Saturday, December 06, 2014

மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய்த் தவமிருந்து டிஜிட்டலின் சினிமா வின் முன்னோடிகளா?

 
 

கோணங்கள் 10 - முகமறியா முதலீடு... தேவை உஷார்!-கேபிள் சங்கர்

 
தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் அடிபடும் இரண்டு வார்த்தைகள் ‘கிரவுட் ஃபன்டிங்’. சினிமா என்பதே ரசிகர்கள் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்து கொட்டிக் கொடுக்கும் விஷயம்தானே, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கும் வெள்ளந்திகளை விட்டு விடுங்கள். இது பற்றி அக்கறையுடன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம். 


ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒருவரோ, இருவரோ இணைந்து அதற்கான முதலீட்டைப் போடுவது என்பது வழக்கமான விஷயம். அதற்கு முன்னால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்கிற எண்ணம் வந்த பின் இருவரும் பங்குதாரர் ஆகிப் படம் தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்தக் கிரவுட் ஃபண்டிங் முறையில் யாரையும் யாருக்கும் தெரிந்திருக்கத் தேவையில்லை. சினிமாவின் மீது ஆழ்ந்த நேசம் கொண்ட நூறு பேரோ, அல்லது ஆயிரம் பேரோ சேர்ந்து ஒரு படத்தைத் தயாரிப்பது என்பதுதான் இந்த முறை. 



சினிமாவுக்காக முதலீடு செய்ய முன்வருபவர்களில் நிறைய பேர் சினிமா பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள். இடர்கள் நிறைந்த கலைத்தொழில்; கிட்டத்தட்ட இது சூதாட்டம் என்பது அறியாமல் இதில் முதலீடு செய்தால் அவர் அப்பாவி. சூதானமாய் இல்லாவிட்டால் குப்புறப் போட்டுக் கவிழ்த்து மண்ணுக்குள் புதைத்துவிடக்கூடிய ஆட்டமென்று தெரிந்தும், முழுசாய் ஒரு படமெடுக்க நம்மிடம் பணமில்லாவிட்டாலும், நாலு பேர் சேர்ந்து பணம் போட்டால் நம் மனசுக்குப் பிடிச்ச படம் எடுக்க முடியாதா என்கிற ஆசையும் சேர, கூட்டுத் தயாரிப்புக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பிக்கிறது. இன்றைய சமூக வலைதளக் காலத்தில் முகமறியா நண்பர்களை ஒன்று சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 



ஆனால் இவையெல்லாம் இல்லாத 1978களிலேயே இயக்குநர் ஷ்யாம் பெனகல் குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுக்க, அதை வைத்து ‘மந்தன்' எனும் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இந்திய அளவில் தேசிய விருதும், மற்றும் பல விருதுகளையும் பெற்றது அப்படம். அதன் பிறகு 1986ல் ஜான் அபிரகாம் தமிழிலும், மலையாளத்திலும் ‘அம்ம அறியான்' என்கிற படத்தை மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பணம் வசூல் செய்து தயாரித்தார். 



“ நான் எழுதி முடித்த திரைக்கதையின் மேல் அபாரமான நம்பிக்கை இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தயாரிப்பாளர் தேடியும் கிடைக்கவில்லை. என் நடிப்புப் பயணம் நன்றாய் போய்க் கொண்டிருக்க, அதில் சேமித்த பணத்தை வைத்துக் கொண்டு என் முதல் படமான ‘ரகு ரோமியோ’வை ஆரம்பித்தேன். கூடுதல் தேவைக்கு நண்பர்களை அணுகினேன். எங்களுடைய ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து, படத்தின் மூலமாய் லாபம் வந்தால் அவர்கள் எல்லோரும் பார்ட்னர்கள். வராவிட்டால் நஷ்டத்தை நான் ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுக்கிறேன் என்பது. படம் தயாரித்து வெளிவந்து சில வருடங்கள் வரை நான் பணத்தைத் திரும்பக் கொடுத்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதையெல்லாம் மீறி மீண்டும் இம்மாதிரியான முறையில் படம் தயாரிக்க ஆவலாகவே இருக்கிறேன்” என்கிறார் ரகு ரோமியோ, மித்யா ஆகிய படங்களின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ரஜத் கபூர். 



இப்படி உலகெங்கிலும் பல பேர் சினிமா என்றில்லாமல் வீடியோ கேம்கள் உருவாக்கம், ரியல் எஸ்டேட், புத்தகம் பதிப்பித்தல் எனப் பல திட்டங்களுக்கு கிரவுட் ஃபண்டிங் மூலம் பணம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். 



இந்தப் போக்கு தற்போது இந்தியாவில் முக்கியமாய்த் தமிழ் நாட்டில் பரபரப்பாகக் காரணம் பவன்குமாரின் கன்னடப் படமான ‘லூசியா’. இணையதளம் மூலமாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் திரட்டப்பட்ட எழுபது லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு, சுமார் மூன்று கோடிக்கு மேல் திரையரங்கு மூலமாகவும், அதன் பின் டப்பிங், ரீமேக் ரைட்ஸ் மூலமாகவும் வருமானம் ஈட்டியது இந்தப் படம். 




வானம் வசப்படும், மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய்த் தவமிருந்து ஆகிய படங்கள் மூலம் தமிழில் டிஜிட்டல் சினிமா நுழைந்த காலத்தில் பலரால் அந்தத் தொழில்நுட்பம் வரவேற்கப்படவில்லை. காரணம் அம்முறையில் எடுத்த படங்களின் வணிகத் தோல்வி. மெல்லத் தொழில்நுட்பம் வளர வளர டிஜிட்டல், கேமராவில் படமெடுக்கும் முறை சிக்கனமாகவும், விஸ்தாரமாகவும் மாறி வெற்றியின் சதவிகிதமும் உயர ஆரம்பித்ததும் இன்று சுமார் இருநூறு படங்களுக்கு மேல் டிஜிட்டலில் தயாராகி எப்படி வெளியிடுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\\\




‘என்னிடம் சிறந்த கதை இருக்கிறது. ஆனால் அதைப் படமாக்கக்கூடிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. எனவே என் கதையை நம்பி, அதில் முதலீடு செய்யக்கூடியவர்கள் ஒன்று சேர்ந்து அப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதில் வரும் லாப, நஷ்டம் அனைத்தும் பொதுவானது என்கிற விதியுடன் தமிழில் மட்டும் மூன்று படங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. 



ஆனால் இப்படியான குறிக்கோள் மட்டுமே இன்றைய தமிழ் சினிமா இருக்கும் நிலையில் போதுமானதா? இதற்கு முந்தைய படங்களின் வெற்றி எப்படிப்பட்டது? மக்களால் ஃபண்ட் செய்யப்படும் படங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட வருவாய் என்ன? இவை எல்லாவற்றையும் விட இதில் இறங்கியிருப்பவர்களின் நேர்மை சார்ந்த தகுதியும், அவர்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயரும் என்ன? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எத்தனையோ நூறு படங்கள் வெளிவர முடியாமல் இருக்கும் நிலையில் நூறு பேர் பணம் போட்டுப் படமெடுத்து மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெறுவது சாத்தியமா? அப்படிச் சாத்தியமென்றால் எப்படி? 



அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி - த இந்து 

0 comments: