Tuesday, November 18, 2014

ஒன்று வாங்கினால்... ஒன்று இலவசமா?- ஆஃபர் ஆர்வலர்கள் கவனத்துக்கு!

1

மளிகைக் கடையில் மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது, எப்போதுமே கடந்த மாதத்தைவிட பில் அதிகமாகவே வரும். விலைவாசி உயர்வு மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் தேவைக்கு அதிகமான பொருட்களை நம்மை அறியாமலேயே நாம் வாங்குவதும் அதற்கு ஒரு காரணம்.
அப்படி வாங்க நம்மைத் தூண்டுவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கு விளம்பரங்கள், கண்கவர் ஆஃபர் அறிவிப்புகள், கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள்.
அப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.
ஆனால், அப்படி ஆஃபர்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது சற்று கவனமாகவே இருங்கள். ஏனென்றால், அந்த பொருட்கள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் காலாவதியாகப் போவதாகவே இருக்கும். அல்லது முற்றிலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறியிருக்கும். எனவே, அவற்றை வாங்குவதில் அதிக கவனம் தேவை.
கடந்த ஆண்டு, சென்னை நகர் முழுவதும் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை மாநில உணவுப் பாதுகாப்பு நிறுவனம் பறிமுதல் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள்கூட காலாவதியான பொருட்களை ஆஃபர் போர்வையில் விற்பனை செய்கின்றன. வடசென்னையில், இப்படிப்பட்ட விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது" என்றார்
ஆனால் 10, 15 நாட்கள் வரை காலாவதி தேதி இருக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது அல்ல என கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்.
காலாவதிப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை புரிதலையாவது பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன்படி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது சுகாதரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. உணவுப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாளும் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விரைவில் கெட்டுப்போகும் பிரெட், பால் போன்ற உணவுப் பதார்த்தங்களிலும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மட்டுமே பெரும்பாலும் இந்தத் தேதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இயக்குநர் ஜி.சந்தனராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது சட்ட விரோதமானது. தண்டனைக்குரியது. அப்படிப்பட்ட விற்பனை நடைபெற்றால், அது குறித்து நுகர்வோர் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் நிச்சயமாக புகார் செய்யலாம். அதுபோல், காலாவதி பொருளை உட்கொண்டதால் நுகர்வோர் பாதிப்படையும் போது, அந்த பொருள் விற்கப்பட்டது கிரிமினல் குற்றமாகிவிடுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரூ.5 லட்சம் வரை அபாராதம் விதிக்க வழி இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் விற்பனையாளர்களை மட்டும் முழுமையாக குற்றம்சாட்ட முடியாது. நுகர்வோரும் மலிவு விலை, சலுகை விலை, ஆஃபர் விற்பனை பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
காலாவதி தேதி வரும் வரை உணவுப் பொருட்களை கடைகளில் தேக்கி வைப்பதில் தவறில்லை, ஆனால், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு காலாவதியான பொருட்களை உடனடியாக அலமாரியில் இருந்து அகற்ற முறையான பயிற்சி அளித்தல் அவசியம் என கூறுகிறார் பிரபல சூப்பர் மார்க்கெட் அதிபர் ஒருவர். 


நன்றி - த இந்து

0 comments: