான் அஜீத் சாரோட ரசிகன். என்னோட தம்பி ஊர்ல அஜீத் ரசிகர் மன்றம் வெச்சி,
அவர் படம் ரிலீஸ் ஆகுறப்போ கட்-அவுட், அபிஷேகம்னு அதகளம் பண்றவன்.
அப்படியிருக்க, அஜீத் சாரை கலாய்க்கிற மாதிரி நான் நடிச்சா
வீட்டுக்குள்ளேயே வெட்டுக் குத்தாகிப் போயிடுமே. அதனால, அந்த வாய்ப்பை
மறுத்துட்டேன். அஜீத் சாரைத் திட்டித்தான் அவர்கூட நடிக்கணும்னா, அவரோட
சேர்ந்து நடிக்கிற ஆசைய உதறிட்டு, அவரோட ரசிகராகவே நான் இருந்திடுறேன்.
அவர் மேல அம்புட்டு மரியாதைண்ணே!
எப்போ ஹீரோவாகப் போறீங்க?
அய்யய்யோ... அதெல்லாம் வேண்டாம்ணே. நகைச்சுவையில இன்னும் பண்றதுக்கு நிறைய
ஏரியா இருக்கு. இப்போதான் 35 படங்கள் பண்ணியிருக்கேன். சூரின்னு ஒரு
காமெடியன் இருக்கான்னே இப்போதான் தெரிய ஆரம்பிச்சிருக்கு. நல்ல காமெடியன்னு
பேர் வாங்குறதுக்குள்ள எதுக்குண்ணே ஹீரோவாகணும்? இதுவரைக்கும் 18 பேர்
வந்து ‘நீங்கதான் ஹீரோ’ன்னு கதை சொல்லியிருக்காங்க. அவங்க என்னைய ஹீரோவா
நெனச்சாங்க பார்த்தீங்களா... அதுக்காக அவங்க காலைத் தொட்டு வணங்குறேன்.
அதுக்காக ஹீரோவா நடிக்கவெல்லாம் முடியாது. ஹீரோ கூடவே இருக்கோம். அவங்க மேல
அடிக்கிற லைட்டு நம்ம மேலேயும் அடிக்குது. அது போதும். நான் படத்துலதாண்ணே
காமெடியன். நிஜத்துல கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவன். அதனால, எனக்கு ஹீரோ ஆசையே
கெடையாதுங்கிறதை நல்லா கொட்டை எழுத்துல போட்டு, இதுக்கு ஒரு முடிவு
கட்டிருங்கண்ணே...
நகைச்சுவை நடிகர்களுக்கு ‘சின்ன கலைவாணர்’, ‘வைகைப் புயல்’ அப்படின்னு அடைமொழி இருக்கும். அதே மாதிரி உங்களுக்கு?"
எல்லா படத்துக்கும் கேட்பாங்க. நான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுவேன்.
‘சூறாவளி’ சூரி நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ‘நிமிர்ந்து நில்’ படத்துல
‘கருப்பு தங்கம்’னு வந்துச்சு. அது சமுத்திரக்கனி அண்ணன் போட்டது.
அதுக்குப் பிறகு எதுவுமே வந்திருக்காது. ‘தேசிங்கு ராஜா’ படத்துலகூட விமல்
மற்றும் சூரி நடிக்கும்னு போடலாம்னு சொன்னாங்க. அதெல்லாம் ஒண்ணுமே
வேண்டாம். எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நான் ஸ்கிரீன்ல ஸ்கோர் பண்ணினா
போதும்னு சொல்லிட்டேன். அன்னைக்கு இருந்த சினிமா வேற, இன்னைக்கு இருக்கிற
சினிமா வேற. இன்னைய காலகட்டத்துல நிலைச்சு நிக்கிறதே பெரிய விஷயம்.
அந்தக் காலத்துல அதிக ஆட்கள் இல்லை. ஒரு படம் ஹிட்டாச்சுன்னா அடுத்த 20
வருஷத்துக்கு அவங்கதான் ராஜா. அன்னைக்கு கவுண்டமணி சார், வடிவேலு சாரோட
தேதிகளுக்காக காத்துட்டு இருந்தாங்க. இப்போ அப்படியில்லை... சூரி தேதி
இல்லயா, உடனே அடுத்த நடிகருக்கு போன் பண்றாங்க. சூரி நடிச்சாதான் நல்லா
வரும்னு சொல்லி எனக்காக காத்துட்டு இருக்கிற மாதிரி வளர ஆசைப்படுறேன். அந்த
அளவுக்கு முதல்ல வளர்ந்துக்கிறேன்.
வடிவேலுவோட இடத்தை நீங்கள் பிடித்துவிட்டதாகச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
யாரோட இடத்தையும் யாராலயும் பிடிக்க முடியாதுண்ணே. அவங்க விளை யாடிய
கிரவுண்ட்ல நானும் விளை யாடுறேன் அவ்வளவுதான்! வடிவேலு சார், விவேக் சாரை
எல்லாம் இன்னிக்கும் வெறித்தனமான ரசிகனாத்தான் பார்க்கு றேன். நம்மளோடவே
நாம போட்டி போட்டாத்தாண்ணே அது நியாயமானதா இருக்கும்.
நன்றி - த இந்து
1 comments:
ரொம்பத் தெளிவா பேசியிருக்காரு...
Post a Comment