விலாசம்
முறை தவறிய உறவால் பிறந்து பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளின் விலாசம்
என்ன...? இதுதான் "விலாசம்' படத்தின் கதை. மிகப் பெரிய சமூகப் பிரச்னையைப்
பேசியதற்காக இயக்குநர்
பா.ராஜகணேசன் பாராட்டுக்குரியவர். ஆனால், படம் பேச விரும்பிய விஷயத்தை சரியான
முறையில் பேசியதா...? என்றால் "இல்லை' என்பதே பதிலாக அமைகிறது.
முறை தவறிய உறவால் பிறந்ததால், பிறந்த சில மணி நேரங்களிலேயே தாய் } தந்தையால்
கைவிடப்படுகிறார் கதாநாயகன் சீசா (பவன்). அவரை "சிவானந்தா குருகுலம்' தத்தெடுத்துக்
கொள்கிறது. அங்கு நடக்கும் சில சம்பவங்களும், வார்டனின் கண்டிப்பும் பிடிக்காமல்
குருகுலத்தை விட்டு ஒருநாள் தப்பியோடுகிறார் சீசா. அடைக்கலம் புக இடம் இல்லாமல் ஒரு
மீனவக் குப்பத்தில் வாழ்கிறார். அப்போது அவருக்கு அறிமுகமாகும் வில்லன் பவாவிடம் (அருள்தாஸ்)
அடியாளாக வேலை செய்கிறார். காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் அடித்துத்
துவைத்துவிடுவார் சீசா.
சில வருடங்களில் பவாவிடம் கருத்து முரண்பாடு கொண்டு தனியாகச் சென்றுவிடும்
சீசாவுடன் நண்பன் போட்டி (லக்ஷ்மண்) இணைந்து கொள்கிறார்.
இந்நிலையில் சில ரவுடிகள் நாயகி அபியை (சனம் ஷெட்டி) கடத்தி வந்து பாலியல்
வல்லுறவுக்குட்படுத்த முயல்கின்றனர். அந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சீசா,
நாயகியை தான் முதலில் வல்லுறவுக்குட்படுத்துவதாக கூறி உள்ளே அழைத்து செல்கிறார்.
அங்கே நாயகி தனது தந்தை உடம்புக்கு முடியாமல் இருப்பதாகவும், தான் வைத்தியசாலை
சென்றால் மட்டுமே தனது தந்தையைக் காப்பாற்ற முடியும் எனவும் இரந்து கேட்க... நாயகியை
ஏதும் செய்யாமல் நாயகன் விடுவித்து விடுகிறார்.
காண்ட்ராக்டர் சுப்ரமணியை பவா கொலை செய்துவிட்டு பழியை சீசா மீது போட்டுவிட,
போலீஸ் அவனைக் கைது செய்து சித்திரவதைக்குட்படுத்துகிறது. அவனை ஜாமீனில் எடுக்க
யாரும் முன்வராத நிலையில் நாயகி சீசாவை ஜாமீனில் எடுக்க முன்வருவதுடன் நாயகனை தனது
வீட்டிலே வைத்து சில நாட்கள் பராமரிக்கிறாள். சிறிது நாட்களில் இருவரும் காதலில்
விழுகிறார்கள். ரவுடியான சீசாவின் குண இயல்புகளை நாயகியின் காதல் மாற்றியதா...?
நாயகன் தனது அம்மா அப்பாவை கண்டுபிடிக்கிறானா...? என்பதுதான் மீதிக் கதை.
வில்லனாக பல படங்களில் நடித்த பவனுக்கு நாயகனாக முதல் படம் இது. பெற்றோரால்
கைவிடப்படுபவன் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்களை அருமையாக வெளிப்படுத்துகிறார்.
ஆனால், காதல் காட்சிகளிலும் முறைத்துக் கொண்டு விறைப்பாக இருப்பதை ஏனோ ரசிக்க
முடியவில்லை.
நாயகனை திருத்தி நல்வழிப்படுத்தும் பாத்திரத்தில் நாயகி சனம் ஷெட்டி
அருமையாகப் பொருந்திப் போகிறார். ஆனால், பாலியல் வன்புணர வந்தவன் மீதே அவர் காதலில்
விழுவதாகக் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.
"ஆடுகளம்' நரேனின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லவேண்டும். இன்ஸ்பெக்டராக வரும்
காட்சிகளில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். "இதற்கு தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா' படத்தை தொடர்ந்து முழு நீள காமெடி ரோலில் நடித்திருக்கிறார் "நான் கடவுள்'
ராஜேந்திரன். காமெடி அவருக்கு நன்றாக வருகின்றது.
அருள்தாஸ், போஸ் வெங்கட், சேத்தன், ஷர்மிலி ஆகியோர் தமக்குக் கொடுக்கப்பட்ட
பாத்திரங்களை அழகாக செய்துள்ளனர்.
யூ.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிளிர்கின்றன. ரவி ராகவ்வின்
இசையில் பாடல்கள் ரசிக்கவைத்தாலும் அவை முன்பு கேட்ட உணர்வையே தருகின்றன.
நல்லதொரு சமூக சேதியை சொல்லும் படம் என்பதனால் விலாசத்தை ஒருதடவை பார்க்கலாம்.
விலாசம்- முகவரி இழந்தவர்களின் கதை.
thanx - dinamani
1 comments:
பார்க்கலாம் என்று சொல்லியிருப்பதால் பார்ப்போம்.
Post a Comment