Friday, December 19, 2014

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Marussia
Marussia
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Marussia/France/Russia/Natalia Saracco/82’/2014
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து எண்ணற்ற மக்கள் பாரீஸ் போன்ற நகரங்களுக்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். அங்குள்ள தங்கள் நிலங்களை விட்டுவிட்டு இங்கு வருவதற்குக் காரணம் அங்கு இனி எதிர்காலம் இல்லை என்பதுதான். லூசியாவும் அவளது சிறிய மகள் மாருஷ்யாவும் ரஷ்யாவிலிருந்து வெளியேறியவர்கள். அவர்கள் தெருக்களில் உறங்கி நாடோடிகளாக பிரான்ஸை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 



பல நேரங்களில் திக்கற்ற அவர்களின் சூட்கேஸ்கள் பரிசோதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகள் மிக்க ரஷ்ய மதகுரு ஒருவர் இவர்களுக்கு முதன்முதலாக தங்குவதற்கு இடம் தர முன்வருகிறார். அதேபோல இரண்டாவது நாள் ஒரு வீடற்றவர்களுக்தான தங்குமிடத்தில் தங்குகின்றனர். இப்படி அடுத்தடுத்து சினிமா தியேட்டரில், கட்சி ஆபீசில், இன்னொருநாள் ஒரு நடிகையோடு பெரிய ஓட்டலில் என தங்குகின்றனர். ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ்சுக்கு செல்லும் இவர்களின் பயணத்தைப் பேச இப்படம், பயணங்கள், இடைவெளிகள் குறித்து நிறைய அர்த்தங்களை உணர்த்துகிறது. 



மதியம் 12 மணி
Life in Fish Bowl / Zophoniassiolceland/Attila Szasz /130’/2014
நெருக்கடிக்கு முந்தைய ஐஸ்லாந்து நாட்டில் ஒரு சிறிய குடும்பத்தை வைத்து அந்த நாட்டின் பொருளாதார அரசியல் நிலைகளையும் ஆழமாக பேசியுள்ள படம். அப்பா அம்மாவால் வெறுக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தைக்காக நர்சரி வேலையைத் தவிர மற்ற நேரங்களில் செக்ஸ் வொர்க்கராகவும் சென்று பணம் சம்பாதிக்கிறாள். 



அவளுக்குப் பிறந்த மகன் ஓர் எழுத்தாளனாக மாறுகிறான். அவன் செய்துகொண்ட திருமணம் அவனுக்கு நிம்மதியைத் தராமல் சிக்கலைத்தான் தருகிறது. தன்னுடைய மகள் இறந்தபிறகு மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறான் அந்த எழுத்தாளன். ஒரு முன்னாள் கால்பந்து விளையாட்டு வீராங்கனையான அவனது மனைவி; உலக வங்கிகளில் உயர்ந்துகொண்டே போகிறது அவளது பொருளாதாரம். 



அவனோ வெளி உலகிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு குடியில் மூழ்கிவிடுகிறான். 20 வருடங்களாக இருந்த அவன் இதேநிலையிலிருந்து இறந்தும்போகிறான். பிரமாண்டம், உணர்ச்சிப்பூர்வம், அழகியல் என எதிலும் குறையின்றி வெளிவந்துள்ள படம். 



மதியம் 3 மணி
The Moveable Feast / Zone pro site / Chen Yu-Hsun Taiwan / 2013 / 148'
தைவானின் உள்நாட்டு சுவையுணர்வுப் பண்பாட்டைப்பேசும் இந்தக் கதையை வெளிப்புற சுவைவிருந்து ஒன்று சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வேளாண்மை யுகத்தில் தடம் காண முடியும். அந்தக் காலத்தில் உணவு விடுதிகள் குறைவு. எனவே திருமண வரவேற்பு, விருந்து போன்ற நிகழ்ச்சிகள் வெளி இடங்களிலோ டென்ட் போன்ற முகாம்களிலோதான் நடைபெறும். சாதாரண அடுப்புகள் மற்றும் நீளமான மேஜைகள் ஆகியவற்றுடன் விருந்து சமையல் நடைபெறும். ஒவ்வொரு உணவும் அந்த இடத்திலேயே உடனுக்குடன் தயாரிக்கப்படுவதே. 



சமையல் நடைமுறைகளை, என்ன சமைப்பது போன்றவற்றை முடிவு செய்பவர் தைவானிய மொழியில் ஸோன் ப்ரோ சைட் என்று அழைக்கப்படுவார்.அப்படிப்பட்ட விருந்துக்கு வரும் தலைமைச் சமையலாளி தனது பண்ட பாத்திரங்களுடன் வருவார். ஆனால் விதவிதமான உணவு வகைகளுடன் அவரது படைப்பாற்றலை அவர் காண்பிக்க வேண்டும். அந்த விருந்து எதற்காக நடத்தப்படுகிறதோ அதனை மையமாகக் கொண்டு வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டும். 



என்ன சமையல் பொருட்கள் கொடுத்தாலும் அவர் அந்த விருந்தின் காரணத்திற்கேற்ப வித்தியாசமான உணவு வகைகளை அவர் சமைத்தால்தான் அவரது படைப்பாற்றல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். விருந்து கொடுப்பவரும், விருந்தாளிகள் அனைவரும் முழுதும் அந்த உணவு வகைகளை நன்கு ருசித்து சாப்பிடவேண்டும் என்பதே சவால். சமையலைக் குறைகூறியே பழக்கப்பட்டவர்கள் கூட புகழ்ந்து விட்டால் அவரை ஒரு சிறந்த சமையல் காராராக ஏற்றுக்கொள்ளப்படுவார். இந்தப் படம் அத்தகைய சமையல்காரரைப் பற்றியும் தைவானிய பண்பாட்டையும் பேசுகிறது.
மாலை 5 மணி
Consequences / Silsile Ozan Aciktan / Turkey / 2014 / 106'
ஒரு கடும் கோடை இரவில் எசி என்பவர் சென்க் என்பவரின் இடத்திற்குச் செல்கிறார். ஏதோ நீண்ட நாட்களுக்கு இருவரும் பிரிந்திருந்தது போல் உணர்கின்றனர். அப்போது திடீரென ஒரு 14 வயதுள்ள கள்வன் வீட்டிற்குள் வருகிறான். அவன் பெயர் கிலிச். ஆனால் இவன் எப்படியோ குடியிருப்பிலிருந்து தப்பிச் செல்கிறான். 



சிறிது நேரத்தில் இன்னொரு கள்வன் இருட்டிலிருந்து வருகிறான். எசி அவனை கடுமையான பொருள் ஒன்றினால் தற்காப்பிற்காக தாக்குகிறார். டெய்ஃபன் என்ற அந்தக் கள்வன் பயங்கர ரத்தத்துடன் தரையில் சாய்கிறான்.
சென்க் என்ன கூறுகிறார் என்றால் டெய்ஃபன் என்ற அந்தக் கள்வனுக்கு நேர்ந்த கதிகுறித்து தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி எசியை வெளியே அனுப்பி விட்டு தனது சிறந்த நண்பரான ஃபரூக்கை உதவிக்கு அழைக்கிறாள் சென்க். 



ஃபரூக்கும் அவரது வழக்கறிஞர் மெர்வ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். ஃபரூக்கும், எசியும் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டவர்கள் என்று தெரிகிறது. பரூக்கும் சென்க்கும் வர்த்தகக் கூட்டாளிகள். சென்க் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து வந்து தனது புரோஜக்டில் பணி செய்ய தொடங்கியிருக்கிறார். 



இதனிடையே முதலில் வீட்டில் திருடனாக நுழைந்து தப்பிச் சென்ற கிலிச், எசியை ஒரு காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்கிறான். காரணம், எசி முதலில் கொலை செய்த டெய்ஃபன் என்ற திருடன் கிலிச்சின் சகோதரன். இதன் பிறகு சங்கிலித் தொடராக நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுகிறது. சிக்கலான நகர்ப்புற வாழ்வியல் உறவுகள் சொல்லப்படுகிறது. தொடர் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் சென்க், பரூக், எசி ஆகியோரது வாழ்க்கையை நிலையாக மாற்றுகிறது.
மாலை 7.15 மணி 



Hadji Sha/Iran/Zamani Esmati /97’/2014
ஹாஜ்ஜி ஷா ஐம்பது வயதுப் பெண்மணி. அவள் கடந்த 30 வருடங்களாக தன்னை ஒரு ஆணைப் போலவே நினைத்துக்கொண்டு தன்னுடைய தங்கையின் குடும்பத்தை காப்பாற்றி வருபவள். அவளுடைய வீட்டுக்கு புதியதாக குடிவரும் பாடகி ஒருத்தி தான் பாடிய பாடல்களை வெளியிடவேண்டும் என்பது அவளது ஆசை. அவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். 



இருவரும் பெண் என்ற அடையாளம் எவ்வளவு மோசடியானது என்பதை சிந்திக்கிறார்கள். ஆண் சமூகத்தின் அடிமைத்தளையில் சிக்குண்ட பெண்இருப்பை இருவரும் பேசிக்கொள்கிறார்கள். 



ஹாஜ்ஜி தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவள். தன்னுடைய தங்கைக்கு வாய்த்த மருமகன் எவ்வளவு கேவலமானவன் என்பதை அவன் வரும்போதே உணர்ந்துவிட்டவன். 



இந்தக் குடும்பத்தின் நிலையை மாற்ற விரும்பி போராடாதவனாக அதில் சுகம்காணுபவனாக அவன் இருப்பதை உணர்கிறாள். தங்கையின் உடல்குறைபாடு கொண்ட பேத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட விஷயம் அவளுக்குத் தெரியவரும்போது எல்லையற்ற கோபத்திற்கு தள்ளப்படுகிறாள். 


thanx - the hindu

0 comments: