Wednesday, December 24, 2014

‘மீகாமன்’ - படத்தின் கதை என்ன?-இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி

கமர்ஷியல் விஷயங்களை தவிர்க்க முடியாது: இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி

 

கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக வரவிருக்கும் ‘மீகாமன்’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் மகிழ் திருமேனியை சந்தித்தோம். தன் அலுவலக மேஜை மீது லேப்டாப்பை விரித்து, படத்தின் முக்கியமான காட்சிகளை ரீவைண்ட் செய்து பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார், மகிழ். 



‘மீகாமன்’ படத்தின் கதை என்ன?


 
போதைப் பொருள் கடத்தல்தான் படத்தின் மையக் கரு. இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் போதைப் பொருளும் ஒன்று. நாம் ரொம்பவே சீரியஸாக, ஆராய வேண்டிய விஷயம் இது. 



போதை வாணிபம், இந்தியா போன்ற நாடுகளை எந்த அளவுக்கு பாதிப் படைய வைக்கிறது என்பதை ஒரு ஆராய்ச்சியாகவே தொடங்கினோம். அதிலிருந்து ஒரு ஊறுகாய் அளவுக்கு எடுக்கப்பட்டு ஆக்‌ஷன், திரில்லர் கோக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படம். ஒரு கப்பலை வழிநடத்திச் செல்லக்கூடிய மாலுமிகளுடைய தலைவன் ‘மீகாமன்’. ஆர்யாவை இந்த பின்னணியில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கிறோம். ஓரளவுக்கு கடல் சார்ந்த படமாகவும் இது இருக்கும். 



படம் ஒரு சீரியஸ் பிரச்சினையை கோத்துக்கொண்டு ஓடும்போது ஒரு ரிலீஃப் தேவைப்படும். படத்தில் அந்த இடத்தை பூர்த்திசெய்வதுதான் ஹன்சிகாவின் வேலை. போதைப் பொருள் கடத்தல் தொடர்பான உண்மை சம்பவங்களின் தேடலில் பல ஆச்சரியமான விஷயங்கள் கிடைத்தன. அதை எதிர்காலத்தில் ஒரு படமாக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. அது வேறொரு திரைக் களத்தில் நின்று பயணிக்கும் படமாக இருக்கும். 



முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து வருவதால் இப்படத்தில் ஆர்யாவை தேர்வு செய்தீர்களா? 



அடிப்படையில் இது ஒரு ஆக்‌ஷன், திரில்லர் படம். இதை சரியான ஒரு நாயகன் செய்தால்தான் மக்களிடமும் நம்பிக்கையை உண்டாக்க முடியும். மேலும் இதுபோன்ற படத்தை எடுக்கும்போது ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதை சரியாக வியாபாரம் செய்யக்கூடிய ஒரு ஹீரோ தேவை. இந்த இரண்டுக்கும் ஆர்யா பொருத்தமாக அமைந்தார். கதையை எழுதி முடித்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர் நான். இந்த கதாபாத்திரத்துக்காக ஆர்யா தன்னை எப்படி மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை படத்தைப் பார்க்கும்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 



பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும்போது வணிகரீதியாக என்ற பெயரில் குத்துப் பாடல், கவர்ச்சி ஆகியவற்றையும் சேர்க்க வேண்டியிருக்குமே. நீங்கள் இதை எப்படி கையாள்கிறீர்கள்?

 
கமர்ஷியலாக சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் அவை படத்தின் கதைப்போக்கை பாதிக்காத அளவில் என் படங்களில் கையாண்டிருக் கிறேன். அதையே இந்தப்படத்திலும் சாத்தியமாக்கியிருக்கிறேன். 



பாக்ஸ் ஆபீஸ் படம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு வெளிவரும் படங்கள் கூட வசூலைப் பெற கஷ்டப்படுகிறதே?


 
சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று எல்லாப் படங்களுக்கும் வணிகம் அவசியம். இங்கே வணிகம் சார்ந்த விஷயங்கள் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழ் சினிமா பல்முனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஹாலிவுட்டில் ஒரு படம் வெளிவந்தால் அதற்கு எவ்வளவு முதலீடு, எவ்வளவு வசூல் என்று யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழில் அப்படி இல்லை. 



தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையில் பாதிப்பு, பிரச்சினைகள் இருக்கவே செய்கிறது. தமிழ் சினிமா உள்ளடக்கத்தால் மாறியுள்ளது. ரசிகர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வணிகரீதியான மாற்றங்கள் நடக்க வில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செட்டப்தான் இப்போதும் உள்ளது. இதைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 



தமிழில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மாறிவிட்டீர்கள். இன்னும் ஏன் திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்?


 
அம்மாவின் அன்புக் கேள்வியும் இதுதான். சரியான பெண்ணை பார்க்கும் போது நிச்சயம் திருமணம் பற்றிய அறிவிப்பு இருக்கும்.

 நன்றி -த இந்து

0 comments: