Thursday, November 20, 2014

லிங்கா - சோனாக்சி சின்ஹா 20 , ரஜினி 60 - கெமிஸ்ட்ரி 80%

லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் உற்சாகமாக இருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. “இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மணிபாரதி என்ற கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன். 1940-களில் ரஜினிகாந்த், கிராமத்துக்காக செய்யும் நல்ல காரியங்களுக்கு தோள் கொடுக்கும் கேரக்டர் என்னுடையது. தமிழில் என் முதல் படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பெருமையாக உள்ளது” என்று சந்தோஷம் பொங்கப் பேசிக்கொண்டே இருக்கிறார் நடிகை சோனாஷி சின்ஹா. 


சென்னையில் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக வந்திருந்த அவரைச் சந்தித்தோம். 


நீங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர். தென்னிந்திய கிராமத்துப் பெண்ணாக நடிப்பது கஷ்டமாக இருந்ததா? 

 
இல்லை. கே.எஸ். ரவிகுமார் ஒரு சிறந்த இயக்குநர். காட்சிகள் அனைத்தையும் எனக்கு தெளிவாக விளக்கினார். மொழி தெரியவில்லை என்றாலும் தமிழ் வசனங்களை எனக்குப் புரியுமாறு ஆங்கிலத்தில் எழுதித் தந்தார்கள். அந்த வசனங்கள் எனக்காக எளிமையாக்கப்பட்டது. கிட்டத்தட்ட என்னை ஒரு மகாராணியைப் போல நடத்தினார்கள். அதனால் எனக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. 



உங்கள் தந்தை சத்ருகன் சின்ஹாவை தனது ஆதர்ச நாயகனாக ரஜினி கருதுகிறார். அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? 

 
அற்புதமான மனிதர் அவர். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. திரையுலகில் பல வெற்றிகளைக் குவித்த பிறகும் எந்த ஈகோவும் இல்லாமல் எளிமையாக பழகுகிறார். மொழி தெரியாததால் எந்த வார்த்தைக்கு எந்த முகபாவம் காட்டுவது என்பதில் எனக்கு சிக்கல் இருந்தது. அப்படிப்பட்ட நேரங்களில் ரஜினிதான் எனக்கு உதவி செய்தார். 


பாலிவுட்டில் படங்களை மெதுவாக எடுப்பார்கள். ஆனால், தமிழில் வேகமாக படங்களை எடுத்து முடிப்பார்கள். அதிலும் கே.எஸ்.ரவிகுமார் மிக வேகமாக படங்களை எடுக்கக் கூடியவர். அவருடைய வேகத்துக்கு உங்களால் ஈடுகொடுக்க முடிந்ததா? 


 
தென்னிந்திய இயக்குநர்களான பிரபுதேவா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் இயக்கங்களில் நான் ஏற்கெனவே நடித்துள்ளேன். அதனால் வேகமாக எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான பயிற்சி எனக்கு ஏற்கெனவே கிடைத்திருந்தது. எனக்கு மொழிப் பிரச்சினை இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாகலாம் என்று ரவிகுமார் முதலில் நினைத்துள்ளார். ஆனால், நான் வெகு சீக்கிரத்தில் தமிழ் உச்சரிப்புகளைப் பழகிவிட்டேன். அதனால் படம் தாமதமாகவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமாக தயாராகியும் படம் மின்னல் வேகத்தில் முடிந்துவிட்டது. 


ரஜினியின் நாயகியாக நடிப்பதுகுறித்து உங்கள் தந்தை என்ன சொன்னார்? 



 
அவருக்கு இதில் மிகவும் சந்தோஷம். இதைவிட தமிழில் ஒரு சிறந்த தொடக்கம் எனக்குக் கிடைக்காது என்று அவர் நினைத்தார். மேலும் ரஜினியும் அப்பாவும் நீண்ட நாட்களாக நண்பர்கள் என்பதால் இதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இப்படத்தின் காதல் காட்சிகளும் 1940 காலகட்டத்தைப் போல கண்களை மட்டுமே வைத்து காட்சிப்படுத்தியிருந்ததால் இதை ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. 



இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பீர்களா? 


 
சிறந்த கதையம்சத்தோடு, எனக்கான நல்ல பாத்திரத் தோடு வரும் தமிழ் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். மேலும் வாய்ப்பு கிடைத்தால் ஏ.ஆர். முருகதாஸ் சார் இயக்கத்தில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். 





பாலிவுட்டில் பல நாயகிகள் இருந்தும், தமிழ் இயக்குநர்களுக்கு சோனாக்‌ஷி சின்ஹாவைப் பிடித்துப் போவதன் ரகசியம் என்ன?  



எனக்கும் தெரியவில்லை.. நான் இந்தியப் படங்களின் நாயகியாகத்தான் என்னைப் பார்க்கிறேன். ‘தபாங்க்’ படம் அனைத்து தரப்பினரிடமும் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தது. சல்மானின் ரசிகர்களுக்கு என்னையும் பிடித்துப் போனது. அதைப் போல ஒரு தொடக்கம் முக்கியம் என நினைக்கிறேன். தொடக்கம் நன்றாக இருந்தால் அனைத்து வகையான மக்களுக்கும் உங்களைப் பிடித்துவிடும். 


ரஜினி 60 வயதைத் தாண்டியவர், நீங்கள் இளம் நடிகை. படப்பிடிப்பில் உங்கள் இடையிலான கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது? சல்மான், அக்‌ஷய் குமாருடன் நடித்தது போலத்தான் இருந்ததா? 


 
ரஜினியிடம் நிறைய மரியாதை உள்ளது. ஒவ்வொரு நாயகர்களுடன் நடிக்கும் விதமும் மாறுபடும். நான் அக்‌ஷய் குமாருடன் நடிப்பது போல சல்மானுடன் நடிக்க முடியாது. அதேபோல சல்மானுடன் நடித்தது போல ரஜினியுடன் முடியாது. ஓவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். ரஜினி சீனியர் என்பதால் படப்பிடிப்பில் ஒரு மரியாதையான சூழலே நிலவியது. 



தமிழ் படத்தில் நடிப்பதற்கும், இந்திப் படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? 

 
தமிழில் அனைத்தும் வேகமாக, நேரத்துக்கு நடக்கிறது. நேரத்தைக் கடைப்பிடிப்பதில் தமிழ் சினிமாவுக்கு நிகரில்லை! 


thanx - the hindu

0 comments: